“இதையெல்லாம் தெரிந்து கொண்டு பேசுங்க’ அமைச்சர் விக்னேஷ்க்கு உதயநிதி பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இருந்தே இந்த விருதுகளை கொடுத்து கொண்டுதான் வருகிறார்கள். அதனால் போதை தடுப்பிற்கு நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் விக்னேஷ் கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட அமுதன் கொலை விவகாரம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘எங்களது ஆட்சியில் போதைப்பழக்கத்தை ஒழிக்க ரூபாய் 264.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களது முன்னாள் முதலமைச்சரும், நீங்கள் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது இந்தத் தடுப்புப் பணிக்காக எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கினீர்கள் என்பதைப் பதிவு செய்யுங்கள்’ என்றார்.

ADVERTISEMENT

அதற்குப் பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தல் தடுப்புப் பணியைச் சிறப்பாக மேற்கொண்ட காவலர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நமது முதல்வர் விருதெல்லாம் வழங்கியுள்ளார். அந்த விருது எதற்காக என்றால், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தல் தடுப்பு நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்டதற்காக 15 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் விருது வழங்கியுள்ளார்.

அந்த 15 காவலர்களுமே எங்களது ஆட்சிக் காலத்தில் பல்வேறு வழக்குகளில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்டவர்கள் என்று அரசு அறிக்கையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற அந்த 15 காவலர்களும் எத்தனை முறை போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தார்கள், எத்தனை குற்றவாளிகளைக் கைது செய்துள்ளார்கள், எவ்வளவு நாட்கள் தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள் என்ற விவரங்கள் எல்லாம் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெளிவாக உள்ளது.

ADVERTISEMENT

போதைப்பொருள் தடுப்புக்கு எங்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அப்புறம் எதற்கு இந்தக்காவலர்களுக்கு முதல்வர் விருது கொடுத்தார்? அமைச்சர் சில கேள்விகளைக் கேட்கிறார்; அவர் கேட்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் நான்தான் பதில் சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இன்று நானும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாரும் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். சம்பந்தப்பட்ட அமைச்சர் இங்கு இருக்கிறார்; அவர் ஏன் இதற்குப் பதில் சொல்ல மறுக்கிறார் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ், 15 காவலர்களுக்கு சிறப்பு விருது கொடுத்தது பற்றி பேசினார். இது புதிய நடைமுறை கிடையாது. புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இருந்தே இந்த விருதுகளை கொடுத்து கொண்டுதான் வருகிறார்கள். அதனால் போதை தடுப்பிற்கு நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கஞ்சா உள்ளிட்ட பல பொருட்களைப் பறிமுதல் செய்தவர்களுக்கே இவ்விருது கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த 100 நாட்களில் அதைவிட அதிகமாகத் தமிழக வெற்றிக் கழக அரசு பறிமுதல் செய்துள்ளது. அதற்கான தரவுகளை நாங்கள் மானியக் கோரிக்கையின் போது வெளியிடுவோம்.” என்றார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: “தவறான தகவலை இங்குப் பதிய வைக்கிறீர்கள்! இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததே எங்களது தலைவர்தான். இத்திட்டம் கடந்த 2023-இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையெல்லாம் தெரிந்துகொண்டு பேசுங்கள்.”

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share