தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்-க்கு இருக்கை ஒதுக்கப்பட்டது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில், எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்-க்கு இன்று இருக்கை ஒதுக்கப்பட்டது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரித்த நிலையில் இந்த இருக்கை மாற்றம் கவனம் பெற்றது.
ஆனால், சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக தாரை கத்பர்ட் தேர்வு செய்யப்பட்டதால் அவருக்கு முன்வரிசை இருக்கை ஒதுக்கப்பட்டது என்றார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், “சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான்.
சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இருக்கை மாற்றப்பட்டுள்ளது.
மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு மாண்புமிகு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம். செய்தியை செய்தியாகவே பாருங்கள்;
அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
