“அரசியல் முடிவு அவங்க உரிமை..” – தோழமைகளுக்கு வாழ்த்து சொல்லி, தொண்டர்களுக்கு ‘அன்புக் கட்டளை’ போட்ட ஸ்டாலின்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.ஷாஜஹான் ஆகிய இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கான துறைகளும் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் இந்த அரசியல் முடிவை சமூக ஊடகங்களில் திமுகவினர் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” எனத் தனது கட்சித் தொண்டர்களுக்கு முகநூல் மற்றும் எக்ஸ்தளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னி அரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தவொரு கட்சிக்கும் உண்டு. எனவே, கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவனாக எனது அன்பு வேண்டுகோள்.

ADVERTISEMENT

பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம்; அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்த நிலையிலும், மு.க.ஸ்டாலினின் இந்த நாகரிகமான மற்றும் முதிர்ச்சியான அரசியல் பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share