முதல்வராக ஒழுங்காக முடிவெடுக்கத் தெரியாத விஜய், மோசடி பொய் பிரசாரத்தின் பலனாக பிரதமராக நினைக்கலாமா?

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

2029 Vijay Prime Minister campaign based on fraud and lies

ராஜன் குறை

நடிகர் விஜய் ஒரு சில இலட்சியங்களால் தூண்டப்பட்டு, ஒரு வலுவான கட்சி அமைப்பை உருவாக்கி, தொண்டர்களுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நட த்தி, கொள்கை விளக்க மாநாடுகள் நடத்தி, பிரசாரம் செய்து, கட்சிக் கொள்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் செய்து, அவை மூலம் மக்களை அணிதிரட்டி ஆட்சிக்கு வரவில்லை என்பது வெளிப்படையான உண்மை. சுருங்கச் சொன்னால் அவர் அரசியல்வாதியாக மாறவேயில்லை.

மாறாக, அவரது திரைப்பிம்ப கவர்ச்சியை பயன்படுத்தி, அவரைப் பார்க்க வரும் ரசிகர் கூட்ட த்தை காட்சிப்படுத்தி, புஸ்ஸி ஆனந்த்திற்கு ரசிகர் மன்றங்களை கட்சி அமைப்பாக மாற்றும் பணியை அவுட் சோர்ஸிங் செய்து, ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ், ஜெகதீஷ் நடத்திய ரூட் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செல் பேசி என்ற செல்போனில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் செயலிகள் மூலம் மிகைத்தகவல்களை, பிம்பங்களை பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்துள்ளார்.

ADVERTISEMENT

செல்போன் என்பது இளம் தலைமுறையினரின் உடல் உறுப்பாக கடந்த பத்தாண்டுகளில் மாறியுள்ளது. அதிலும் யூடியூப், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ், டெலிகிராம் என பல செயலிகள் மக்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்து அவர்கள் சிந்தனையை ஆக்கிரமிக்கும் ஆற்றலுடன் விளங்குகிறது. தன்னுடைய செல் போனில் வரும் செய்தியை, ரீல்ஸ்களை, தங்களுக்கு வரும் அந்தரங்க தகவலாக நினைக்கிறார்கள். அவற்றை பகிர்வதில் பெருமையடைகிறார்கள். அது பொய்யா, நிஜமா என்று பகுத்தறிவதில் எந்த ஆர்வமும் இருப்பதில்லை. சுவாரசியமாக இருந்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள்.

பொதுமன்றத்தில் ஒவ்வொரு ஊடக வடிவம் தோன்றும்போதும் இது நடந்துள்ளது. அச்சு ஊடகம் தோன்றியபோதும் பல பொய்த் தகவல்களை எளிதில் பரப்பும் சாதனமாக விளங்கியது. காந்தியைக் குறித்தே பல கட்டுக்கதைகள் வட மாநிலங்களில் எழுதப் பட்டன. அவருக்கு தெய்வீக சக்தி இருக்கிறது; அவரை இகழ்ந்தவர்களுக்கு விபத்துகள் நடந்தன, அவரை வணங்குபவர்களுக்கு பல நன்மைகள் கிடைத்தன என்றெல்லாம் உள்ளூர் பத்திரிகைகளில் எழுதப்பட்டதை வரலாற்றாசிரியர் ஷஹித் அமீன் பதிவு செய்துள்ளார்.

ADVERTISEMENT

ஹிட்லரின் அரசில் பிரசாரத்திற்கு பொறுப்பேற்றவர் ஜோசப் கோயபல்ஸ். அவர் மிகையான தகவல்களை, பொய் பிரசாரத்தை, மூளைச் சலவையை செய்வதில் வல்லவராக இருந்ததால் “கோயபல்ஸ் பிரசாரம்” என்பதே ஓரு சொலவடையாக மாறியது. அதே போன்று இத்தாலிய பாசிசத்தை உருவாக்கிய முசோலினியும் பிம்ப கட்டமைப்பில் வல்லவர். நவீன மக்களாட்சி அரசியலில் உருவான தலைவர்கள் பலரது ஆளுமையும் பிம்பங்களும் அரசியலை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

ஆபிரஹாம் லிங்கன் முதல் மாசே துங் வரை பலரும் தலைமை பிம்பங்களாக மக்களால் கொண்டாடப்பட்டனர். தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் கொள்கை வகுப்பால், கோட்பாட்டுத் தெளிவால் தங்கள் பேச்சாற்றலால்,  ஆகிருதியால் மக்கள் மனங்களில் கோலோச்சியவர்கள். சிலைகளாகவும், படங்களாகவும் மக்கள் பரப்பில் நிலைபெற்றவர்கள்.

