தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும்,துல்லியமான தகவல்களோடும் சட்டமன்றத்தில் சவுமியா அன்புமணி பயன்படுத்துகிறார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து பாமக தேர்தலை சந்தித்தது. தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். எம்எல்ஏவாக பொறுப்பேற்றது முதல் தனது தொகுதி சார்ந்த பிரச்சனைகளை புள்ளி விபரங்களுடன் பேசுவது மற்றும் காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை, மதுவிலக்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகளையும் சட்டப்பேரவையில் தொடர்ந்து எழுப்பி வருகிறார். குறிப்பாக மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் கருத்தை விமர்சித்த சவுமியாக அன்புமணியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சட்டமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட் 1) மகளிர், மதுவிலக்கு, மாற்றுத்திறனாளி மற்றும் வேளாண்மை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று எம்எல்ஏ சவுமியா அன்புமணி உரிய புள்ளி விபரங்களுன் வாதங்களை முன் வைத்தார். இந்நிலையில் சவுமியா அன்புமணியின் பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தனது எக்ஸ் பதிவில், “Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி
சவுமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
