அதிமுக எங்களுக்கு உயிர் மூச்சு. கட்சியை உடைக்கவோ பிரிக்கவோ எங்களுக்கு எண்ணம் கிடையாது என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடையே உட்கட்சி மோதல் நிலவி வந்தது. குறிப்பாக, சட்டமன்றத்தில் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம் தரப்பில் 25 எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார்.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்தது. ஆனால், இன்று தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்துள்ளன. விஜய் அமைச்சரவையில் 35 அமைச்சர்களும் பதவியேற்றுள்ள நிலையில், அதிமுகவிற்கான கதவுகள் மூடப்பட்டுள்ளது தெளிவாகி உள்ளது.
இந்நிலையில், இன்று (மே 22) சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நாங்கள் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கத் தேவையில்லை என்றுதான் நினைத்தோம். ஆனால் சில ஊடகங்கள் தொடர்ச்சியாக நாங்கள் தவெக அமைச்சரவையில் பொறுப்பேற்கப் போவதாகவும், அது கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
நானோ அல்லது எங்களது அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகமோ ஒருபோதும் அமைச்சரவையில் இணையப் போவதாகக் கூறவில்லை. இது குறித்துத் தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் மக்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். நாங்களும் அதே திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.
அதிமுக தேர்தல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதை எப்படிச் சரி செய்வது என்பது குறித்துப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசி, கூட்டத்தைக் கூட்டுவதற்கான கோரிக்கையை வைப்போம். இது அதிமுகவில் பிளவு கிடையாது; எங்களுக்குள் இருக்கும் ஒரு கருத்து வேறுபாடு மட்டும்தான். எடப்பாடி பழனிசாமிதான் கட்சியின் பொதுச்செயலாளர், அவரிடம்தான் தோல்வி குறித்த ஆய்வு அறிக்கையை வழங்குவோம்.
ஆனால், நாங்கள் ஏதோ பதவி ஆசைக்காகத் தவெகவிற்கு ஆதரவளித்தது போல் சிலர் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது. நாங்கள் சட்டமன்றத்தில் ஆதரவு கொடுத்தபோதே பதவிக்காக ஆசைப்பட்டு நாங்கள் வரவில்லை. திமுக எதிர்ப்புதான் எங்களது முக்கிய நோக்கம் என்று தெரிவித்திருந்தோம்.
நாங்கள் முதலமைச்சரைச் சந்தித்தபோதும் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். குறிப்பாக, அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம், அம்மா மினி கிளினிக், அம்மா குடிநீர் போன்ற திட்டங்களைத் தொடர வேண்டும்; அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் மற்றும் நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.
நாங்கள் ஒரு தலைமுறை தாண்டி, தியாகம் செய்த இந்த இயக்கத்தில் இருக்கிறோம். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே, எங்களது தந்தையார் காலத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்து வருகிறோம். அதிமுக எங்களுக்கு உயிர் மூச்சு. கட்சியை உடைக்கவோ பிரிக்கவோ எங்களுக்கு எண்ணம் கிடையாது. தோல்வியை ஆராய்ந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நாங்கள் பாடுபடுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.
அதே சமயம், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசி வந்த சி.வி.சண்முகம், இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
