தமிழக சட்டசபையில் ‘ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது’ என்று பேசிய சோழவந்தான் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையாவைக் கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசு, மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா, தமிழர்களின் பாரம்பரியத்தின், கலாச்சாரத்தின், நாகரிகத்தின், வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று அநாகரிகமாக, கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது இளைஞர்களிடையே, பொதுமக்களிடையே மிகுந்த கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. த.வெ.க.-வினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்டம் வரலாற்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் 2014-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாக தடை விதித்தது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்தது என்பதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் வரலாற்று சிறப்பு மிக்க அறப் போராட்டத்தை நடத்தினர். அப்போதைய அதிமுக அரசு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 21.1.2017 அன்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.
அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அப்போதைய அரசு, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.
2017-ஆம் ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்கு நல அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 18.5.2023 அன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கலாம் என்றும் இறுதித் தீர்ப்பு அளித்தது. இவ்வாறு ஜல்லிக்கட்டு போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு, அதிமுக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களே காரணம் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்நிலையில், ‘தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை சீரழிக்கிறது’ என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அநாகரிகமாக, கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும், மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தாந்தோன்றித் தனமாக செயல்பட்டு வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசையும் கண்டித்து, அதிமுகவின் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்களின் சார்பில் 3.9.2026 – வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ‘அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில்’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி. ராஜன் செல்லப்பா தலைமையில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கி. மாணிக்கம், முன்னிலையில் நடைபெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
