ஆமாம்.. பெரியார் வழிவந்த பார்ப்பனர்.. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷுக்கு சோசியல் மீடியாவில் ஆதரவு!

Published On:

| By Mathi

HR&CE Minister Ramesh

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் இடம் பெற்றுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் (HR&CE Minister Ramesh) நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ரமேஷ்?

செங்கல்பட்டு தொகுதியை வாக்காளராக கொண்ட ரமேஷ், ஸ்ரீரங்கம் தொகுதி தவெக வேட்பாளராக போட்டியிட்டார். இவரது சொத்து மதிப்பு ரூ33 லட்சம்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய் அமைச்சரவையில் அமைச்சர் வெங்கடரமணனைத் தொடர்ந்து பிராமணரான ரமேஷுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. பிராமணர் சமூகத்தில் அய்யங்கார் பிரிவைச் சேர்ந்தவர் ரமேஷ். விஜய் ரசிகர் மன்றமானது, விஜய் மக்கள் இயக்கமாக மாறிய போது அதில் மிக நீண்டகாலம் பயணித்தவர். பிஇ மெக்கானிக்கல் படித்துள்ள முதல் தலைமுறை பட்டதாரி. தேர்தல் செலவுக்கு சொந்த வீட்டை அடமானம் வைத்து பிரசாரம் செய்தவர் ரமேஷ்.

கி.வீரமணி கடும் எதிர்ப்பு

இந்து சமய அறநிலையத்துறைக்கு பார்ப்பனரான ரமேஷை நியமிப்பதா? என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

மேலும் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், பார்ப்பனர் -இந்துத்துவா ஆதரவாளர் என்ற விமர்சனங்களும் இதற்கு ஆதாரமான 5, 6 ஆண்டுகளுக்கு முந்தைய அவரது பதிவு என்பவைகளும் காட்டப்படுகின்றன.

அமைச்சர் ரமேஷுக்கு ஆதரவாக குரல்

இந்நிலையில், “ஆமாம்.. ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் பார்ப்பனர்தான்.. பெரியார் வழி வந்த பார்ப்பனன்” என்கிற கருத்துகளும் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னையில் இன்று மே 22-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பதவி ஏற்கும் வரை அவரது சமூகம் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது” என கூறினார்.

தவெக மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் தமது எக்ஸ் பக்கத்தில், “ஆமாண்டா பார்ப்பனர் தான்… பெரியாரின் வழிவந்த பார்ப்பனன்! ​சாதியைக் கடந்து கொள்கையாலும் நேர்மையாலும் உயர்ந்தவர் தோழர் @RameshOffcl மதச்சார்பற்ற, உண்மையான சமூக நீதிப் பாதையில் அவர் என்றும் நேர்மையாக செயல்படக் கூடியவர். ​வெறும் சாதியை மட்டும் பார்த்து அரசியல் செய்பவர்களுக்கு, இவரின் செயல்பாடுகளே இனி சாட்டையடியாக அமையும்!” என பதிவிட்டதுடன் தந்தை பெரியார் சிலை முன்பாக அமைச்சர் ரமேஷ் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.

கபிலன் @_kabilans என்ற நெட்டிசன், “ஒரு பெரியாரிஸ்ட் நீயே ஒரு பார்ப்பனரை ஆதரிக்கலாமா ? என்று பேசுகிறார்கள்,

தந்தை பெரியாரே திமுகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கும் காமராஜருக்கும் ஆதரவாக காங்கிரஸ் கட்சி நிறுத்திய ஒரு பார்ப்பனரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்,

ஆனால் அதை எல்லாம் விட அமைச்சர் திரு.ரமேஷ் என்பவர் விஜய் மக்கள் இயக்க காலம் முதலே மக்கள் பணி செய்து மேலே வந்தவர் அவர் உயரிய பெறுப்புக்கு செல்வது எளிய மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன நிலை கொண்ட எளிய மனிதனின் வெற்றி” என குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடந்த ஆண்டு தமது எக்ஸ் பக்கத்தில், “பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?

முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே… இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும்!
பெரியார் சிந்தனை போற்றுதும்!” என பதிவிட்டதும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share