சென்னைக்கு அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை- வானிலை ஆய்வு மையம் ‘வார்னிங்’

Published On:

| By Mathi

Chennai-Rain-New warning

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று (அக்டோபர் 18-ந் தேதி) பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று (அக்டோபர் 17-ந் தேதி) மாலை தொடங்கி இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. திடீரென மேகங்கள் திரண்டு, மேகவெடிப்பைப் போல மழை வெளுத்து வாங்கியதால் சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ADVERTISEMENT

பெரம்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. மணலி, ராயபுரம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றன. சாலைகளில் சாய்ந்த மரங்களை அகற்றுதல், தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரவு முழுவதும் ஈடுபட்டனர்.

பாரிமுனையில் 36.34 செ.மீ மழை

சென்னையில் நேற்று ஒரே இரவில் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.34 செ.மீ. மழை பதிவானது. கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ., எண்ணூரில் 21.58 செ.மீ., சைதாப்பேட்டையில் 17.02 செ.மீ., ஐஸ் ஹவுஸ் பகுதியில் 13.86 செ.மீ. மழை பதிவானது. சென்னை மாநகராட்சியின் 39 இடங்களில் பதிவான மழையின் சராசரி அளவு 8.64 செ.மீ. ஆகும்.

ADVERTISEMENT

இவ்வளவு கனமழை கொட்டிய நிலையில், இன்று காலை தென் சென்னையின் பல பகுதிகளில் மழை ஓய்ந்து வெயில் அடித்து வருகிறது.

சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணிக்கு புதிய மழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னலின்போது பொதுமக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மரங்களுக்கு அடியிலும் மின்கம்பங்கள் அருகிலும் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மின்னல் நேரங்களில் திறந்தவெளிகள், நீர்நிலைகள், உயரமான பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் இருப்பவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share