சிஎம்டிஏவில் இனி கலெக்ஷன் கிடையாது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ் , ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இந்தநிலையில் தங்களுக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது தவெக அரசு.
இன்று (மே 22) விசிகவிலிருந்து வன்னியரசு, ஐயுஎம்எல் கட்சியிலிருந்து ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “இன்றைய தினம் வரலாற்றில் ஒரு பொன்னான நாள். இன்றைய தினத்தை முதலமைச்சருடைய தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி நாளாக வரலாற்றில் நாங்கள் பதிவு செய்கிறோம்.
பெரியார், அம்பேத்கர், அண்ணா ஆகியோர் கனவு கண்ட சமூக நீதி, மதச்சார்பற்ற ஒரு அமைச்சரவையை தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கி இருக்கிறார்.
இந்தத் தேர்தலில் என்ன பெரிய வெற்றி என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் பணபலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது.
சாதியின் அடிப்படையில் ஏற்படுத்திய தேர்தல் அரசியலை மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.
சி. ஜோசப் விஜய் என சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டு மத அரசியலை தூக்கி எறிந்திருக்கிறார் எங்களுடைய தலைவர்.
எல்லோருக்குமான ஒரு முதல்வராக எல்லா மதமும், எல்லா சாதிகளும், இளைஞர்களும், பெண்களும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கிய பொழுது, எங்களுடைய தலைவர் முதல் மாநாட்டில் சொன்ன மாதிரி, ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு… தமிழக வரலாற்றில் இதெல்லாம் சாத்தியமா என எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் ரொம்ப அண்டர் எஸ்டிமேட்டோட எங்க தலைவரையும் தமிழக வெற்றி கழகத்தையும் தேர்தலுக்கு முன்னதாக பார்த்தார்கள்.
இன்றைக்கு இந்தியாவே பார்த்து பிரமிக்கக் கூடிய ஒரு அமைச்சரவை உருவாக்கி இருக்கிறார். அதில் எட்டு தலித் சகோதரர்கள் முக்கிய துறைகளில் தங்களுடைய பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள்.
எங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்று சொன்னாலும், முதலமைச்சர் சொன்ன வாக்குறுதியின் படி ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என கூறி அனைத்து தோழமை கட்சிகளுக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார்.
அதன்படி காங்கிரஸ் 59 வருடத்துக்கு பின்னர் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறது. விசிக 30 வருடத்துக்கு பின்னர் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறது.
மூப்பனார் இருக்கும் பொழுது, ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என முதலில் குரல் எழுப்பினார்.
“அதிகாரம் ஒருவரிடம் மட்டும்தான் இருக்கணுமா?” என்று முதல் முதலில் 1999-ல் அண்ணன் திருமாவளவன் குரல் எழுப்பினார்.
உணர்வுபூர்வமான தருணம்
ஐயுஎம்எல் 1948-ல் உருவாக்கப்பட்ட இயக்கம். 75 வருட பாரம்பரிய இயக்கம். ஆனால் இன்று வரை, முன்பிருந்த அரசுகள் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் எந்த விதத்திலும் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தது கிடையாது.
எனவே இன்றைய நாளை சமூக நீதி நாளாக பார்க்கிறோம்.
இன்றைக்கு பதவியேற்புக்கு பிறகு, முதலமைச்சர், அண்ணன் திருமா அவர்களையும், காதர் மொய்தீன் அவர்களையும் பார்த்து “இன்றைக்குத்தான் நான் மன நிறைவோடு இருக்கிறேன், இந்த அமைச்சரவை இன்றைக்குத் தான் முழுமை பெற்றது” என தன்னுடைய அன்பை பகிர்ந்துகொண்டார். அப்போது அது எல்லோருக்கும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது” என்றார்.
மேலும் அவர், “ஒவ்வொரு முடிவும் மதச்சார்பற்ற கொள்கையிலும் சமூக நீதியின் அடிப்படையிலும் ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு நிர்வாகியும், காவல்துறை அதிகாரிகளும், ஐஏஎஸ் ஆபீசரும் நேர்மையாக முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த அரசு பெரியார், அண்ணா, அம்பேத்கர் கொள்கையின் வழியில் தான் செயல்படும்.
தேர்தல் அரசியலில் மெஜாரிட்டி இல்லாத போது அதிமுககிட்ட சப்போர்ட் கேட்டிருந்தால் ஈசியா வந்து கவர்மெண்ட் ஃபார்ம் பண்ணியிருப்போம்.
