ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு : தவெக எம்.எல்.ஏ விளக்கம்!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 28) பேசும்போது சோழவந்தான் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ கருப்பையா, “இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவருக்கு அதிமுக, திமுக,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா தான் பேசியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறுகையில், “இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் அதுதான் நமது நோக்கம்.

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியம் மிக்கது, தொன்மை மிக்கது. எத்தனை ஆண்டுகளுக்கு முன் அதனை நமது சமூகம் கொண்டு வந்தது என அனைவருக்கும் தெரியும்.

ஜல்லிக்கட்டை பாதுகாக்க வேண்டும் என்று கூறுவதில் நானும் ஒருவன்.  2008, 2009, 2010, 2011 ஆகிய நான்கு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு தடைப்பட்டு போய்விட்டது.

ADVERTISEMENT

இந்த தடைபட்ட காலத்தில் , நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த பிறகு முன்னாள் முதல்வரிடம் கடிதம் கொடுத்தேன். அதன்படி உயர்நீதிமன்றத்தை நாடி 84 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தியதே நான்தான். 

இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும், கூண்டுக்குள் அடைக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் சொன்னேனே தவிர, தவறான உள்நோக்கம் கிடையாது” என்றார்.

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

நீங்கள் ஜல்லிக்கட்டை முடக்க பார்க்கிறீர்கள் என்று அதிமுக கண்டனம் தெரிவித்திருக்கிறதே? 

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசாங்கத்தின் போது உயர் நீதிமன்றத்தை நாடி மீண்டும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக ஜல்லிக்கட்டை நடத்தியது நான்தான் . எனவே இதில் முடக்கவோ தடைபோடவோ எதுவும் இல்லை.

ஜல்லிக்கட்டு நடக்கும் போது பாருங்கள் இளைஞர் சமுதாயமே மிகவும் சந்தோஷமாக இருக்கும். அவர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

சர்க்கரை ஆலை 10 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. நான் எம்எல்ஏவாக இருந்தபோது சர்க்கரை ஆலை நன்றாக செயல்பட்டது. அங்கு ஜல்லிக்கட்டு அரங்கத்திற்காக செலவழிக்கப்பட்ட பணம் சர்க்கரை ஆலைக்கு செலவு செய்யப்பட்டிருந்தால், 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் நன்றாக இருந்திருக்கும். அவர்களின்  குடும்ப வாழ்வாதாரமும் உயர்ந்திருக்கும் என்பதுதான் என்னுடைய நோக்கம். 

தவெக தலைவர் இளைஞர்களை நம்பி இருக்கிறார். அவர்களை கொச்சை படுத்துவோமா? அவர்களை சுதந்திரமாக விடுங்கள் என்று சொல்கிறோம். 

ஸ்பெயின் போன்ற ஐரோப்பா நாடுகளில் ஒரு கட்டிடத்திற்குள் விட்டு அதைப் பிடிப்பது போன்று ஜல்லிக்கட்டு அல்ல. அது நம் முன்னோர்கள் வளர்த்து வைத்துள்ள பாரம்பரியம், தமிழர்களின் உணர்வு அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்” என்று கூறினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share