முதல்வர் விஜய் அமைச்சரவை: ஸ்ரீநாத் முதல் ஷாஜஹான் வரை.. அமைச்சர்களின் பின்னணி- முழு விவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழகத்தின் முதல்வராக விஜய் கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்ற நிலையில் அவருடன் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களும், தவெக வைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இன்று (மே 22) விடுதலை சிறுத்தைகளின் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் கட்சியை சேர்ந்த ஷாஜஹான் இருவரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்கள் குறித்த முழு விபரங்கள்

ஸ்ரீநாத்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகர் ஸ்ரீநாத், தமிழக அமைச்சரவையில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த இவர், லயோலா கல்லூரியில் பி.எஸ்சி. படிப்பை பாதியில் நிறுத்தினார். தொடர்ச்சியாக நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றி வரும் இவர், நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர்.

ADVERTISEMENT

கமலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கமலி, மத்திய இணை அமைச்சர் எல். முருகனை எதிர்த்து திருப்பூர் மாவட்டம் அவினாசி தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.ஏ., பி.எட். படித்துள்ள இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தவெக அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவரது கணவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.

விஜயலட்சுமி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி பிளஸ் டூ படித்துள்ளார். சுயதொழில் செய்து வந்த இவர், தவெக மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் பலராமன். இந்தத் தம்பதிக்கு விஷ்ணு, பிரவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். தவெக அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.

ADVERTISEMENT

ஆர்.வி. ரஞ்சித் குமார்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.வி. ரஞ்சித் குமார், நேற்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். பி.ஏ. பட்டதாரியான இவர், ஓபிஎஸ் அணி மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்.ஜி.ஆர். அதிமுகவில் பணியாற்றியவர். காஞ்சிபுரம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த இவருக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவரது மனைவி பிரேமா ரஞ்சித் குமார் தற்போது வாலாஜாபாத் ஒன்றியக் குழு உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

வினோத் ரவி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வினோத் ரவி பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியவர் கும்பகோணத்தில் சிறிய அளவில் கடை நடத்தி வரும் இவருக்கு திருமணம் நடைபெறவில்லை. நேற்று விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்

ADVERTISEMENT

டாக்டர் ராஜீவ்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் ராஜீவ், தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். முடித்த இவர், திருவனந்தபுரம் அமிர்தா பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பைத் தொடர்ந்து பாதநோய் அறுவை சிகிச்சை நிபுணரானார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மருத்துவராகப் பணியாற்றி வரும் இவர், ராமநாதபுரத்தில் சொந்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இந்தத் தம்பதிக்கு கிரித்தின் அபினவ் என்ற மகன் உள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வந்த டாக்டர் ராஜீவ், தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்

ராஜ்குமார்

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த ராஜ்குமார், கடலூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். நேற்று தவெக அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்த இவர், ரியல் எஸ்டேட் தொழிலதிபராக உள்ளார். புஸ்ஸி ஆனந்தின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்படுகிறார்.

காந்திராஜ்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையைச் சேர்ந்தவர். பி.ஏ. படிப்பை பாதியில் நிறுத்திய இவர், கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஏற்கெனவே கவுன்சிலராக இருந்த இவர் அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது கூட்டுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவியும், விஜய் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் உள்ளனர்.

மதன்ராஜா

கோவில்பட்டி திட்டக்குளத்தைச் சேர்ந்த மதன்ராஜா, பி.இ. எந்திரவியல் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். கோவில்பட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். விஜய் நற்பணி மன்றத்தில் தீவிரமாகப் பணியாற்றிய இவர், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்றார். இவரது மனைவி ரேகா உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தவெக அமைச்சரவையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஜெகதீஸ்வரி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி, பி.எஸ்சி. பட்டதாரி ஆவார்.15 ஆண்டுகள் ஊடகத்துறையிலும் அனுபவம் கொண்ட இவர், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மகளிர் அணித் தலைவராகப் பணியாற்றியுள்ளார். ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தவெக அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். விவாகரத்து பெற்ற இவருக்கு சந்தியா, மோகனா, அபி லாவண்யா என மூன்று மகள்கள் உள்ளனர்.

ராஜேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் தொகுதியிலிருந்து 2016, 2021 தேர்தல்களைத் தொடர்ந்து தற்போது 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். சட்டம் படித்துள்ள இவர் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு ஜெயின் மேரி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். இவரது தாத்தா பொன்னப்ப நாடார் காங்கிரஸ் சார்பில் 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் பாலாஜி

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த விஜய் பாலாஜி, பி.காம் பட்டதாரி ஆவார். பேன்சி கடை நடத்தி வரும் இவர், ஈரோடு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தமிழக அமைச்சரவையில் கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருபவர்.