ஆனால் தோழமை கட்சியினுடைய நம்பிக்கையை நாங்கள் உருவாக்கினோம். இந்த அரசு மதச்சார்பற்ற கொள்கையிலும் சமூக நீதி கொள்கையிலும் உறுதியாக இருக்கும் என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் வெளிப்படுத்தினோம். அதை அவர் நம்பினார். எங்களுடைய முதல்வரும் அவரும் ஒரு சகோதரர் போல ஒரு உறவை இன்றைக்கு உருவாக்கி இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் தோழர்களிடம் இந்த மதச்சார்பற்ற கொள்கையை பற்றி விளக்கி ஒரு நீண்ட விவாதத்தை நடத்தினோம். இது அதிகாரத்துக்கோ பணபலத்துக்கோ உருவாக்கிய கூட்டணி கிடையாது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரிடம் ஒரு பெரிய நீண்ட விவாதம் நடந்தது. ரவிக்குமார் அண்ணன், தோழர் சிந்தனைச் செல்வன் அண்ணன் எல்லோரிடமும் எந்த அளவிற்கு இந்த அரசு மதச்சார்பற்ற கொள்கையிலும் சமூக நீதி கொள்கையிலும் உறுதியாக இருக்கிறது என்பதை விளக்கினோம்” என்று குறிப்பிட்டார்.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் அமைச்சரவையில் இடம் பெறுவது முக்கியம் என்று கூறிய ஆதவ் அர்ஜூனா, “திமுக தலைமையில் 2021ல் கூட்டணி கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டார்கள்.
கூட்டணியில் அந்தந்த தலைமையும் அந்தந்த கட்சியும் முடிவு செய்யக்கூடிய ஜனநாயக உரிமை இருக்கிறது. எந்தக் கட்சியும் திமுகவுக்கு அடிமை சாசனத்தை எழுதிய கட்சி கிடையாது. இத்தனை நாள் திமுக கட்சி ஒவ்வொரு கட்சியையும் அடிமை சாசனத்துடன் எழுதின ஒரு வரலாறைத்தான் பார்த்திருப்போம்.
அப்படி இருக்கும் பொழுது ஆ. ராசா அண்ணன் திருமாவளவனையும் விசிக தோழர்களையும் பார்த்து ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
திமுக தலைவரும் உதயநிதியும் “ஏன் தோற்றோம்?” என்று ஆய்வு செய்வதற்கு 36 பேரை அப்பாயிண்ட்மென்ட் பண்ணிருக்காங்க. இன்னும் அவர்களுக்கு ஏன் தோற்றோம் என்று புரியவில்லை.
ஆ.ராசாவுக்கு கண்டனம்
அரசியலில் ஒரு கட்சியையும் ஒரு தலைவரையும் தாக்கும் பொழுது, ஒரு பெண்ணுடைய உறவை அடிப்படையாக வைத்து சொல்வதா? அந்த வார்த்தைகளை விசிக தொண்டர்கள் மீதும் அண்ணன் திருமாவளவன் மீதும் பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது.
எதிர்க்கட்சி அரசியலை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் செய்யக்கூடிய தவறுகளை சொல்லும் பொழுது மக்களுக்காக திட்டங்களை மாற்ற முடியும். ஆனால் தனிநபர் விமர்சனத்தையோ, ஒரு கட்சியினுடைய தலைவரையோ அல்லது ஒரு கட்சியினுடைய தொண்டர்களையோ, பெண்ணுடைய உறவை மையப்படுத்தி பேச கூடாது. இது அண்ணா, பெரியார் சொல்லி கொடுத்தது கிடையாது.
திமுகவில் கடமையும் இல்லை, கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. கலைஞருடன் அந்த மூன்று கோட்பாடும் மறைந்துவிட்டது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக எங்களுடைய முதலமைச்சர் வெற்றி பெற்றவுடன் எதிர் அரசியல் செய்யாமல் திமுக தலைவருடைய வீட்டிற்கே சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த ஜனநாயக பண்பு தமிழக வெற்றி கழகத்திற்கும் புதிதாக தோன்றிய எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் 75 வருட கட்சி என்று சொல்லக்கூடிய திமுகவிடம் அந்த ஜனநாயக பண்பு இல்லை.
ஆ. ராசா அவர்களுடைய அந்த ட்வீட்டை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற சொற்களை பயன்படுத்துகிறவர்கள் மீது புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுக்க காவல்துறையையும் நாங்கள் சொல்லியிருக்கிறோம்” என கூறினார்.
தொடர்ந்து ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என்ற கேள்விக்கு, “யாரையும் பழி வாங்கக்கூடிய நோக்கம் எங்களுக்கு இல்லை. என் மீது எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அண்ணன் திருமாவளவனை நான் ஒருமையில் பேசியது கிடையாது. அரசியலில் வேறுபாடுகள் வரலாம் ஆனால் தனிப்பட்ட தாக்குதல் இருக்க கூடாது. அதில் சொன்ன வார்த்தைகள் திருமாவளவனையும், விசிக தோழர்களையும் காயப்படுத்தியிருக்கிறது. திருமா அண்ணன் பதவிக்கோ பணத்திற்கோ ஆசைப்படுபவர் கிடையாது. அவருடைய 40 வருஷ வாழ்க்கையில் இருந்து எல்லாருக்கும் தெரியும். அவர் நினைத்திருந்தால் அமைச்சராக பதவி ஏற்றிருக்கலாம். இடைத்தேர்தலில் நின்றிருக்கலாம். ஆனால் வன்னியரசுவை அமைச்சராக்கியிருக்கிறார்.