ADVERTISEMENT

அது போன்ற தலைமைப் பிம்ப உருவாக்கத்திற்கும், பிரசாரத்திற்கும், விஜய் பிம்ப உருவாக்கத்திற்கும், பிரசாரத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால் விஜய் திரைநட்சத்திர கதாநாயக பிம்பமாக பிரசாரம் செய்யப்படுகிறாரே தவிர அரசியல் தலைவராக அல்ல. அரசியலில் இதுவரை அவர் எந்த குறிப்பட்ட தனிச் செயல்பாட்டையும் செய்யவில்லை. கொள்கையோ, கோட்பாடோ பேசவில்லை.

சரியாகச் சொன்னால், அவரால் அரசியல் சிந்தனைகளை உள்வாங்கி வெளிப்படுத்த இயலுவதில்லை. பிறர் எழுதிக்கொடுக்கும் உரைகளைப் படிக்கிறார். தவறான தகவல்கள் இருந்தாலும் படிக்கிறார். கேள்வி கேட்டால் பதில் சொல்ல இயலுவதில்லை. எப்படி திரைப்பட நடிகராக பிறரால் இயக்கப்பட்டாரோ அப்படி இயக்கப்படுகிறார். கட்சி துவங்கிய பிறகான இரண்டரை ஆண்டுக்காலத்தில் ஒருமுறைகூட அவரால் ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்க இயலவில்லை. சட்டமன்றத்தில் மெளன பொம்மையாக அமர்ந்திருக்கிறார். அவர் துறை சார்ந்த கேள்விகளுக்குக் கூட பதிலளிப்பதில்லை. பேசினால் தவறாகத்தான் பேசுகிறார்.

சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையே கூடாது என்று தீர்மானம் போட்டுவிட்டு, அமித்ஷா எதிரில் படிக்கும்போது நியாயமாக தொகுதி மறுவரை செய்யவேண்டும் என்று மாற்றிப் படிக்கிறார். தான் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அருகதை உள்ளவர் என்றால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக ஒரு வார இடைவெளியில் பேசுவாரா என்பதை யாரும் உரத்துக் கேட்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவருக்கு சுயசிந்தனை என்பதே சாத்தியமில்லையோ என்றுதான் கருத வேண்டியுள்ளது.

முடிவெடுக்கும் ஆற்றல்

அதிகாரம் இருந்தால் யாரும் எந்த முடிவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுத்துவிடலாம். அது வெறும் எதேச்சதிகாரம். உண்மையான முடிவெடுக்கும் ஆற்றல் என்பது பல்வேறு கோணங்களை அலசி சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பதுதான். அப்படி எடுக்கும் முடிவுகளை சட்டமன்றத்திலும், பொதுமன்றத்திலும் விளக்கிப் பேசுவதுதான் தலைமைப் பண்பு. அத்தகைய தலைமைப் பண்பு இல்லாதவர்கள் முதல்வர் பதவி வகிக்க அருகதை அற்றவர்கள்.  

விஜய் அரசு பதவியேற்றபின் எடுத்துள்ள மிக முக்கியமான முடிவு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டதுதான்.

