கொல்கத்தா துர்கா பூஜையில் பெரும் துயரம்.. திடீர் மழையால் கூட்ட நெரிசல்.. 17 பேர் பலி

Published On:

| By Mathi

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜையின்போது திடீரென மழை பெய்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவின் சோர்பாகான் பகுதியில் உள்ள முக்தாராம் பாபு தெருவில் 91-வது ஆண்டாக துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான துர்கா பூஜை பந்தலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று (அக்டோபர் 17-ந் தேதி) மாலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் பந்தலுக்கு வெளியே நின்றிருந்தவர்கள் மழையில் நனையாமல் இருக்க உள்ளே செல்ல முயன்றனர். அதே நேரத்தில் பந்தலுக்குள் இருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை.

குறுகலான பாதையில் இருபுறமும் மக்கள் முண்டியடித்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.

ADVERTISEMENT

பந்தலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் படிக்கட்டுகளிலும் மக்கள் விழுந்தனர். பந்தலின் இரும்புக் கட்டமைப்பில் ஒரு பகுதி இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் வெறும் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்க முயன்றனர். காயமடைந்தவர்கள் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்துக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சோர்பாகான் துர்கா பூஜை பந்தலில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பிரதமர் மோடி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேற்குவங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share