அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறு செய்தியை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், திமுக ஐடி விங் ஆகியோர் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
250 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் ’ஜான் பிரிட்டோ ’மூளையாக செயல்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
அமலாக்கத்துறை குறிப்பிட்ட அந்த ஜான் பிரிட்டோ அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறவினர் என்று தகவல் வெளியானது. இது தொடர்பாக திமுக ஐடி விங் பக்கத்திலும் கடந்த ஜூன் 8ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தையே அதிரவைத்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஒரிஜினல் ‘ஜான் பிரிட்டோ’ யார்? என நமது மின்னம்பலத்தில் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த சூழலில், தனக்கு எதிராக அவதூறான செய்தி வெளியிட்டதற்கு 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”தனக்கு எதிராக அவதூறு செய்தி பரப்பியதாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின், திமுக ஐடி விங், தொலைக்காட்சி சேனல்கள், ஆங்கில நாளிதழ்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இது நடந்துள்ளதால் எதிர்காலத்தில் இது போன்ற அவதூறுகளை பரப்ப திமுக ஐடி விங்கிற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், ”போதைப் பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான் பிரிட்டோவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதே பெயரில் அமைச்சருக்கு ஒரு உறவினர் இருக்கிறார். பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி திமுக அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் ஆகியோர் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