இதில் நாம் முக்கியமாக ஒரு அரசியல் தத்துவ அடிப்படையை கருத்தில் கொள்ள வேண்டும். அரசு என்பது நிலையானது; தொடர்ச்சியானது. அது சட்ட த்தின் ஆட்சி. மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பான்மை கொண்ட கட்சிகள் அரசாங்கத்தை அமைக்கலாம்; ஆட்சி செய்யலாம். அவை எடுக்கும் முடிவுகள், அரசாணைகளாக மாறிய பின் அரசின் முடிவுகள். ஆட்சி மாற்றம் நடந்தபின் முந்தைய முடிவை மாற்ற விரும்பினால், அது அரசு தன் முடிவை மாற்றிக்கொள்வதாகத்தான் பொருள். அப்படி செய்யும்போது அது எங்கள் கட்சியின் முடிவு என்று மட்டும் சொல்ல முடியாது. ஒரு அரசின் முடிவாக ஏன் எடுக்கப்படுகிறது என்பதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

நடிகர் விஜய் பரந்தூர் பிரச்சினையில் சட்டமன்றத்திலோ, பொதுமன்றத்திலோ எந்த விவாதமும் நிகழ்த்தாமல் தான் தோன்றித்தனமாக முடிவு செய்துள்ளார். அதனை புரிந்துகொள்ள ஒரு சில கேள்விகளை எழுப்பி அரசின் தரப்பில் கூறப்பட்டவற்றை தொகுத்துப் பார்ப்போம்.

முதல் கேள்வி சென்னைக்கு ஒரு புதிய விமான நிலையம் தேவையா என்ற கேள்வி. ஆமாம், தேவை என்றுதான் சொல்கிறார் விஜய். அப்படியானால் பரந்தூரில் அதை அமைக்காவிட்டால் எங்கே அமைப்பீர்கள் என்றால், இனிமேல் மாற்று இட த்தைத் தேர்வு செய்கிறோம் என்கிறார். ஏற்கனவே பத்தாண்டுகளாக பல இடங்களை பரிசீலித்து முயற்சித்து இறுதியில் இந்த இடம்தான் சாத்தியமானது என்று முந்தைய அரசாங்கம் கூறுகிறது. அப்படியிருக்கும்போது மீண்டும் வேறு இடம் தேடுவோம் என்பதை சரியான நிலைபாடாக ஏற்க முடியவில்லை. அப்படி ஒரு இட த்தை அடையாளப்படுத்திவிட்டு அறிவித்திருந்தால்கூட விவாதிக்கலாம்.

இப்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தையே விரிவாக்கம் செய்தால் போதுமா என்று கேட்டால், போதாது என் கிறார். ஆனால் ஐந்தாவது முனையம் அமைப்போம்;அது அடுத்த பத்தாண்டுகளுக்கு தேவையான போக்குவரத்து தேவைகளை கவனித்துக் கொள்ளும் என்று சொல்கிறார். அப்படி ஐந்தாவது முனையம் அமைப்பதற்கான திட்டவடிவம், சாத்தியப்பாட்டு அறிக்கை (feasibility report) எதுவும் அரசின் கைவசம் உள்ளதா என்றால் அதுவும் இல்லை.

அப்படியானால் எந்த மாற்று ஏற்பாடும் திட்டவட்டமாக இல்லாமல் ஏற்கனவே துவங்கப்பட்ட திட்டம் கைவிடப் படுகிறது என்று பொருள். அப்படி அவசரமாக திட்ட த்தைக் கைவிடுவதற்கான காரணம் என்ன என்பது அடுத்த கேள்வி. அதற்கு விஜய் கூறும் பதில் பரந்தூர் பகுதியில் உள்ள ஏகனாபுரம் கிராமத்து விவசாயிகள் திட்ட த்திற்கு எதிராக போராடினார்கள். அதற்கு அவர் பதவிக்கு வருவதற்கு முன்னால் ஆதரவு தெரிவித்தார் என்பதுதான்.

இதில் அடங்கியுள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதே தவறு என விஜய் கொள்கை முடிவு எடுக்கிறாரா என்பதுதான். ஏனெனில் வேறு எங்கு விமான நிலையம் வந்தாலும், அல்லது தொழிற்சாலைகளோ, அரசு அலுலவகங்களோ, குடியிருப்புகளோ உருவானாலும் விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருக்கும். ஏகனாபுரம் விவசாயிகள் கோரிக்கை போல அங்குள்ளவர்களும் கோரினால், அரசு அந்த திட்டங்களையும் கைவிடுமா என்று கூற வேண்டும்.

விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு தருவது, வாழ்வாதாரங்களை உருவாக்குவது, வேலை வாய்ப்பு என பல அம்சங்களில் கவனம் செலுத்தி சிறப்பாகச் செய்யலாம். ஆனால் விவசாய நிலங்கள் அப்படியே தொடர வேண்டும் என்ற நிலைபாட்டை எடுக்க முடியுமா என்பது கேள்வி. ஒருவேளை அடுத்த தலைமுறையில் அவர்களே நிலங்களை விற்றுவிட்டு வேறு தொழில்களுக்கு செல்ல மாட்டார்கள் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் கிடையாது.

இதை ஒட்டிய மற்றொரு கேள்வி, ஏற்கனவே தி.மு.க ஆட்சியில் கையகப்படுத்தப்பட்ட 1800 ஏக்கர் நிலத்தை அரசு என்ன செய்யப் போகிறது என்பதாகும். அதற்கு அந்த நிலத்தை வேறு தொழில்களுக்கு பயன்படுத்துவோம் என தவெக அமைச்சர் கூறுகிறார். முதலில் சட்ட ரீதியாக அப்ப டி செய்ய முடியுமா என்பது ஒரு கேள்வி. இரண்டாவது கேள்வி அப்படிச் செய்தால் நாளாவட்ட த்தில் நீர்நிலைகளும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படாதா, பிற விவசாய நிலங்களும் பாதிக்கப்படாதா என்ற கேள்வி. இந்த அம்சத்திலும் விஜய்க்கு எந்த சிந்தனைத் தெளிவும் இல்லையென்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

அடுத்து சூழலியல் காரணங்கள். அரசின் கைவசமிருக்கும் நிலப்பகுதியில் பெருமளவு நீர்நிலைகள் உள்ளன என்பது பிரச்சினை. ஒன்று, அதனால் விமான நிலையத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு. இரண்டு, அந்த நீர்நிலைகள் நீர்பிடிப்பு பகுதிகளாக இருப்பதால், அவை இல்லாமல் மழை வரும்போது வெள்ளப்பெருக்கு பிற குடியிருப்பு பகுதிகளை பாதிக்கும் என்ற சாத்தியம்.

இந்த சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பதைக் குறித்து ஆராய ஓய்வுபெற்ற அதிகாரி மச்சேந்திரநாதன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை தி.மு.க அரசு வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அந்த அறிக்கை பரந்தூர் திட்டம் நல்லதல்ல என்று கூறியிருந்தால் அதை இப்போது விஜய் அரசு வெளியிடலாமே? அந்த அறிக்கையின் அடிப்படையில் திட்ட த்தைக் கைவிடுகிறோம் என்று கூறலாமே? அப்படி ஒருவேளை அந்த அறிக்கை திட்ட த்தை கைவிடும்படி கூறவில்லை என்றால், இந்த அரசு வேறொரு குழுவை அமைத்து சூழலியல் பாதிப்புகளை ஆராயலாமே? அல்லது ஒன்றிய சூழலியல் அமைச்சகத்திடம் கருத்து கேட்கலாமே?

குறைந்தபட்சம் அரசு திட்ட த்தை எதனால் கைவிட நினைக்கிறது என்று ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பித்து, அதனை சட்டமன்றத்தில் விவாதித்திருக்கலாமே? அதற்குத்தானே சட்டமன்றம் இருக்கிறது? அவ்வாறு செய்யாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? எவ்வளவு பொறுப்பற்ற செய்கை இது? மாநில பொருளாதார வளர்ச்சியின் உயிர்நாடியான பிரச்சினையில் இப்படியா முடிவெடுப்பது?

அரசியல் எதிர்ப்பு என்ற அளவில் தி.மு.க கட்சியினர் பரந்தூர் பகுதியில் நிலங்களை வாங்கியுள்ளார்கள். அதன் மதிப்பை அதிகரிக்கத்தான் பரந்தூர் விமான நிலையம் வேண்டுமென வலியுறுத்துவதாக தவெக அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால் விஜய் அவரது ஆந்திர மாநில தொடர்புகளுக்கு உதவும் பொருட்டுதான் இந்த விமான நிலைய திட்டத்தை கைவிடுகிறார், தமிழ்நாட்டின் நலனுக்கு துரோகம் செய்கிறார் என்று பிறர் கூறுகிறார்கள்.   

