பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் இந்த பாட்டுக்கும் என்ன சம்பந்தம் – கே.என்.நேரு காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 28) மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையின் போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் பேசுகையில், “கொங்கு தமிழ் நடையிலே.. சிறுவாணி சுவையிலே எங்கள் தளபதியின் அவையிலே எல்லோருக்கும் வணக்கமுங்க” என்று தனது பேச்சைத் தொடங்கினார்.

“உழைப்பால் உயர்ந்த மாவட்டம், உழைக்கும் மக்களின் வியர்வையால் உயர்ந்த மாவட்டம் எங்கள் கோவை மாவட்டம். கல்வி, மருத்துவம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலக அரங்கில் சிறப்புமிக்க இடத்தில் உள்ளது. இதற்கு கோவை மக்களின் உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் காரணம். இந்த மக்களின் பிரதிநிதியாக இந்த மாமன்றத்தில் நிற்பதில் பெருமை அடைகிறேன்.

ADVERTISEMENT

இப்படிப்பட்ட பெருமைமிக்க கோவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், கழக அரசின் நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளித்து, தங்கு தடையற்ற குடிநீர் வசதிகள், உலகத்தரம் வாய்ந்த சாலை வசதிகள், மாநகராட்சி உட்கட்டமைப்புகள், இளைஞர்களின் எதிர்காலத்தை வளர்க்கும் விளையாட்டுத்துறை, இயற்கை வளங்களை பாதுகாக்கும் வனத்துறை, நமது முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துறை என அனைத்து துறைகளுக்கும் நிதியை பேரன்போடு வாரி வழங்கியுள்ள கொடைவள்ளல் தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் இளம் வயதில், 31 ஆண்டுகளுக்கு முன்பே தளபதி மீது கொண்ட ஈர்ப்பு, பற்று காரணமாக ஏற்படுத்திக் கொண்ட பந்தம் அது. அன்றைய நாளில் இளைய தீபம், இளைய தென்றல், இளைய தளபதி என்றெல்லாம் மக்களால் அழைக்கப்பட்ட தளபதியின் ரசிகனாக கிளை மன்றத்தைத் தொடங்கி, நான் பிறந்தது முதல் இன்று வரை வாழும் அதே பகுதியிலேயே மக்களோடு மக்களாகப் பழகி, அன்றாட நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக, அவர்களின் தேவையை அறிந்து, ஒவ்வொரு நாளும் இயன்றதை அவர்களுக்குச் செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டவன்.

ADVERTISEMENT

அதேபோல், அதே பகுதியை உள்ளடக்கிய கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் 92,500 வாக்குகளையும், 21,992 வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கும், வாக்காளர் சொந்தங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி மக்களின் வெற்றி; இந்த வாய்ப்பு தளபதி மீது தமிழக மக்கள் வைத்துள்ள மாபெரும் நம்பிக்கை. அதனால்தான், மக்களிடம் வாங்கிப் பழகியவர்களைத் தள்ளி வைத்துவிட்டு, மக்களுக்குக் கொடுத்துப் பழகியவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் தமிழக மக்கள்” என்றார்.

இதன் தொடர்ச்சியாக, “தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ளப் படம் பிடிப்பார் சுயநலம் உண்டு” என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பாட்டைப் பாடினார். “மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தன் மக்கள் நலம் ஒன்றிணைத்தான் மனதில் கொள்ளுவார்” என்று மக்களுக்காகக் கிள்ளிக் கொடுத்து, தன் மக்களுக்காக அள்ளிக் கொடுத்ததைத்தான் புரட்சித்தலைவர் அன்றே பாடியிருக்கிறார். மேலும், எந்த மக்களுக்காக அவர்கள் வேலை செய்துள்ளார்கள் என்பதைப் புரட்சித்தலைவர் அன்றே சொல்லி இருக்கிறார் என்றார்.

ADVERTISEMENT

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “புரட்சித்தலைவரின் பாடலைத்தான் பாடினாரே தவிர வேறு எந்த நோக்கத்தோடும் பேசவில்லை. புரட்சித்தலைவரின் பாடலை அவருடைய ரசிகராக இருந்து பாடினாரே தவிர வேறொன்றும் இல்லை, அதை குற்றமாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் இந்தப் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை” என்றார்.

இதையடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் நேற்றே சொல்லியிருக்க வேண்டிய பதில் இன்றுதான் ஆரம்பிக்கிறது; பாட்டு பாட ஆரம்பித்துவிட்டார். இதில் சாட்சியாக என்னை வேறு அழைக்கிறார்கள். இதற்கு நாங்கள் பதிலளித்துத்தான் ஆக வேண்டும், இதற்கு நீங்கள் அனுமதித்துத்தான் ஆக வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சம்பத், “கிளைமாக்சை முன்னாடியே சொல்லிவிட்டீர்கள் என்று நேற்று சொன்னார்கள். நான் நகைச்சுவைக்குத்தான் சொல்கிறேன், தப்பாக ஒன்றுமில்லை. எல்லோருக்கும் தெரியும் இந்தப் படத்தின் ஹீரோ யார் என்று; எங்கள் படம் எப்படி ஓடும் என்று உலகத்திற்குத் தெரியும். நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. எப்போதும் சூரியனின் தாக்கத்திலிருந்து தன்னை காத்துக் கொள்ளும் கோவை… இந்த முறையும் விசிலின் வழியாக நிரூபித்துள்ளது என்றார். முதல்வரின் ஆட்சி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நிலைத்திருக்க எனது தொகுதியில் அனைத்துத் துறை திட்டங்களையும் கொண்டுவர உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share