சென்னையில் கனமழை.. 220 நிவாரண மையங்கள், 110 சமையல் கூடங்கள் தயார்.. 15 மண்டலங்களின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

Published On:

| By Mathi

Chennai rain-Help Line No

சென்னையில் மிக அதிகமான கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 220 நிவாரண மையங்கள், 110 சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளது.

சென்னையில் நேற்று (அக்டோபர் 17-ந் தேதி) பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக வடசென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை மற்றும் சூப்பர் எல் நினோவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் உள்ளிட்ட சேவைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவும், வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் தேங்கும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும், மழை தொடர்பான புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

சென்னையில் 220 நிவாரண மையங்களும், 110 சமையல் கூடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்படும் மக்களை அருகிலுள்ள நிவாரண மையங்களுக்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழையின்போது மரங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்றவும், மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தால் மின்சாரத்தைத் துண்டித்து விபத்துகளைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் படகுகளையும், அவற்றை இயக்குபவர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தனித்தனி தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share