சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 18-ந் தேதி) அதிகாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் நேற்று (அக்டோபர் 17-ந் தேதி) மாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக வடசென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது.
வடசென்னையின் கத்திவாக்கத்தில் 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும், அதில் ஒரே மணி நேரத்தில் மட்டும் 14.8 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார். மேலும் நடப்பு வடகிழக்குப் பருவமழையில் தமிழகத்திலேயே முதல் முறையாக 30 செ.மீ. மழை சென்னையில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 12.45 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு முறை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மழையால் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடும். சாலைகள் வழுக்கக்கூடும். சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே சென்னையில் மழை மேகங்களின் நகர்வு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள புதிய பதிவில் கூறியிருப்பதாவது:
தென்சென்னையில் கடுமையான மழையை ஏற்படுத்திய அடர்த்தியான மேகங்கள் தற்போது மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்த மேகங்கள் மத்திய சென்னை வழியாக மீண்டும் வடசென்னை நோக்கிச் செல்கின்றன.
ஏற்கெனவே கனமழை பெய்த பகுதிகளில் மீண்டும் ஒரு சுற்று கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக மத்திய சென்னை மற்றும் வடசென்னையின் சில பகுதிகளில் மீண்டும் மழையின் தீவிரம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
இது ஏற்கெனவே தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும். எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மழை தொடர்ந்து பெய்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏற்கெனவே கனமழை பெய்த பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
