தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கற்பனையில்கூட பிரதமர் எண்ணம் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மாறியுள்ளது. தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்ற நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து திமுக விலகுவதாக அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்காலக் கூட்டணி வியூகங்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் மூத்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோரும், “முதல்வர் விஜய் பிரதமராகக் கூடும்” என்று வெளிப்படையாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஜோசப் விஜய் “இன்றைய முதல்வர், நாளைய பிரதமர்” என்று அமைச்சர் ராஜேஸ்வரி கூறியிருந்த நிலையில், நேற்றும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொருத்திருந்து பாருங்கள் என தன் கருத்தை உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே, தவெக தரப்பிலிருந்து வெளியாகும் இது போன்ற கருத்துகள் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே கவனம் ஈர்த்துள்ளதுடன், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினருக்குத் தர்மசங்கடமான சூழலையும் உருவாக்கியுள்ளது. இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நாசுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், “நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய அமைச்சர்கள் பதவியில் நீடிக்க மாட்டார்கள். எல்லா இடங்களிலும் நாம் சொல்ல வேண்டிய கருத்து இதுதான். கட்சி இல்லாமல் இந்த ராஜேஷ்குமார் ஒன்றுமே கிடையாது; இந்த இயக்கம்தான் பெரிது. இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ, நாளைக்கு அந்தப் பதவியை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று சொன்னால், அடுத்த நிமிடமே சென்று விடுவோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய அளவிலே ‘இந்தியா’ கூட்டணிக்குத் தலைமை தாங்குவது காங்கிரஸ் கட்சி. அதனாலே அந்த அணியின் வேட்பாளராக ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட முடியும். இதற்கு வேறு எந்த மாற்று ஏற்பாட்டுக்கும் வாய்ப்பே இல்லை. அதைப் பற்றி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கற்பனையில்கூட அந்தவாறு எண்ணம் இருக்காது.. இல்லை.. என்பதுதான் என்னுடைய கருத்து.
அமைச்சர்கள் எல்லாம் பேசும்போது நினைத்த மாதிரி பேசக் கூடாது. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு, அகில இந்திய அளவில் வரப்போகிற தேர்தலில் ராகுல் காந்திதான் ஒரு பிரதான (Prominent) வேட்பாளராக இருக்க முடியும். அதனால், அதைப் பற்றி இவர் பேச வேண்டிய அவசியமே கிடையாது. இனிமேல் இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்” என்றார்.
