கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வியுற்றார்.
இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், ”கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
எனவே தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வில் இன்று (ஆகஸ்ட் 31) விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ”வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை சரிபார்க்க கோரி தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், அதாவது கடந்த மே 7ம் தேதியே விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை” என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் சார்பில், ”இந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தது அல்ல. எம்எல்ஏவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் பலர் வழக்கு தாக்கல் செய்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் திமுக தலைவர் ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் 2025 ஆம் ஆண்டு இதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் வழக்கை திரும்பப்பெற்று புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை திரும்ப பெற அனுமதி வழங்கினர்.
