கோவையில் டிஜிட்டல் நிதி மையம் கோயம்புத்தூர் பின்டெக் ஹப் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 31) 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், “செமிகண்டக்டர் துறையில் அதிக அளவு முதலீட்டினை ஈர்க்கவும், இத்துறையில் நமது மாநிலத்தின் பங்கினை கணிசமான அளவு உயர்த்திடும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் மேனுபேக்சரிங் பார்க் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
இப்பூங்காவில் செமிகண்டக்டர் துறையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த ஆர்&டி ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் 2000 கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும் சுமார் 5000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும்.
டிஜிட்டல் நிதி மையம்
நிதி தொழில்நுட்ப பின்டெக் புதுமைகளுடன் டிஜிட்டல் நிதி சேவைகளை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ மூலம் கோவையில் டிஜிட்டல் நிதி மையம் கோயம்புத்தூர் பின்டெக் ஹப் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
உலகத்தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும். இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிதி மற்றும் நிதி நுட்பத்துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்தவும் உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
பன்முனை சரக்கு போக்குவரத்து மையம்
2026-27ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் பன்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க், உலர்துறைமுகங்கள் அமைத்து முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மாவட்டப்பகுதிகளில் முக்கிய உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ மூலம் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பன்முனை சரக்கு போக்குவரத்து மையம் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் ஹப் ஒன்று அமைக்கப்படும்.” என தெரிவித்தார்.
