பயிர்க்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – கே.என்.நேரு இடையே காரசார வாதம்

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுக தேர்தல் அறிக்கையிலேயே விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து நீங்கள் பேசவே இல்லை. அதனால், விவசாயக் கடன் பற்றிப் பேச உங்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன், “விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது, அதைத் தள்ளுபடி செய்யலாம். கடந்த காலத்தில் 2006-ல் தலைவர் கலைஞர் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வேன் என்றார்; 7,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தார். இப்போது உங்களுக்குப் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய மனம் இல்லை” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “இந்த அவையில் மீண்டும் மீண்டும் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து விவாதித்து வருகிறோம். நீங்கள் தள்ளுபடி செய்யும்போது ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் வேறு; ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வேறு. இப்போது நாங்கள் தள்ளுபடி செய்யும் நேரம் வேறு. நீங்கள் தள்ளுபடி செய்யும்போது ஐந்து வருடங்கள் உங்களுக்கு அவகாசம் கொடுத்தார்கள்; அந்த காலத்தில் ஐந்து ஆண்டுகள் அவகாசம் இருந்ததைப் போன்று இப்போது இல்லை; மூன்று மாதத்திற்குள் நாம் உடனடியாக பணத்தைச் செலுத்தி ஆக வேண்டும். இதுதான் இன்று இருக்கக்கூடிய பிரச்சினை. ஐந்து வருடம் அவகாசம் இருந்தால், இனிமேல் வாங்கும் கடனைக்கூட நாங்கள் தள்ளுபடி செய்துவிடுவோம். இன்று இருக்கும் பிரச்சினை மற்றும் இன்றைய நிதிநிலை பிரச்சனை குறித்து உங்களுக்குத் தெரியும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்; நீங்கள் விவசாயக் கடன் தள்ளுபடி என்று சொல்வே இல்லை. ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்று தெரியுமா? நீங்கள் உறுதியாக 200-க்கு 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று நம்பினீர்கள்; ஜெயித்து வந்திருந்தாலும் நீங்கள் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால், இன்று இருக்கும் சட்டதிட்டங்கள் அப்படிப்பட்டவை. அதனால்தான் உங்கள் தேர்தல் அறிக்கையிலேயே அதைக் குறிப்பிடவில்லை. ஆனால், நாங்கள் ஜெயிப்போம் என்று தெரிந்தும் எங்கள் முதல்வர் விவசாயக் கடன் தள்ளுபடி என்று சொன்னார். இன்று இரண்டு முறை தள்ளுபடி செய்து, ஒரு லட்சத்தில் 75 ஆயிரம் வரை தள்ளுபடி செய்துள்ளோம். எதிர்காலத்தில் கூடிய விரைவில் நாங்களும் தள்ளுபடி செய்வோம். உங்கள் தேர்தல் அறிக்கையிலேயே விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து நீங்கள் பேசவே இல்லை. அதனால், விவசாயக் கடன் பற்றிப் பேச உங்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது” என்றார்.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக எம்.எல்.ஏ. கே.என். நேரு, “அந்த காலத்தில் ரிசர்வ் வங்கி சட்டத்தில் ஐந்து ஆண்டுகள் வரை நீங்கள் கொடுக்கலாம் என்று இருந்ததால் நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுத்தீர்கள். ஆனால், இப்போது இருக்கும் சட்டம் மூன்று மாதத்திற்குள் கட்ட வேண்டும் என்று சொல்கிறது என்கிறார் அமைச்சர். தேர்தலுக்கு முன்பே ரிசர்வ் வங்கி சட்டம் கொண்டுவந்துவிட்டது. அந்த சட்டத்தைத் தெரிந்துகொண்டுதானே நீங்கள் தள்ளுபடி செய்வேன் என்று சொன்னீர்கள்?” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திமுக எந்த வாக்குறுதியைக் கொடுத்தாலும் மூன்று மாதங்களில் செய்ததாகக் கிடையாது. நாங்கள் இந்த நூறு நாட்களில் இரண்டு முறை அறிவிப்பு கொடுத்துள்ளோம்; எதிர்காலத்திலும் நிதிநிலைக்கு ஏற்பச் செய்வோம். ஏற்கனவே ஆவின் பால் கொள்முதல் விலை குறித்து முதல்வர் அறிவிக்கும்போது, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கோரிக்கை வந்தது என்று மீண்டும் இன்று அறிவிப்பு வந்தது அல்லவா? அதுபோல் நாளை வரலாற்றில் முதல் முறையாக எங்களது தலைவர் அவரது கையால் மேட்டூர் அணையைத் திறக்கப் போகிறார். நாளிலிருந்து விவசாயிகளின் கண்ணீர் துடைக்கப்படும் என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம்” என்றார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பேசிய கே.என். நேரு, “தேர்தலுக்கு முன்பே ரிசர்வ் வங்கி சட்டம் இருந்தது; அதைத் தெரிந்துகொண்டுதானே நீங்கள் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்கள்?” என்றார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நிதிநிலை அறிக்கை ஏற்ப நாங்கள் தொடர்ந்து ஒவ்வொரு படியாகச் செய்து வருகிறோம்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share