”காப்பீட்டுத் திட்டத்தை புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து அமல்படுத்துவதால், தமிழகம் முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கிறார்கள்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (பதிவு எண்: 133 / 21 மாநில மையம்) மாநில தலைவர் லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த மூன்று தினங்களாக புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்து வருகின்றன.
இது தொடர்பாக மருத்துவமனையில் விசாரித்த பொழுது., கீழ்க்காணும் விபரங்களை தெரிவித்தனர்.
அதாவது, அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை யுனைடெட் இந்தியா நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது.
முந்தைய திட்டத்தில் யுனைடட் இந்தியா நிறுவனம், எம் டி இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இத்திட்டத்தை அமல்படுத்தி வந்தது.
தற்போது எம்டி இந்தியா நிறுவனம் அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ், வீடால் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் இந்தியா என்ற நிறுவனங்கள் மூலம் இத்திட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
காப்பீட்டுத் திட்டத்தை புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து அமல்படுத்துவதால், தமிழகம் முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
