தவெக எம்.எல்.ஏ வுடன் வாக்குவாதம்: ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Royapuram marriage issue inspector waiting list

தவெக எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம் பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த அந்த இளம் பெண், சென்னை வடபழனியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும், சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். தனது காதலுக்காக அந்த இளம் பெண் மதமும் மாறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், சையது இப்ராஹிமுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையறிந்து அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், தன் காதலன் தன்னை ஏமாற்றியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இப்ராஹிமின் திருமணம் நடைபெறவிருந்த மண்டபத்திற்குள் சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்பினருடன் சென்று நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக வந்தவர்களை ஒருமையில் பேசியதுடன், அவர்களில் ஒருவரைக் கடுமையாகத் தாக்கி வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

ADVERTISEMENT

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் சிதம்பரத்திடம், “பொதுமக்களை அடிக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்று கேள்வி எழுப்பினார். இதனால் தவெக எம்.எல்.ஏ-விற்கும் காவல் ஆய்வாளருக்கம் இடையே காவல் நிலையத்திலேயே வாக்குவாதம் முற்றியது.

இதற்கிடையில், இந்த ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கும் காரணமான சையது இப்ராஹிம், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுக்கொண்டு, வேறு ஒரு இடத்தில் வைத்து ரகசியமாகத் திருமணத்தை முடித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், சையது இப்ராஹிம், அவரது தாய்மாமா மற்றும் சகோதரர் உள்ளிட்ட திருமண வீட்டார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனிடையே, காவல் நிலையத்தில் தவெக எம்.எல்.ஏ விஜய் தாமுவிடம் அநாகரிகமாக வாக்குவாதம் செய்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம், தற்போது அதிரடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share