சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் பேச்சுக்கு கே.என்.நேரு பதில்

Published On:

| By Pandeeswari Gurusamy

Ramesh Nehru

கடந்த ஆட்சி காலங்களில் மல்லாச்சி கிராமத்தினுடைய ஒரு அடிப்படை வசதிகூட செய்யாமல் ஸ்தம்பித்து இருந்தது என்ற அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்..

சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 31) மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ், ” முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், பணிகள் ஸ்தம்பித்து இருக்கிறது என்றார். அதற்கு அரசியல் தாண்டி ஒரு நிகழ்வை பதிவு செய்ய விரும்புகிறேன். திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மல்லாட்சிபுரம் என்ற ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு சுமார் 300 பேர் வசிக்கிறார்கள். அண்ணனுக்கு அந்த கிராமம் தெரிந்திருக்கும். அந்த கிராமத்தில ஒருபுறம் ரயில்வே கேட் இருக்கும், இன்னொருபுறம் அடர்ந்த காடு போன்ற பகுதி இருக்கும்; அவர்களுக்குப் பாதை கிடையாது. அந்த மக்கள் ரயில்வே கேட்டை 6 மணிக்கு மேல் கடந்தால் ரயில் விபத்தில் சிக்குவார்கள். அந்த அடர்ந்த காடு பகுதிக்குள் உள்ளே புகுந்து வெளியே வர வேண்டும் என்றால், 6 மணிக்கு மேல் பாம்பு கடியில் இறக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல், அந்த 300 பேருக்குச் சரியான கழிப்பிட வசதிகூட கடந்த ஆட்சியாளர்கள் செய்து தர முடியவில்லை. இன்னொன்று, குடிக்கத் தண்ணீர் கிடையாது; அந்தத் தொட்டி (டேங்க்) சரியாக இல்லை, தொட்டியைக் சுத்தம் செய்யவில்லை.

ADVERTISEMENT

கழிப்பிட வசதி கேட்டதற்கு ஊருக்கு வெளியே, அந்த இடத்திற்கு வெளியே மண்ணில் ஒரு திண்டு மட்டும் கட்டி ஒரு குழாயைப் போட்டுக்கொடுத்து இருக்கிறார்கள். இன்றைக்கும் அந்தப் பகுதி மக்கள் வெட்டவெளியில் அந்த குழாயில் குளிக்கக்கூடிய நிலைமையில்தான் ஸ்ரீரங்கத்தில் அந்த மல்லாச்சிபுரம் கிராமம் இருந்தது. அந்த மக்கள் தேர்தலில் யாரும் ஓட்டுக் கேட்டே உள்ள வரக்கூடாது என்று சொல்லிப் போராட்டம் செய்துகொண்டிருந்தார்கள், தேர்தலுக்கு முன்பு. ஒரே ஒரு வாய்ப்பாக நம்முடைய முதலமைச்சரின் மீது வைத்த நம்பிக்கைக்காக எனக்கு மட்டும் அந்த ஊருக்குள் போவதற்கான அனுமதியை கொடுத்தார்கள். ஊருக்குள்ள போனேன், அந்த மக்களின் பிரச்சினையைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

கடந்த ஆட்சி காலங்களில் அதிகாரமும், உள்ளாட்சியும் அனைத்தும் இவர்களிடம் இருக்கும்போது, அந்த கிராமத்தினுடைய ஒரு அடிப்படை வசதிகூட ஸ்தம்பித்துதான் நின்றது என்பதை நான் பதிவு செய்கிறேன். இன்றைக்கு நம்முடைய ஆட்சி அமைந்த உடன், உடனடியாக அவர்களுக்கான கழிப்பறை வசதிக்கும், அவர்களுக்கான குளிக்கும் இட வசதிக்கும், அவர்களுக்கான குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிக்கும் உடனடியாக ஒப்புதல் அளித்து, இன்றைக்கு அந்தப் பணிகள் முதலமைச்சரின் உத்தரவின்படி நடந்து கொண்டிருக்கின்றன. இங்கே எந்தப் பணிகளும் ஸ்தம்பிக்கவில்லை. நாம் உண்மையில் கள நிலவரத்தை நேரில் போய் பார்த்து தெரிந்துகொண்டு அந்த மக்களுக்குச் செய்கிறோமா இல்லையா என்பதுதான் விஷயம். அது கடந்த ஆட்சி காலத்தில் நடைபெறவில்லை என்பதுதான் கள நிதர்சனம். அதை மட்டும்தான் இந்த அவையில் நான் பதிவு செய்ய விரும்புறேன்.” என்றார்.

ADVERTISEMENT

அமைச்சரின் குற்றச்சாட்டு பதில் அளித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அந்த கிராமம் முன்னள் ஊராட்சியில் இருந்தது. இப்போதுதான் அது நகராட்சியோடு இணைக்கப்பட்டிருக்கிறது, இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை. டேங்கில் தண்ணீர் இல்லை என்கிறார். 10 லட்சம் லிட்டர் டேங்க் அங்கு கட்டப்பட்டிருக்கிறது, உங்களுக்கு நீங்கள் போகும்போதே தெரியும் உங்கள் தொகுதிதான் அது. இங்கு மல்லாச்சிபுரம் கிராமத்திற்கு நடைபாதை இல்லை என்கிறார். இங்கு மல்லாச்சிபுரத்தில் ஆரம்பித்து லாலாபேட்டை வரை இருக்கிற எல்லா கிராமங்களுக்கும் ரயில்வே லைன் தாண்டித்தான் போகும். இங்கு இயற்கையாக ரயில்வே லைன் இருக்கிறது. எனவே அங்கு கீழ்பாலம்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. மல்லாச்சிபுரத்தில் இருந்து சுற்று பகுதிகளில் நகரமாகிவிட்டது. இந்த பின்பக்கம் வழியாக மல்லாச்சிபுரம் வருவதற்கு வழி இருக்கிறது. காவேரி கரையின் இருக்கிறது அந்த ஊரு. அதனால் கழிப்பிட வசதி என்பதெல்லாம் இப்போது நீங்கள் சொல்கிறீர்கள், வேலை எல்லா பணிகளும் நடைபெறுவதாகச் சொன்னார். நீங்கள் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறீர்கள், மாவட்ட ஆட்சி அலுவலத்திலே பார்த்தேன், அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தி இருக்கிறீர்கள், நகராட்சியில் என்ன பணி நடந்திருக்கிறது என்று ஆய்வு செய்து அதற்குப் பிறகு பேசுங்கள்.” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share