கள்ளச்சாராயம் விற்று, மனம் திருந்தியோருக்கான மறுவாழ்வு நிதி ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 31) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்ந்த ஆறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.
- கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டுச் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதியானது ரூ.50,000த்தில் இருந்து ரூ.1,00,000மாக உயர்த்தி ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.
- கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கு ரூபாய் 2 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
- இ-களால் இணையவழி செயலில் ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் செயல்பாடுகள் ரூபாய் 1 கோடியே 69 லட்சம் செலவில் முழுமையாக மின்னணு மயமாக்கப்படும்.
- கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவதற்காக வழங்கப்படும் நிதியானது ரூபாய் 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
- கள்ளச்சாராயம், போலி கலப்பட மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சமூக ஊடகங்கள் வாயிலாக ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வலுவான மெத்தனால் பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்படும்.
டாஸ்மாக் நிறுவனம் சார்ந்த அறிவிப்புகள்
டாஸ்மார்க் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும், பணியாளர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், அரசு பொறுப்பேற்ற நூறு நாட்களில் நான்கு முறை சங்கப் பிரதிநிதிகளுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
அதன் அடிப்படையிலும், டாஸ்மார்க் நிர்வாகக் குழுவின் முடிவின் அடிப்படையிலும்,
23 ஆண்டுகளாகத் தொடர்ந்து டாஸ்மார்க் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு 1.9.2026 முதல் கீழ்க்கண்டவாறு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
இந்த ஊதிய உயர்வின் நோக்கம், டாஸ்மாக்கில் முறைகேடாக எம்.ஆர்.பி. மீறல் (MRP Violation) நடந்து கொண்டிருப்பதைத் தடுக்கும் வண்ணம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. 23 ஆண்டுகளாக ரூ.2,000-ல் ஆரம்பித்து கடைசி வரை ரூ.14,000 வரைதான் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
- அந்த வகையில், மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 33,023 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் செலவு ரூ.486.90 கோடி ஆகும்.
- டாஸ்மாக் பணியாளர்களுக்குப் பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும்.
- டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று சீருடைகள் மற்றும் துணி மற்றும் தையல் செலவுகளுக்காக ரூ.6000 வழங்கப்படும்.
- டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் தூய்மைப் பணி மற்றும் வசதிகளை உறுதி செய்ய, மாதந்தோறும் மாநகரக் கடைகளுக்கு ₹5,000, நகராட்சி, பேரூராட்சி கடைகளுக்கு ரூபாய் 4,000, கிராமப்புறக் கடைகளுக்கு ரூ. 3,000 சில்லறை செலவினங்களை மேற்கொள்ள வழங்கப்படும்.
- டாஸ்மார்க் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்குச் சுழற்சி முறையில் 8 மணி நேரப் பணி ஒதுக்கீடு, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு ஆகியவை வழங்கப்படும்.
- டாஸ்மார்க் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் தகுதியுடைய 250 பணியாளர்களைச் சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