லோகேஷ் தமிழ்ச்செல்வன்

சேலம் மாவட்டம் தாதகாபட்டியைச் சேர்ந்த லோகேஷ் தமிழ்ச்செல்வன், முன்னாள் அதிமுக பேரவைத் தலைவர் தனபாலின் மகன். சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் மற்றும் டெல்லியில் எம்.பி.ஏ. படித்துள்ளார். ராசிபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற இவர், டிஜிட்டல் மார்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தங்க பூர்ணிமா என்ற மனைவியும், நிகேஷ், பிரத்னேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன் தவெகவில் இணைந்த இவர், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

விஜய் தமிழன் பார்த்திபன்

சேலம் அம்மாப்பேட்டை வித்தியாநகரைச் சேர்ந்த விஜய் தமிழன் பார்த்திபன், பிளஸ் டூ படித்துள்ளார். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மொபைல் ஷோரூம் நடத்தி வருகிறார். விஜயின் சில படங்களுக்கு சேலம் மாவட்ட விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். சேலம் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தமிழக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், நேத்ரா என்ற மகளும் உள்ளனர். விஜய் நடித்த சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ரமேஷ்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரைச் சேர்ந்த ரமேஷ், முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி ஆவார். சமையல் தொழிலாளியின் மகன். தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். தவெக செய்தித் தொடர்பாளராகத் தொடங்கி, பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளராக உயர்ந்தார். ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். இவரது மனைவி அக்ஷயா. இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.

விஸ்வநாதன்

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரைச் சேர்ந்த விஸ்வநாதன், தேசிய மற்றும் மாநில அளவில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பி.ஏ. பட்டதாரியான இவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவின் தீவிர ஆதரவாளர். மேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தமிழக அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவரது மனைவி பத்மினி ஆங்கிலத்துறை பேராசிரியை ஆவார். இவர்களுக்கு சுஸ்மிதா என்ற மகள் உள்ளார்.

குமார்

சென்னை அடையாறு சாஸ்திரி நகரைச் சேர்ந்த குமார், பெங்களூரு ஐஐஎம்-ல் ‘பிசினஸ் லீடர்ஷிப்’ படிப்பை முடித்த சிவில் இன்ஜினீயர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார். வேளச்சேரி தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தமிழக அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தென்னரசு

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிச்சத்திரம் சிறுணைப்பெருகல் பகுதியைச் சேர்ந்த தென்னரசு, 10-ம் வகுப்பு படித்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், தவெக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தமிழக அமைச்சரவையில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

சம்பத்குமார்

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சம்பத்குமார், கோவை கணபதியைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ. (தொலைதூரக் கல்வி) முடித்த இவர், அப்பகுதியில் நெய் வியாபாரம் செய்து வருகிறார். தவெகவின் கோவை மாவட்டச் செயலாளராக உள்ளார். தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முகமது பர்வேஸ்

புதுக்கோட்டை மாவட்டம் ஏ.எம்.ஏ. நகரைச் சேர்ந்த முகமது பர்வேஸ், சட்டப் படிப்பு முடித்துள்ளார். அச்சுத் தொழில் செய்து வரும் இவர், ஏற்கெனவே கவுன்சிலராகவும், புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றுகிறார். திருமணம் ஆகாத நிலையில் அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

சரத்குமார்

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரைச் சேர்ந்த சரத்குமார், பி.பி.ஏ. பட்டதாரி ஆவார். கட்டுமானத் துறையில் ஒப்பந்ததாரராக உள்ள இவர், தவெக செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றுகிறார். தாம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற இவரது மனைவி ரம்யா ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தமிழக அமைச்சரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மரிய வில்சன்

காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த மரிய வில்சன், எம்.பி.ஏ. பட்டமும், ‘மேலாண்மை அறிவியல்’ துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். கல்வியாளர் மற்றும் அரசியல் வியூகவாதியான இவர், ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றார். தமிழக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

விக்னேஷ்

கோவையைச் சேர்ந்த விக்னேஷ், பி.எஸ்சி. கணினி அறிவியல் பட்டதாரி ஆவார். சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வரும் இவர், கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். கிணத்துக்கடவு தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தீவிர விஜய் ரசிகர் ஆவார். ரசிகர் மன்றத்தில் செயல்பட்டு வந்த இவர், தவெக தொடங்கப்பட்ட போது கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வன்னி அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர். இவர் விசிகவின் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். திண்டிவனம் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு ஜெமிமா ஆலீஸ் மனோகரி என்ற மனைவியும், பைந்தமிழ் வளவன், திலீபன் செந்தமிழ் என இரண்டு மகன்களும் உள்ளனர். தவெக அமைச்சரவையில் இன்று சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஏ.எம். ஷாஜஹான்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள ஆடுதுறையைச் சேர்ந்தவர் ஏ.எம். ஷாஜஹான். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது மனைவி பெயர் ஷமிம் நிஷா. இவர், ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி மன்ற 10-ஆவது வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர் இன்று விஜய் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share