தமிழகத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுத்ததையும் டாஸ்மாக் விற்பனையும் தவறான முறையில் ஒப்பிட கூடாது என சவுமியா அன்புமணி பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பேசிய பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி, கிராமப்புறங்களுக்குப் போதுமான பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை. தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் சுமார் 350 கிராமங்கள் உள்ள நிலையில், ஐந்து பெரிய பணிமனைகள் இருந்தும் வெறும் 345 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் எத்தனை கிராமங்களுக்கு இந்தப் பேருந்துகள் செல்லும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காலை 6 மணிக்குச் செல்லும் ஒரே பேருந்து, மாலை 6 மணிக்குத்தான் திரும்புவதால் பெண்கள் எங்குமே வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், பேருந்துகளில் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
தர்மபுரியில் பழைய பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பேருந்து நிலையம் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் தனித்தனியாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். பாமக உள்ளிட்ட கட்சிகள் நடத்திய போராட்டத்தின் காரணமாகக் குறிப்பிட்ட பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. எனினும், புதிய பேருந்து நிலையம் ஊருக்கு வெளியே இருப்பதால் இரவு நேரங்களில் பாதுகாப்பாக வர இயலவில்லை. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய இடங்கள் நகருக்குள் உள்ள நிலையில், பேருந்து நிலையம் வெளியில் இருப்பதால் பொதுமக்கள் தினமும் ஆட்டோ மற்றும் பேருந்து கட்டணமாக ரூபாய் 50 வரை கூடுதலாகச் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் பல பெண்கள் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர். எனவே, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அனைத்துப் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும்; அங்கு வருகைப் பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும் என்றார்.
பெண்களுக்கு போக்குவரத்து சுதந்திரத்தைப் போன்று பொருளாதார சுதந்திரம் முக்கியம், அதேபோல் சொத்துரிமையும் முக்கியம். உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் இருந்தாலும், 20 சதவிகித பெண்கள் பெயரில்தான் சொத்து உள்ளது. இந்தியாவில் 20 சதவீத பெண்களுக்கு மட்டுமே அவர்கள் பெயரில் சொத்து உள்ளது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 1989-ல் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டுவந்தார். தேசிய அளவில் இச்சட்டம் 2005-ல் தான் அமலுக்கு வந்தது. இருப்பினும், சொத்துரிமை வழங்கப்பட்டதே தவிர அதை முழுமையாக அனுபவிக்கும் உரிமை கிடைக்கவில்லை. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பறிப்பதில் டாஸ்மாக் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீபாவளி 2025-ல் ரூ. 789.95 கோடியும், பொங்கல் பண்டிகையின்போது (ஜனவரி 12 முதல் 16 வரை) ரூ. 725.56 கோடியும், புத்தாண்டு தினத்தன்று மட்டும் ரூ. 100 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. இந்த காசு எங்கிருந்து வருகிறது. இது பெண்களிடம் இருக்க வேண்டிய காசு. அவர்கள் வீட்டு பீரோவில் இருக்க வேண்டியது.
பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும், வீடு கட்டுவதற்காகவும் சேமித்து வைக்கும் குடும்பத்துப் பணம் அனைத்தும் டாஸ்மாக்கிற்கே செல்வதால் அவர்களுக்கு எவ்வாறு பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்கும்?
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஆர்ட்டிகல் 47ன் படி மாநில அரசுக்கு மதுவை விற்பனை செய்யவே உரிமை இல்லை. மருந்து தேவைகளுக்காக மட்டுமே மது விற்பனை இருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, குடிப்பதற்கான உரிமையும் மக்களிடம் இல்லை, விற்பதற்கான உரிமையும் அரசிடம் இல்லை; சாராயம் என்பது அடிப்படை உரிமை அல்ல, தண்ணீரும், சாப்பாட்டும்தான் அடிப்படை உரிமை.
பாமக நடத்திய சட்டப் போராட்டத்தால்தான் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் 3,321 மதுக்கடைகளும் மூடப்பட்டன. போதை மதுப்பழக்கதால் நடக்கும் சாலை விபத்துகள் தமிழகத்தில்தான் அதிகம். இளம் விதவைகள் தமிழகத்தில்தான் அதிகம்.
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் ஒரே ஒரு கையெழுத்து போட்டு பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்தது போல, தற்போதைய அரசும் மதுவிலக்கு என்பதை ஒரு கொள்கையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பெண்களின் பாதுகாப்பிற்காக 20 கூடுதல் போக்சோ நீதிமன்றங்களை அமைக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், முதல்வர் தலைமையிலான அரசு பெண்கள், இளைஞர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் 717 மதுக்கடைகளை குறைக்க உத்தரவிட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்டாலும், ஒயின்ஷாப்களை மூட வில்லை. ஒவ்வொரு ஆண்டும் டார்கெட் வைத்து விற்பனை செய்தனர். ஒரு பக்கம் பெண்களுக்கு உரிமை கொடுத்து விடலாம் என்று சட்டம் போட்டு கொண்டே மறு பக்கம் பெண்களுக்கு உரிமை கொடுத்தால் தானே பிரச்சனை,.. காசு இருந்தால் தானே உரிமைகள் வரும். அதனால் டாஸ்மாக் கடைகளும் வருமான இலக்குகளும் அதிகரிக்கப்பட்டன என்றார்.
அமைச்சரின் பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உணவுத்துறை அமைச்சரான இவர் தவறான கருத்தைத் தெரிவிக்கக் கூடாது என்றார். டாஸ்மாக் துறை இலக்கு நிர்ணயித்து இயக்கப்படுவது இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் 603 மதுக்கடைகள் மூப்பட்டன. அதிமுக ஆட்சியிலும் கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் வருமானம் எதனால் அதிகரித்தது என்றால் விற்பனை விலை அதிகரித்ததால் தான் வருமானம் அதிகரித்தது. தமிழகத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுத்ததையும் டாஸ்மாக் விற்பனையும் தவறான முறையில் ஒப்பிட கூடாது என தெரிவித்தார்.
