அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் முதல்வர் விஜய் அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 58-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் விஜய், அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த உரையாடலின் போது, சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றிக்கு அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளைத் பகிர்ந்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, இந்த இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இடைத்தேர்தலுக்கு பின்னர் பாமக தவெக கூட்டணியில் இணையும் என செய்திகள் பரவி வந்த நிலையில் சவுமியா அன்புமணி மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்றைய தினம் பிறந்த நாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல ஆண்டுகள் சிறந்த ஆரோக்கியத்துடன் மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.
டிடிவி தினகரன் தனது வாழ்த்து செய்தியில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மதிப்பிற்குரிய அன்புமணி ராமதாசுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புமணி ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.
