‘தகுதியில்லை என்பதா?’ அமைச்சர் ஷாஜகான் பேச்சால் பேரவையில் அனல் பறந்த விவாதம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

“தமிமுன் அன்சாரிக்கு நன்றி உணர்வைக் கேள்வி கேட்கும் தகுதியெல்லாம் இங்கிருக்கும் உறுப்பினருக்கு முதலில் இல்லை” என அமைச்சர் ஷாஜகான் பேச்சால் அமைச்சரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையின்போது பேசிய அமைச்சர் ஷாஜகான், “வரலாற்றில் முதன்முறையாக நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை சமுதாயத்திற்கு 20-க்கும் அதிகமான அறிவிப்புகளைச் செய்த ஒரே அரசு தவெகதான். அதற்கு முதல்வர் விஜய்க்கு சிறுபான்மை சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டம், ஹஜ் மானியம் உயர்வு, காயிதே மில்லத் பெயரில் விருது, வேளாங்கண்ணி மற்றும் நாகூரில் தங்குமிடங்கள் போன்ற அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை” பட்டியலிட்டார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, “நான் ஏற்கனவே இந்த அவையிலே சொன்னது போல, சிறுபான்மைச் சமுதாய மக்கள் சவலைப்பிள்ளைகள். யார் தங்களுக்கு ஆதரவு கொடுத்தாலும் அவர்களைக் கொண்டாடுவார்கள். அந்த வகையில், கடந்த காலத்தில் அதிமுக அரசும் சரி, திமுக அரசும் சரி, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காக, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றைச் செய்வதற்கு வசதியாக, கடந்த திமுக ஆட்சியில்தான் 40 கோடி ரூபாய் வரை ஒதுக்கி ஒரு மிகப்பெரிய ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். அதற்கு முன்பாக, அதிமுக ஆட்சியின் போது அந்தக் கோரிக்கையை நான்தான் அப்போது முன்வைத்தேன்; அப்போது 15 கோடியை முதலமைச்சராக இருந்த அண்ணன் எடப்பாடி அவர்கள் ஒதுக்கியிருந்தார்கள். அந்தப் பதினைந்து கோடியை நாற்பது கோடியாக உயர்த்தியது தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய அரசு என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல், மறைந்த நம்முடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், மரியாதைக்குரிய அய்யா காதர் மொய்தீன் சாஹிப் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்…” என்று பேசத் தொடங்கினார். உடனடியாக அருகில் இருந்த சேகர் பாபு உள்ளிட்டோர் அவரது காதர் மொய்துதீன் குறித்த தகவலை சுட்டிக் காட்டினர்.

இதையடுத்து, “மரியாதைக்குரிய அய்யா காதர் மொய்தீன் சாஹிப் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அதனால்தான் ‘மரியாதைக்குரிய’ என்று சொன்னேன்; தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

அவருக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற உயரிய விருதை அளித்துச் சிறப்பித்தது முந்தைய திராவிட மாடல் அரசு. நான் என்ன சொல்கிறேன்னா, முந்தைய அரசுகள் செய்த நல்ல விஷயங்களையும் பாராட்ட வேண்டும். நீங்களும் செய்திருக்கிறீர்கள்; இன்னும் இதைவிடச் சிறப்பாகச் செய்யுங்கள், அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். மாறாக, ‘நாங்கள் மட்டும்தான் எல்லாம் செய்திருக்கோம், மற்றவர்களெல்லாம் யாருமே எதுவுமே செய்யவில்லை’ என்பது போலச் சொல்வது ஆரோக்கியமான அரசியலுக்கு உதவாது.

அதேபோன்று, இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் திராவிடக் கட்சிகள் செய்த சாதனைகளை மறக்க முடியாது. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழக அரசில் அந்த 3.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்குச் சிக்கல் வருகின்றபோது, சிறப்பான அரசாணையை வெளியிட்டதும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய அரசு என்பதை இந்த நேரத்திலேயே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

மீண்டும் நான் சொல்வது, உங்களது கோரிக்கைகளை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன், இன்னும் செய்யுங்கள் என்று சொல்கிறேன். ஆனால், மற்றவர்களைத் தாழ்த்தி விடாதீர்கள்; அது ஒரு நன்றிகெட்ட உணர்வை வெளிப்படுத்திவிடும் என்று நான் அச்சப்படுகிறேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “நன்றி உணர்வு என்கிறீர்கள்; அமைச்சர் அவர்கள், யாராலே வெற்றி பெற்றோம் என்பதை நினைவுகூர்ந்து இந்த அவையிலே அதைப் பதிவு செய்ததே ஒரு நன்றி உணர்வின் அடையாளம் தானே?” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஷாஜகான், “இருந்த எந்த ஆட்சியையும் குறை சொல்லாமல் கண்ணியமான முறையில் இதுவரை 20 அறிவிப்புகள் சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு முதன்முறையாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்றுதான் நான் தெரிவித்துள்ளேன். ஏன் அவர்கள் தானாக எழுந்து அட்டனன்ஸ் போடுகிறார்கள் என்பது மட்டும்தான் தெரியவில்லை” என்றார். மேலும், “தமிமுன் அன்சாரிக்கு நன்றி உணர்வைக் கேள்வி கேட்கும் தகுதியெல்லாம் இங்கிருக்கும் உறுப்பினருக்கு முதலில் இல்லை” என்றார்.

(இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.) “போன வாரம் வரை மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டு இருந்தவர், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டணி மாறுகிறவர் என்னைச் கேள்வி கேட்கிறார்” என்றார். இதற்கு திமுக தரப்பில் மீண்டும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ. கே.என். நேரு, “அவர் உங்களது ஆட்சியையும் தலைவர்களையும் பற்றிப் புகழ்ந்து பேசினார். தமிமுன் அன்சாரியைப் பார்த்து நன்றி சொல்லத் தகுதி இல்லை என்று சொல்வது எப்படி ஏற்க முடியும்? தமிமுன் அன்சாரியைப் பேசச் சொல்லுங்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “நீங்கள் நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்றுதான் சொன்னாரே தவிர…” என்றார். அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன், ” தமிமுன் அன்சாரி நன்றி குறித்துப் பேசுகையில், ‘நான் அங்கிருந்து இங்கு வந்தாலும் கூட தன்னை ஜெயிக்க வைத்தவர்களுக்கு நன்றி சொன்னாரா இல்லையா?’ என்று கேட்டேன். அதோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. அவரைப் பற்றி நீங்கள் பேசிய குறிப்பினை நான் மீண்டும் படித்துப் பார்ப்பேன்; தேவையற்றதாக இருந்தால் அதை நிச்சயமாக நீக்கிவிடுவேன்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share