எனக்கும் சபரீசன் சார்க்கும் தொடர்பு இருக்கிறது என நிரூபித்தால், அவர்களுக்கு நான் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளைக் கொடுக்கிறேன் என ஜிஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் தெரிவித்துள்ளார்.
சென்னையின் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் விமான நிலையத்தில் நெருக்கடியான சூழல் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இரண்டாவது கட்டமாகப் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு அப்பகுதியில் வசிக்கும் விவசாய மக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விமான நிலையத்திற்காக நிலத்தைக் கையகப்படுத்துவதை எதிர்த்து ஏகனாபுரத்தில் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தவெக ஆட்சிக்கு வந்த நிலையில், சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், சென்னையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.டி. நிர்மல் குமார், “பரந்தூரில் 90% நிலம் கையகப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை; வெறும் 48% மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பரந்தூரில் பகுதியில் உள்ள சில கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. தற்போதுள்ள விமான நிலையத்திலேயே கூடுதலாக விமானங்களைக் கையாள முடியும். புதிய டெர்மினல் அமைக்கும் போது பெங்களூரு விமான நிலையத்தை விட அதிக அளவில் பயணிகளை கையாள முடியும்” என்று தெரிவித்தார். அதேசமயம், “இந்தத் திட்டத்திற்காக அதிகமாகக் கதறுவோர் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவும், கருப்புப் பணத்தை முதலீடு செய்தவர்களும்தான்” எனத் தெரிவித்தார்.
இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, “இந்த அளவில் பதில் விவாதத்தை கொண்டு செல்ல சட்டத்துறை அமைச்சர் விரும்பினால் நாங்களும் தயார். ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக விமான நிலையம் என்று சொன்னால், எந்த லாட்டரி மருமகனுக்காகப் புதிய விமான நிலையம் என நான் கேட்கவா?” எனத் தெரிவித்தார். அமைச்சர் சி.டி. நிர்மல் குமாருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் இடையே நடந்த இந்தச் சட்டமன்ற விவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதேபோல் சட்டமன்றத்தில் பேசிய வேலு மணி, “கோவையில் ஜிஸ்கொயர் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் 1000 ஏக்கரில் சைட் போட்டிருக்கிறார்கள். இதற்காக பெரிய பெரிய பாறைகளை உடைத்து எடுத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தவெக தரப்பின் இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான பால ராமஜெயம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கடந்த சில நாட்களாகச் சட்டமன்றத்தில் எங்கள் நிறுவனத்தைப் பற்றிய பேச்சுகள் வருகின்றன. என் கம்பெனியின் மதிப்பு ரூ.10,000 கோடி, அதில் கடன் மட்டும் ரூ. 2300 கோடி. நான் ஓபன் சேலஞ்ச் கொடுக்கிறேன். எனக்கும் சபரீசன் சார்க்கும் தொடர்பு இருக்கிறது என நிரூபித்தால், அவர்களுக்கு நான் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளைக் கொடுக்கிறேன்.” என்றார்
மேலும், “பரந்தூரில் எனக்கோ, எனது பிள்ளைகளுக்கோ, எனது உறவினர்களுக்கோ ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது. அப்படி இருக்கிறது என்று நீங்கள் நிரூபித்தால், அந்த நிலத்தையே உங்களுக்கு இலவசமாகத் தருகிறேன். என்னுடைய நிறுவனத்தின் நிலங்களில் மலைகள் ஏதும் கிடையாது; அப்படி இருந்தால் அந்த இடத்தை நான் பத்திரிகையாளர்களுக்கு எழுதி கொடுத்து விடுகிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நீங்கள் நிரூபித்துவிட்டால், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நீங்களே மாறிவிடுவீர்கள்” என்று தெரிவித்தார்.