நடிகர் விஜயால் இவ்வளவு முக்கியமான பிரச்சினையில் கூட தன்னுடைய நிலைபாட்டை விரிவாக விளக்க முடிவதில்லை. தி.மு.க சார்பில் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் மிகச்சிறப்பாக, தெளிவாக ஏன் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது, எதனால் அந்த புதிய விமான நிலையம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு, பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்றியமையாத து என்பதை விளக்குகிறார்கள்.

தி.மு.க கட்சியினர் கூறும் வாதங்களுக்கு விஜயால் பதில் அளிக்க இயலாது என்பதால், பிற தவெக அமைச்சர்கள் அவதூறுகளைப் பேசி திசைதிருப்புகிறார்கள். விஜயின் தவறான முடிவால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சத்தை பல்வேறு தரப்பினரும் வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் விஜயின் ஆதரவு தளம் அவரது திரைப்பிம்ப கவர்ச்சியால் உருவானது என்பதால் இந்த விவாதங்களெல்லாம் அவருடைய வெகுமக்கள் ஆதரவைக் குறைக்காது என்று தவெக கட்சியும், விஜய் அரசுக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் நினைக்கின்றன. அதே காரணத்தினால்தான் இப்போது விஜய் அடுத்து பிரதமராவதற்கான பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

வரலாறு காணாத மோசடி பொய் பிரசாரம்

தமிழ்நாட்டு தேர்தல் பிரசாரத்தில் தவெக இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸர்களை, வாட்ஸ் அப் குழுக்களை பயன்படுதியது போலவே இப்போது வட மாநிலங்களில், வட கிழக்கு மாநிலங்களில் விஜய் குறித்தும், அவர் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் அப்பட்டமான, கேவலமான பொய் பிரசாரம் யாராலோ செய்யப்படுகிறது. விஜய் பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்தார் என்பதிலிருந்து, பாலியல் குற்றவாளிகளை என்கெளண்டர் செய்து கொன்றுவிடுகிறார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்துபோனால் கட்டணமே செலுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றெல்லாம் பல்வேறு கட்டுக்கதைகள் பிரசாரம் செய்யப்படுகின்றன.

இந்த மோசடி பிரசாரம் குறித்து பல வாரங்களாகவே இந்தியா டுடே ஆங்கில சானல், புதிய தலைமுறை தமிழ் சானல் உள்ளிட்ட பல தொலைகாட்சி ஊடகங்களிலும், ஆனந்த விகடன் பத்திரிகையிலும், பல்வேறு யூடியூப் சானல்களிலும் விரிவாக பதிவு செய்யப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்களிலுள்ள வலைத்தளப் பதிவாளர்கள் தாங்களாகவே கற்பனை செய்து இவ்விதமான செய்திகளைப் பரப்புகிறார்கள் என்பது சாத்தியமற்றது. நிச்சயம் யாரோ சிலர் இந்த மோசடி பிரசாரத்தை ஒருங்கிணைக்கிறார்கள் என்றுதான் கருத முடியும்.

இதனை விஜய் ஆதரவாளர்கள், தவெக கட்சியினர்தான் செய்கிறார்கள் என்பதை இன்னும் யாரும் ஆராய்ந்து நிரூபிக்கவில்லை. ஆனால் விஜய் இந்த அருவருப்பான செயல்பாடு குறித்து இதுவரை எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. தவெக கட்சியினரும் எந்த புகாரையும் சைபர் கிரைம் துறையிடம் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் எங்களுக்கும் இந்த பிரசாரங்களுக்கும் தொடர்பில்லை என்ற அறிக்கை கூட வெளியிடவில்லை.

அதற்கு மாறாக எங்கள் தலைவர் புகழ் வடமாநிலங்களிலும் பரவிக்கொண்டிருக்கிறது என தவெக அமைச்சர்கள் பெருமையாகக் கூறுகிறார்கள். அவர் பிரதமராக வேண்டும் என்றும், ஆகிவிடுவார் என்றும் கூறத் தொடங்கியுள்ளார்கள். சட்டமன்றத்திலேயே கூறுகிறார்கள். இதை ஏதோ தலைவரை மகிழ்விக்க பேசுகிறார்கள் என்று கருதிவிட முடியவில்லை.

