நீங்கள் கார் பந்தயம் நடத்திய எங்களை கொச்சைப்படுத்தவில்லை, அந்த விளையாட்டு வீரர்களைத்தான் கொச்சைப்படுத்துகிறீர்கள் என பேரவையில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உதயநிதி பதில் அளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் மானிய கோரிக்கோரிக்கை மீதான இன்றைய விவாதத்தின் போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை ஆற்ற அரசின் சார்பில் வாகனம் வழங்கும்போது அதற்கு தனி மரியாதை உள்ளது. நீங்கள் எத்தனை கோடியில் கார் வைத்திருந்தாலும், அரசின் வாகனங்களில் செல்லும்போது அதற்கு தனி மரியாதை உண்டு. ஆனால், எங்களைப் பற்றி சொல்லும்போது, திமுக கார் பந்தயத்திற்கே 24 கோடி ரூபாய் செலவு செய்தீர்களே, அதெல்லாம் யார் அப்பா காசு?” என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எங்கள் உறுப்பினர் பேசும்போது, முதல்வர் 110 விதியின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் அறிவிப்பைகொடுத்திருக்கிறார் என்றார். எங்களுடைய தலைவர் எடுத்த முடிவு, யார் யாருக்கு கார் இல்லையோ அவர்களுக்கு வாங்கித் கொடுங்கள் என்பதுதான். விவசாயக் கடன்கள் இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை; அதெல்லாம் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி. ஆட்சிப் பொறுப்பேற்கும் போது சென்ற அரசு கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டுப் போயிருக்கிறது என்றெல்லாம் நீங்கள் குறை சொல்லி இருக்கிறீர்கள்” என்றார்.
இதற்கு ஆளுங்கட்சித் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “அமைச்சர் கூட பேசக்கூடாது; இந்தப்பக்கமாக இருந்தாலும் சரி, அந்தப்பக்கமாக இருந்தாலும் சரி, எந்தப்பக்கத்திலிருந்து பேரவையில் தேவையற்ற குரல்கள் வந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்க விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மரியாதை கொடுத்து பேச அனுமதிக்க வேண்டும். அவை முன்னவர் பேசிக்கொண்டிருக்கும்போது கூட நீங்கள் எழுந்து நிற்பது முறையல்ல” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “திமுக தரப்பில் யாருக்கெல்லாம் கார் தேவையோ, அந்த நிலைமையில் இருப்பவர்களுக்கு வாங்கித் தாருங்கள் என்றோம். திமுக உறுப்பினர்களுக்கு கார் தேவையில்லை என்றுதான் சொன்னோம்; நீங்கள் யாரும் கார் வாங்கக்கூடாது என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. கார் வாங்கிக்கொண்டு எல்லா தொகுதிக்கும் சுற்றுங்கள். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தொகுதியில் நின்று மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று வந்திருக்கிறார்; அவரை கொச்சைப்படுத்தக் கூடாது.
அதேபோல், கார் பந்தையத்தைப் பற்றி இங்கு பேச்சு வந்தது. அது ஒரு சர்வதேசப் பந்தயம் (International Race). ஆசியாவிலேயே முதன்முறையாக இரவு நேரத்தில் அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். இதைத் தடுப்பதற்கு அப்போது பல பேர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள், அதை நிறுத்த முயன்றார்கள். ஆனால் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து, ‘ஒரு சர்வதேச நிகழ்ச்சியை நீங்கள் நிறுத்த முயல்கிறீர்கள், இதை நடத்த வேண்டும்’ என்று அனுமதி அளித்தது. நாங்கள் வெற்றிகரமாக எங்களது ஆட்சியில் அதை நடத்திட்டுக் காட்டினோம். நீங்கள் கார் பந்தயம் நடத்திய எங்களை கொச்சைப்படுத்தவில்லை, அந்த விளையாட்டு வீரர்களைத்தான் கொச்சைப்படுத்துகிறீர்கள்” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, ‘நான் வீரர்களைக் கொச்சைப்படுத்துவது போலப் பேசினேன்’ என்று குறிப்பிட்டார். நான் நிதியைப் பற்றித்தான் சொன்னேனே தவிர, எந்த வீரர்களைப் பற்றியும் கொச்சைப்படுத்தவில்லை; எனவே அந்தப் பகுதியை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். இவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றுதான் நாங்கள் சொன்னோம். நீங்கள் இந்த விவாதத்தை ஆரம்பித்ததால்தான் நாங்கள் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மார்கண்டேயன் இந்தப் பிரச்சினையை ஆரம்பித்திருக்காவிட்டால் இந்த விவாதமே வந்திருக்காது. அவர் எப்போது பேசினாலும் இதே போன்ற பிரச்சனைகள்தான் வருகிறது” என்றார்.
