தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் அமர்ந்திருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
2029 தேர்தலில் பிரதமர் வேட்பாளர், முதல்வர் விஜய் என்று தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சராக இருக்கும் காங்கிரசைச் சேர்ந்த ராஜேஷ் குமார், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் இல்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து விலக தயார் என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் இன்று (ஆகஸ்ட் 31) எதிர்க்கட்சி வரிசையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி அருகில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் அமர்ந்திருந்தார்.
இது அவை உறுப்பினர்களிடையே பல்வேறு கேள்வியை எழுப்பிய நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “சட்டமன்ற தலைவராக தாரகை கத்பர்ட் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அவருக்கான இடம் முன்வரிசையில் மாற்றப்பட்டது” என்று கூறினார்.
இது தொடர்பாக அவையில் சுட்டிக்காட்டி பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “எங்கள் பக்கம் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா, தமீமுன் அன்சாரி, நித்யானந்தா ஆகிய மூன்று பேரையும் முன்னிருக்கையில் அமர வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஜேசிடி பிரபாகர், ”இப்போது எந்த கட்சியில், எந்த சின்னத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பதை வைத்துதான் இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து தாரகை கத்பர்ட் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறி அவரை முன் வரிசையில் அமர வைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர்.
அந்த அடிப்படையில் அவர் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார்.
நீங்கள் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி ஆகியோரை முன்வரிசையில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். இது பற்றி ஆய்வு செய்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் ”என்று பதிலளித்தார்.
முன்னதாக ஆளும் கட்சி பக்கம் மூன்றாவது வரிசையில் தாரகை கத்பர்ட் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