எனவே தனிப்பட்ட முறையில் காயப்படுத்தக்கூடிய வார்த்தைகளை திமுகவும் திமுக ஐடி விங்கும் தவிர்க்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
0% ஊழல்
மேலும் அவர், “முன்பெல்லாம் சிஎம்டிஏ-வில் வீடு கட்ட வேண்டுமென்றால் ஸ்கொயர் ஃபீட்க்கு 40, 50 ரூபாய் கலெக்ஷன் செய்துகொண்டு இருந்தார்கள். , இதை ஒழித்திருக்கிறோம். நீங்கள் போய் எங்க வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள். அப்படி ஒரு குரூப்பே கிடையாது. பார்ட்டி ஃபண்ட், எம்எல்ஏ ஃபண்ட், மினிஸ்டர் ஃபண்ட் , சிஎம் ஃபேமிலி ஃபண்ட் என இவற்றை இந்த ஒரு வாரத்தில் ஒழித்திருக்கிறோம்.
முன்னாடி ரூரல் பகுதியில் ஒரு ஸ்கொயர் ஃபீட்ல, ஒரு ஏக்கர்ல டிடிசிபியில் போய் அப்ரூவல் வாங்க வேண்டுமென்றால், ஒரு பெரிய டீம் வசூல் பண்ணிட்டு இருப்பாங்க. அதை ஒழித்திருக்கிறோம். டாஸ்மாக் ஊழலை, அமைச்சருக்கு ஃபண்டு கொடுப்பதை ஒழித்திருக்கிறோம். நெடுஞ்சாலைத் துறையில் டோட்டலா எல்லா டெண்டரையும் ரிவிஷன் பண்ணிட்டு இருக்கோம்.
பிடபிள்யூடி-யோட எல்லா டெண்டரையும் ரிவிஷன் செய்துகொண்டிருக்கிறோம். பிடபிள்யூடி ஹைவேஸ், டாஸ்மாக்… இந்த மாதிரி முக்கியமான துறையில் நேர்மையான அதிகாரிகளைப் போட்டு, ஐந்து ஆண்டுகள் செய்த தவறுகளை ஒருத்தர் மேல ஒருத்தர் பழி வாங்காமல் என்னென்ன தவறுகள் நிகழ்ந்திருக்கிறதோ அதை நாங்க எடுத்துக்கிட்டு இருக்கோம்.
இனி அமைச்சருக்கான ஃபண்டோ இல்ல அமைச்சர் பேரை சொல்லிக்கிட்டு அவங்களுடைய குடும்ப உறவுகளோ என யாரும் எந்த இடத்திலையும் ஈடுபடுவது கிடையாது.
ஆற்று மணல் ஏற்றி முதலமைச்சருக்கான ஃபண்டுங்கிறது இல்லை. கரூரில் எந்த இடத்துலையுமே ஆற்றுமணல் ஏத்துறது இல்ல.
மைன்ஸில் எங்கெங்கெல்லாம் இல்லீகல் இருக்கோ அதெல்லாம் அந்தந்த மாவட்ட கலெக்டர்கிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லிருக்கோம். தமிழகம் முழுவதும் ஒரு 11, 12 துறைகளில் கடுமையாக ஊழல் இருக்கும். போக்குவரத்துத் துறையில் இருக்கும்; நீங்க போய் ஒரு லைசென்ஸ் கேட்டீங்கன்னா காசு கேட்பாங்க.
இன்னைக்கு காலையில ஒருத்தர் வந்தாரு, “சார் லைசென்ஸ் வாங்குற இடத்துல எல்லாம் காசு கேட்கறது இல்லை” என்று சொல்கிறார்.
ஏனெனால் அமைச்சருக்கு ஒரு ஃபண்ட் போகும்போது அதிகாரிகள் கேட்பாங்க… அந்த மாதிரி ஒரு குடும்பத்துக்கு 15%, மினிஸ்டர் 11%, அதிகாரிகள் 7% ஷேர் போகும்.
ஆனால் இப்போது மிகப்பேரிய மாற்றம் நடந்துள்ளது. இவற்றை எல்லாம் தூக்கி எறிந்திருக்கிறோம்
இது சாதாரண விஷயம் இல்ல. ஒரு 50 வருஷமா ஒரே சிஸ்டத்துல… முன்னாடி போன ஆட்சியில் இருந்தவங்க, அதாவது அதிமுக இருக்கும்போது 10% இருந்தது, திமுக வந்த உடனே 12% தான் மாத்துனாங்க, இன்றைக்கு 0%.
ஒரு 60 நாள் டைம் கொடுத்தீங்கன்னா ஒட்டுமொத்த நிர்வாக மாற்றத்தை பார்க்கலாம்” என்று கூறினார்.
