திமுக மீது காங்கிரஸ் திடீர் பாசமழை: சட்டசபையில் தாரகை கத்பர்ட் பேசியது என்ன?

Published On:

| By Mathi

தமிழக சட்டப்பேரவையில் தாரகை கத்பர்ட் பேச்சு – திமுக காங்கிரஸ்

தமிழக சட்டசபையில் காங்கிரஸ் குழு தலைவர் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. இன்று (ஆகஸ்ட் 31) திமுகவுடனான “கூட்டணி காலம்” குறித்து பேசியது கவனம் பெற்றது.

திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே விஜய் ஆட்சி அமைக்க தவெக கூட்டணிக்கு தாவியது. இது திமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. விஜய் முதல்வரான நிலையில் அவரது அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம் பெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் 2029 தேர்தலில் பிரதமர் விஜய்தான் என தவெக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இந்தியா டுடே கருத்து கணிப்பும் 2029 பிரதமர் பதவி வேட்பாளர் ரேஸில் மோடி, ராகுல் காந்தியை தொடர்ந்து விஜய்யும் இருப்பதாக தெரிவித்தது. விஜய்க்கு 9.2 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் இந்தியா டுடே தெரிவித்தது.

இதனை காங்கிரஸ் ரசிக்கவில்லை. 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; இதனை தவெக ஏற்காவிட்டால் முதல்வர் விஜய் அமைச்சரவையில் இருந்து காங்கிரஸின் 2 அமைச்சர்களும் வெளியேறுவோம் என்று நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும், இந்தியா டுடே சர்வே முடிவுகளை முன்வைத்து தமது எக்ஸ் பக்கத்தில் குட்டிக் கதை ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

காங்கிரஸ்- தவெக இடையே மோதல் உருவாகி வரும் சூழ்நிலையில் தமிழக சட்டசபையில், காங்கிரஸ் குழு தலைவர் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ.வுக்கு ‘எதிர்க்கட்சி தலைவர்கள்’ வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையானது. ஆனால், “காங்கிரஸ் குழு தலைவராக” தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ”சமூக நலத்துறை, வேளாண் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு போன்ற மானியக் கோரிக்கை” மீது பேசிய தாரகை கத்பர்ட் திடீரென திமுகவுடன் நட்புக் கரம் நீட்டுவது போல பேசியது கவனம் பெற்றது.

ADVERTISEMENT

சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 31) காங்கிரஸின் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பின்வாசல் வழியாக, தமிழ்நாட்டில் ஆளுநர் மூலமாக ஆட்சி அமைக்கலாம் என்று இருந்ததை இந்த நாடே அறியும். காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டு மக்களிடம் எந்த மதவாத ஆட்சியும் நடக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தது.

மு.க.ஸ்டாலின், உதயநிதி

நம்முடைய அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், நான் வெற்றிபெற வேண்டும் என்று தன்னுடைய மகனை எங்களுடைய தொகுதிக்கு அனுப்பி என்னை வெற்றிபெறச் செய்து வைத்தார்.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி இங்கே வரக் கூடாது என ஸ்டாலின் நினைத்தார். அதற்கும் சேர்த்துதான் இன்றைக்கு தவெகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

திமுக- காங்கிரஸ் இணைந்து நடத்திய போராட்டங்கள்

திமுகவும் காங்கிரசும் அன்றைய கூட்டணி கட்சிகளும் சிறுபான்மை மக்களுக்காக, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்தோம் என்பதை நாடே அறிந்தது.

அதேபோன்று என்ஆர்சி (NRC), சிஏஏ (CAA) போன்றவற்றை மத்திய பாஜக அரசு கொண்டுவர முயன்ற போது, அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றோடு ஒன்றாக குரல் கொடுத்தோம். அந்த குரல் மீண்டும் ஒலிப்பதற்காக, பாஜகவுக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைந்தோம். இன்று எங்களுடன் முரண்பாடாக இருந்தாலும் கொள்கையில் எங்களுடன் சேர்ந்து இருக்கிறீர்கள் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்.

தொகுதி மறுவரையறை பிரச்சனையில் அன்றைக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாம் போராடினோம். அதேபோன்று நீட், தமிழ்நாட்டில் நுழையக்கூடாது என்பதற்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடினோம்.

