சென்னையில் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “தூய்மைப் பணியாளர்கள் உண்மையிலேயே மிகவும் பாவம்; இறந்த நாய்க்குட்டி, ஆடு, மாடு போன்றவற்றை கையால் எடுத்துப் போட்டுவிட்டு, அடுத்த கணமே அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கிறது. தூய்மைத் தொழிலாளர்கள் கிடையாது, எங்களைப்பொறுத்தவரை அவர்கள் தூய்மை தேவதைகள். அவர்களுடன் இரண்டு முறை விரிவான மீட்டிங் நடத்தப்பட்டது. அதில் ஒருவர் என்னிடம் வந்து, “தள்ளுமுள்ளு போராட்டத்தில் என்னை பிடித்துத் தள்ளினார்கள்” என்று கையில் இருந்த காயத்தைக் காட்டினார். இதைத் தொடர்ந்து, உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை மூலம் பேசி, எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்தத் தூய்மை தேவதையின் மீதும் பலப்பிரயோகம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டோம்.
அவர்கள் போராடுவதற்கான இடத்தை தேடிக்கொண்டிருந்தனர். அவர்களது உரிமைக்காக ரிப்பன் பில்டிங்கில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்களை விமர்சித்து கடினமான, கசப்பான வார்த்தைகளைப் பேசினார்கள். அந்த வார்த்தைகளின் பின்னால் இருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதைத்தான் நாங்கள் பார்த்தோம். அவர்கள் யாரும் எதிரிகள் கிடையாது; அந்த உழைப்போர் உரிமை இயக்கம் என்பது நமக்குத் தெரிந்த இயக்கம்தான். அங்கு போராடும் தோழர்கள் மோகன், பாரதி ஆகியோர் நம்முடைய தோழர்கள்தான்; போராட்டக் களத்திலிருந்து வந்தவர்கள் தான் நாங்கள். இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல், வாரியத் தலைவர் லயோலா மணியை போராட்டக் களத்திற்கே சென்று ஆறுதல் சொல்ல அனுப்பினோம்.
குறிப்பாக, பணியின் போது உயிரிழந்த ஞானகுமார், மாலா, பார்த்திபன், அருண்ராஜ் ஆகியோருக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான உரிய ஆவணங்கள் தாட்கோ அலுவலகத்திற்கு 14.8.2026-ல் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கப் பரிசீலிக்கப்பட்டு வேலை வழங்கப்படுகிறது.
இதுவரை 93 இடங்களில் உடைகள் மாற்றும் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 107 இடங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் செப்டம்பர் 15-க்குள் எல்லா இடத்திலும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
மேலும் தேவைப்படக்கூடிய உபகரணங்கள், ஒரு நாளுக்கு ஒரு மாஸ்க் என்ற வகையில் கிட்டத்தட்ட 10 லட்சத்து 69 ஆயிரம் மாஸ்க்குகளும், அதேபோல் மாதிரி கையுறைகள் 15 நாட்களுக்கு இரண்டு ஜோடி என்ற அடிப்படையில் 1,18,899 கையுறைகளும் மண்டலங்கள் 4, 7, 8-ல் பணிபுரியக்கூடிய பணியாளர்களுக்கு வழங்கப்படும். இது இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கப்படும் .
“எங்களுக்கு எதுக்கு காலை உணவு? எங்களுக்கு அதை காசாவே கொடுத்து விடுங்கள்” என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கை மீதான உணவுக்கு பதிலாக உணவுப்படி வழங்குவது தொடர்பான ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலைப் பெற பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; மிக விரைவில் இது நிறைவேற்றப்படும்
தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் ஜி.ஓ. 62-ன் படி நாள் ஒன்றுக்கு ரூ.762 ஆக இருந்தது. அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் ரூ.832 என மாற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அமல்படுத்தப்பட்டு, தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 762 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்பட்ட 2026-2027-க்கான நாள் ஒன்றுக்கான ஊதியம் ரூபாய் 832 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நாம் மறுபரிசீலனை செய்து சுமூக முடிவு எடுக்கப்படும்.
முக்கியமாக, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 4, 7, 8-ல் பணிபுரியக்கூடிய தூய்மைப் பணியாளர்களில் இதுவரை 3,256 எண்ணிக்கையிலான எஸ்.எச்.ஜி. தூய்மைப் பணியாளர்கள் தாட்கோ மூலமாக முறையாகப் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் விடுபட்ட பணியாளர்களை இணைக்க வேண்டும். மருத்துவ எமர்ஜென்சி நமக்கெல்லாம் வருவதை விட அவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், விடுபட்டவர்களுக்காக ஒரு சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அரசு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நபர் ஒன்றுக்கு நான்கு என்ற எண்ணிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 9,512 தூய்மைப் பணியாளர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டு வருகிறது. ரெயின் கோட் நபர் ஒருவருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. மண்டலங்கள் 4, 7, 8 பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் பேட்டரி வாகனங்களுக்கு மாற்றாக 450 புதிய பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் கொள்முதல் செய்ய ஆணை பெறப்பட்டுள்ளதுடன், 300 வாகனங்கள் மண்டலங்களுக்கு வழங்கத் தயார் நிலையில் உள்ளன.
தூய்மைப் பணியாளர்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றில் மின்னணு பதிவேடு முறை நீக்கப்பட்டு, வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பாகப் போராடுகிறார்கள்; ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு, சம்பளத்துடன் மகப்பேறு கால விடுப்பு போன்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். மேலும், தமிழக முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்கின்றனர். துறை சார்ந்த அதிகாரிகளுடன் இது குறித்துக் கலந்து பேசி கருத்துருக்கள் பெறப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலமும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் போராடுவது அவர்களது உரிமை; அவர்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டியது எங்களது கடமை. இதில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” எனத் தெரிவித்தார்.
