தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு (அக்டோபர் 17) சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இன்று (அக்டோபர் 18) வியாசர்பாடி பகுதியில் நடந்த பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், ”சென்னை மாநகர பகுதிகளில் நேற்று இரவு அதி கனமழை பெய்துள்ளது. குறிப்பாக வட சென்னை பகுதிகளான கத்திவாக்கம், திருவொற்றியூர், பிராட்வே, பிரகாசம் சாலை போன்ற பகுதிகளில் 35 சென்டிமீட்டர் பெய்துள்ளது. அதாவது, 350 மில்லிமீட்டர் போன்ற மழைப்பொழிவு ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இது வெறும் ‘மிக கனமழை’ மட்டுமல்ல. இது ‘அதி கனமழை’ என்ற பிரிவில் அடங்கும்.
நேற்று இரவு முழுவதும் எங்களுடைய மொத்த குழுவும் களத்திற்கு வந்தோம். 15,000 களப்பணியாளர்களும் பணியில் ஈடுபட்டனர். உயர் அலுவலர்களான ஆணையர் முதல் துணை ஆணையர், இணைய் ஆணையர் என எல்லோரும் களத்தில் இருந்தோம்.
பொதுப்பணித்துறை அமைச்சரும் எங்களுடன் ஆய்வில் இருந்தார்.
பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி இருந்தது. இன்று காலை 6 மணிக்குள் பெரும்பாலான பகுதிகளை கிளியர் செய்துவிட்டோம். 22 சுரங்கங்கள் உள்ளன. அதையும் தற்காலிகமாக அடைத்து வைத்து வேலை செய்து பின்னர் வாகன போக்குவரத்துக்காக திறந்து வைத்திருக்கிறோம்.
இன்னும் சென்னை மாநகரத்தில் தண்ணீர் சூழ்ந்த இடங்கள் என ஒரு 7 இடங்கள் இருக்கின்றது. இப்போது நாம் இருப்பது கணேசபுரம் சுரங்கப்பாதை. இங்கே வந்து ஒரு பெரிய பாலத்துக்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது.
இதுதான் இந்த ஏரியாவோட லோவஸ்ட் பாயிண்ட். மண்டலம் 6க்கும் மண்டலம் 4க்கும் இடையில உள்ள எல்லை.
இந்த எல்லையில் இதுதான் கடைசி தாழ்வான பகுதி. இதில், ஸ்டீபன்சன் ரோடு எப்போதும் தண்ணீர் தேங்கும் பகுதியாகும்
இந்த தண்ணீரை வடிப்பதற்காக 225 எலக்ட்ரிக்கல் மோட்டார், 225 ஹெச்பி எலக்ட்ரிக்கல் மோட்டார், 100 ஹெச்பி குதிரைத்திறன் போன்ற இரண்டு பம்ப் மோட்டார்ஸ், டிராக்டர் பவுண்ட் மோட்டார்ஸ்ஆகியவற்றை பொருத்தி வேலை செய்து கொண்டு இருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும் அவர், 17ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை இரவு நேரங்களிலும், அதிகாலையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இது குறிப்பாக, சூப்பர் எல் நினோ வருடம். ஆகவே இந்த வருடம் அதிகமாக மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்றவாறு நாங்கள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.
இருப்பினும், சில தாழ்வான பகுதிகளில்—குறிப்பாக மழைநீர் வடிகால்களின் கொள்ளளவு குறைவாக உள்ள இடங்களில்—சூழ்நிலையைச் சமாளிக்க மோட்டார்களையும் பம்புகளையும் பயன்படுத்துவது முற்றிலும் அவசியமாகும்.
அப்படி வேலை செய்யும் நேரத்தில் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இரவு நேரங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களுக்கு போகக் கூடாது என்று எச்சரிக்கைவிட்டிருக்கிறோம். மின் சாதனங்கள் அல்லது மின்மாற்றிகள் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். ஆற்றங்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
நேற்று இரவு செய்த வேலை காரணமாக சென்னை சிட்டி இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
முதலமைச்சர் இந்த மழைக்காலத்துக்கு முன்பே இரண்டு கூட்டங்களை நடத்தினார். நேற்றைய தினமே ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தார்” என்று கூறினார்.