இந்த போராட்டங்களுக்காகத்தான் நாங்களும் இன்றைக்கு தவெகவுடன் இணைந்து நிற்கிறோம். ஏனெனில் நீங்கள் நினைத்ததும் அதுதான்.. நாங்கள் நினைத்ததும் அதுதான்.

நாம் கொள்கை ரீதியாக ஒன்றாகவே இருந்தோம், இன்றைக்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே எங்களை பார்த்து முதுகில் குத்தி விட்டீர்கள் என்று தயவு செய்து இனியும் கூறாதீர்கள்.

திமுக கூட்டணியில் வலிகள்..

அதேபோல உங்களுடன் (திமுக) நாங்கள் கூட்டணியில் இருந்த போது வலிகளையும் சுமந்தோம். அப்போதும் ஒரே மனதுடன்தான் இருந்தோம். முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, ரோஜா போன்ற ஒரு மென்மையான குணத்தை- முகத்தைக் கொண்டவர். அவர் இந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்ட பொழுது, அன்றைய ஆட்சியில் இருந்தவர்கள் படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்பு விடுதலையான குற்றவாளிகளுக்கு என்ன நடந்தது என்பதை அனைவருக்கும் தெரியும். அது எங்கள் மனதில் இன்றளவும் ஆறாத வடுவாக இருக்கிறது.

காமராஜருக்கு மெரினாவில் இடம்..

அப்பொழுதும் நாங்கள் எங்களுடைய வலியை மறந்து தமிழ்நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் பேரியக்கம் உங்களுடன் சேர்ந்து நின்றது. பெருந்தலைவர் காமராஜர் இவ்வுலகை விட்டுச் சென்ற பொழுது, நாங்களும் மெரினாவில் கடற்கரையில் இடம் கேட்டோம், கிடைக்கவில்லை; அப்பொழுதும் நாங்கள் அதை தாங்கிக்கொண்டு சிரித்த முகத்துடன் சென்றோம் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் மிகவும் மதிக்கக்கூடிய ஒரு பெண்மணி நமது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார். அவர், “தமிழ்நாட்டின் இந்த லேடியடியா? குஜராத்தின் அந்த மோடியா?” என்று கேட்டார். ஜெயலலிதாவும் பாஜகவுக்கு எதிராக தன்னுடைய கடைசி மூச்சு வரை நின்றார்கள், அவர்களுடைய எண்ணமும் நிறைவேறுவதற்காகத்தான் நாங்களும் உங்களுடன் கூட்டணி சேர்ந்தோம் என்பதை நான் இந்த வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்பேத்கரும் நேருவும்

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய காங்கிரஸ் கட்சி, சுதந்திர இந்தியாவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மத சார்பின்மையை, சமூக நீதியை பாதுகாப்பதில் என்றும் முன்னணியில் நின்று போராடிக் கொண்டிருந்தது.

சுதந்திர இந்தியாவில் யாருக்கு அதிகாரம் கிடைக்கவில்லையோ.. எந்த சமூகம் ஒடுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தோ, அந்த சமூகத்தின் பிரதிநிதியாக இருந்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை- கட்சி ரீதியாக, முன்னாள் பாரத பிரதமர் நேருவுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமித்தார்.

அந்த அரசியலமைப்புச் சட்டம் தான் நம்முடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, சமூக நீதியை இன்றுவரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

இடஒதுக்கீடும் காமராஜரும்

1951-ஆம் ஆண்டு செய்யப்பட்ட அரசிய சட்ட முதல் திருத்தம் 15-வது விதியின்படி நான்காம் உட்பிரிவாக சேர்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25% தாழ்த்தப்பட்டவருக்கு 15% என முதன்முதலில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதையும் இந்த அவையின் வாயிலாக தெரியப்படுத்த விரும்புகிறேன்.

பாஜகவின் மதவாதம்

காங்கிரஸ் கட்சியால் பாதுகாக்கப்பட்டு வந்த சமூக நீதி கொள்கை இன்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டிறைச்சி வைத்திருந்த அந்த அப்பாவிகள் என்ன ஆனார்கள் என்பது இந்த நாட்டை பார்த்துக் கொண்டிருந்தது.

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அநீதி

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தவானியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் எங்களுடைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேடையில் இருந்த இடத்தில், பாஜகவினரால் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதை சொன்னால் மிக கஷ்டமாக இருக்கும். இவ்வாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share