தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட்31 ) 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், ” தமிழகத்தின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து மின் நுகர்வை கருத்தில் கொண்டு மின் உற்பத்தி, மின் தொடர் அமைப்பு மற்றும் மின் விநியோக துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய உலக தரம் வாய்ந்த மின்கட்டமைப்பு அவசியமாகிறது.
தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு மற்றும் கட்டமைப்பு
மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற முக்கிய மின் நுகர்வு மையங்களுக்கு திறம்பட கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. இதற்காக அரசு தொலைநோக்குடன் 33,066 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (Tamil Nadu Transmission Improvement Scheme) செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 15,000 கிலோமீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படுவதனுடன் ஏற்கனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்.
தூத்துக்குடியில் New Super Critical Thermal Power Station அமைத்தல்:
தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து காற்றாலை, சூரிய மின்சாரம் மற்றும் மின்கல சேமிப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்றாலும் இந்த ஆற்றல் ஆதாரங்கள் சமச்சீராக கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இருந்து பெறப்படும் உபரி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து வைத்து இரவு நேரங்களில் தேவைக்கேற்ப பயன்படுத்தும் தொழில்நுட்பம் தற்போது நிறுவப்பட்டு வருகிற போதிலும் தற்போதுள்ள கட்டமைப்பு அனைத்து நேரங்களிலும் உள்ள மின் தேவையை பூர்த்தி செய்ய இயலாது.
எனவே மின் தேவை அதிகமாக இருக்கும் காலங்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்க அனல் மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆகவே இதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவது மிகவும் அவசியமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிய அனல் மற்றும் நீர் மின் நிலையங்கள் அமைப்பதற்கு பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து அதிகரித்து வரும் மின் சுமையை திறம்பட கையாள்வதற்கும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் மின் உற்பத்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும்.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையத்தில் தற்போது தலா 210 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன் 1,050 மெகாவாட் ஆகும். இந்த அலகுகள் 1979 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டுக் வருகின்றன. நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்கு பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க தற்போதுள்ள அலகுகளை படிப்படியாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஐந்து 210 மெகாவாட் அலகுகளை படிப்படியாக மாற்றி அமைத்து தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் மொத்தமாக 1600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு New Super Critical Thermal Power Station 20,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மின் பகிர்மானமான கட்டமைப்பு (Distribution மேம்பாட்டுப் பணிகள்):
சென்னை மாநகரின் மின் தேவையை பூர்த்தி செய்ய வலுவான மின் பகிர்மான கட்டமைப்பு அவசியமாகும்.
சென்னையில் பருவ மழைக்காலங்களில் வெள்ளம் தொடர்பாக ஏற்படும் மின் தடைகளையும் கோடைக்காலங்களில் அதிக மின் தேவை காரணமாக ஏற்படும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 36 புதிய 33/11 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின் மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டு காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின் கடத்திகள், பில்லர் பாக்ஸ், சர்க்யூட் பிரேக்கர்கள் உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் 1,762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்தார்.