காரணம், இந்தியா டுடே-சி வோட்டர் நிகழ்த்திய தேசத்தின் மன நிலை, Mood of the Nation என்ற கருத்துக் கணிப்பில் மோடி, ராகுல் காந்திக்குப் பிறகு மூன்றாவது அதிக ஆதரவைப் பெற்ற பிரதமர் வேட்பாளராக விஜய் குறிப்பிடப் படுகிறார். நாடு முழுவதும் 9% பேர் விஜய் பிரதமர் பதவிக்கு உகந்தவர் என்று கூறியுள்ளனர். இதில் 18% பேர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களெல்லாம் தமிழ்நாட்டு வாக்காளர்களைப் போல அவர் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் என்று கூற முடியாது. செல்போன் மோசடி பிரசாரத்தினால்தான் அவர் பெயரைக் குறிப்பிடுகிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது.

தமிழ் தொலைகாட்சி விவாதங்களில் தவெக-வை ஆதரித்து பேசுபவர்கள், யாரோ விஜய்க்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பினால், அதனால் அவருக்கு ஆதரவு உருவாகுமென்றால் அவர் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள். அவருக்கு அது நல்லதுதானே என்று கூறுகிறார்கள். எந்த அளவு அரசியல் அறம் என்பது பாழ்பட்டுப் போயுள்ளது என்பதற்கான சான்றாகவே இது போன்ற பேச்சுக்கள் அமைந்துள்ளன.

இப்படி யோசிப்போம். ஒருவேளை விஜய்க்கு எதிராக இதேபோல பொய் பிரசாரம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். விஜய் ஆட்சியில் குழந்தைகள் பட்டினியால் சாகின்றன, பயிர்கள் நாசமாகி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், பெண்களெல்லாம் பட்டப் பகலிலேயே தாக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் பொய்ச் செய்திகளை பரப்பினார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உடனே தவெக புகார் கொடுக்காதா? அந்த செய்திகளைப் பரப்புபவர்களை கண்டுபித்து கைது செய்யாதா? தமிழ்நாட்டிலேயே அரசை விமர்சித்து செய்தி போடுபவர்களை கைது செய்தார்களே?

அப்படியானால், தன்னைப் புகழ்ந்து எவ்வளவு மோசடியான பொய் செய்தியை பரப்பினாலும், கட்டுக் கதைகளை உருவாக்கினாலும் அரசியல் ஆதாயம் கருதி அதனை விஜய் கண்டிக்க மாட்டார், நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றுதானே பொருள்? அப்படியானால் அவருடைய மறைமுக ஒப்புதலுடன் தான் இந்த பிரசாரங்கள் நடக்கின்றன என்றுதானே பிறர் கருதுவார்கள்?

நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்த நூறு நாட்களிலேயே தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள். குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி அதிகரிக்கின்றது. தொழில் முதலீடுகள் வரத்து கடுமையாகக் குறைந்துள்ளது. அவர் எடுத்துள்ள ஒரே முக்கியமான முடிவான பரந்தூர் விமான நிலையத் திட்ட த்தை கைவிடும் முடிவை முற்றிலும் பொறுப்பற்ற முறையில் எடுத்துள்ளார்.

எந்த பிரச்சினையிலும் தன் நிலைபாட்டை, அரசின் நிலைபாட்டை விளக்கிப் பேசும் ஆற்றலோ, தலைமைப் பண்போ அவருக்கு அறவே இல்லை. இந்த நிலையில் அவர் பிரதமராக வேண்டும் என்று அமைச்சர்கள் பேசுவதும், மோசடி பிரசாரத்தினால் அவருக்கு வட மாநிலங்களில் ஆதரவு இருப்பதாக க் கருத்துக் கணிப்பு கூறுவதும் தமிழ்நாட்டை, அதாவது அதன் பகுத்தறிவுப் பண்பாட்டில் பெருமை கொள்பவர்களை, வெட்கித் தலைகுனிய வைக்கிறது என்றால் மிகையாகாது.

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share