நாங்கள் எல்லாம் சோபா வாங்க கூடாதா? – திமுகவை நோக்கி கேள்வி எழுப்பிய அமைச்சர் வன்னி அரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vanni arasu

எல்லோருக்கும் சோபா என்பதுதான் திராவிட மாடல். திமுக ஆதரவாளர்கள், பாஜகவை எதிர்ப்பதை விட விடுதலைச் சிறுத்தைகளை எதிர்ப்பதுதான் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார்கள் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

சென்னை கவிக்கோ மன்றத்தில் சீர்மை பதிப்பகம் ஒருங்கிணைத்த 1501-வது மீலாது நபி விழா நேற்று (30.08.2026) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்டு பேசுகையில், “விடுதலைச் சிறுத்தைகளைப் பார்த்து, ‘பதவிப் பகுசுக்காக இவர்கள் போய் சேர்ந்தார்கள்’ என்பது எத்தனை அயோக்கியத்தனம் என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். நேற்றைக்கு வரை நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இருந்தோம்; எந்த இலக்கை நோக்கி நாங்கள் அங்கே செயல்பட்டோம் என்பதுதான் முக்கியம். அன்று முதல் இன்று வரை பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கும்பலைத் தமிழ்நாட்டில் நாங்கள் நுழைய விடமாட்டோம், கால் ஊன்ற விடமாட்டோம். அவர்கள் மிக மோசமான சனாதனப் பேர் வழிகள்; அவர்களை அழித்தொழித்துவிட்டுத்தான் எங்களது அடுத்த வேலை என்று எங்களது தலைவர் முழங்கினார். அந்த அரசியலை நாங்கள் உள்வாங்கி இன்று செயல்படுகிறோம். பாஜக, ஆர்எஸ்எஸ் தான் எங்கள் இலக்கு..எங்களோடு இருந்த நண்பர்கள்தான் அவர்கள்.

ADVERTISEMENT

நாங்கள் எடுத்த இந்த முடிவு என்பது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கானது, தமிழ் தேசிய அரசியலின் நலனுக்கானது, தமிழர் உரிமைகளின் நலனுக்கானது. கடந்த முறை அரசு எப்படி செயல்பட்டதோ அதே கொள்கை கோட்பாட்டோடுதான் இந்த அரசும் செயல்படுகிறது. இருமொழிக் கொள்கையில் ஏதாவது மாற்றியுள்ளோமா? இந்தியாவில் எஃப்.சி.ஆர்.ஏ (FCRA) சட்டத் திருத்தத்தை வேறு எந்த மாநில அரசும் சட்ட சபையிலும் ஒரு தீர்மானம் போட்டு ஒன்றிய அரசை கண்டித்த வரலாறே இல்லை; தமிழ்நாட்டில் மட்டும்தான் அது நடந்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் அதை எதிர்த்து தனி தீர்மானமாக கொண்டு வந்தார். வக்பு வாரியத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழக அரசு கண்டித்து தீர்மானம் போட்டது. அதேபோல் எஃப்.சி.ஆர்.ஏ சட்டமும்..

கேட்டால், ‘இது சோபா மாடல், அது திராவிட மாடல்’ என்பார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் சட்டசபையில் ‘சோபா’ என்று சொன்னாலே பேசக்கூடாது என்கிறார்கள். கிராமத்தில், நாங்கள் ஒரு வெள்ளைச் சட்டை போட்டால் ‘என்ன, இவன் புதுசாக வெள்ளைச் சட்டை போட்டிருக்கிறான்’ என்பார்கள். வீடு, கார் வாங்கினால் ‘இவனுக்கெல்லாம் வந்த வாழ்க்கையைப் பார்’ என்பார்கள். எங்கள் வீட்டில் புதிதாக ஒரு சோபா வந்தால், ‘இவனுக்கு வந்த வாழ்க்கையைப் பார்’ என்பார்கள். இந்தப் பார்வைக்கும் அந்தப் பார்வைக்கும் என்ன வித்தியாசம் என்று நான் கேட்கிறேன். நாங்கள் வாங்கக் கூடாதா? எல்லோருக்கும் சோபா என்பதுதான் திராவிட மாடல். நீங்கள் மட்டும் வைத்துக் கொண்டீர்கள் என்றால்.. அதையும் ஒரு உள்நோக்கத்தோடு பரப்புகின்றனர். எல்லோரையும் உட்கார வைக்க வேண்டும், எல்லோருக்கும் துண்டு போட வேண்டும்; அதுதான் சமத்துவம். உங்கள் வீட்டில் மட்டும் சோபா இருக்கிறது, எங்கள் வீட்டில் நாங்கள் சோபா வாங்கினால் உடனே அதற்கு ஒரு கதை கட்டுவதா? ஒரு சமத்துவத்தை நோக்கிப் போக வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

ADVERTISEMENT

திமுக ஆதரவாளர்கள், பாஜகவை எதிர்ப்பதை விட விடுதலைச் சிறுத்தைகளை எதிர்ப்பதுதான் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார்கள். சமூகநீதித்துறையில் என்ன நடக்கிறது, தலைவர் என்ன பேசுகிறார் என்றுதான் பார்க்கிறார்கள். உனது எதிரி அங்கே இருக்கிறான்; நாங்கள் இங்கு புதிதாக அமைச்சராக இருக்கிறோம். நாங்கள் 100 நாட்களில் என்னென்ன செய்திருக்கிறோம் என்று சாதனை பட்டியலிட்டுள்ளோம். ஆனால், அதை விட்டுவிட்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் கும்பலைத் தொடுவதில்லை. முழுநேர வேலையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், சமூக நீதித்துறை அமைச்சரின் அலுவலகத்தையும் கேமரா வைத்துக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், உங்கள் நோக்கம் என்ன? எதை நோக்கி திமுக செல்கிறது? பகை முரண், நட்பு முரண் தெரியவில்லையா? நாங்கள் எங்காவது ஒருமுறை விமர்சனம் செய்திருக்கிறோமா? 10 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்தும் கூட்டணியில் இருந்தாலும், அந்தப் பத்தாண்டு காலத்தில் எங்களது செயல்பாடுகளையும் போராட்டங்களையும் எங்கும் நாங்கள் விட்டதில்லை. வேங்கைவயலுக்காகப் போராடியவர்கள் நாங்கள்; சாதி ஒழிப்பு களத்தில் நின்றவர்கள் நாங்கள்” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share