டிஜிட்டல் திண்ணை: 110 மாவட்டங்களை அறிவித்த ஸ்டாலின்.. ‘தலைமை’யில் மாற்றம்? கனிமொழி பற்றி ஸ்டாலினிடம் உதயநிதி- பரபர தகவல்!

Published On:

| By Mathi

Digital Thinnai: Stalin announces 110 districts... Udhayanidhi updates on Kanimozhi

வைஃபை ஆன் செய்ததும், “ஆட்டமும் நாங்கள்தான், மேடையும் நாங்கள்தான்.. ஆடித்து ஆடுங்கடா” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. பாடலாசிரியர் ஆகிட்டீங்க போல..

ப்ரோ.. நடக்கிற நடப்புகள் எல்லாரையும் ‘எல்லாமும்’ ஆக்கிவிடுகிறதே.. திமுகவில மிகப் பெரிய மாற்றங்கள் நடக்கப் போகுதுன்னு முதன் முதலாக நாமதான் சொன்னோம் இல்லையா?

ADVERTISEMENT

அதன்படியே திமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22-ந் தேதி நடந்துச்சு.. அதுல திமுகவோட தற்போதைய மாவட்டங்கள் எண்ணிக்கை 77- அப்படிங்கிறதை 110 ஆக பிரிக்கிறது.. அதாவது 2 தொகுதிகளுக்கு 1 மா.செ.; தேவைப்பட்டால் 3 தொகுதிகளுக்கு 1 மா.செ.; கட்சியின் கிளை கழகம் முதல் மா.செ.க்கள் வரையிலான வயது வரம்பு; எத்தனை முறை பதவி வகிக்க முடியும்னு விரிவாக 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச்சு.

இன்னைக்கு அந்த 110 மாவட்டங்கள் எதுன்னு ஸ்டாலின் அதிரடியாக அறிவிச்சிருக்காரு.. அதாவது திமுகவில அறிவிச்சமாதிரியே மாற்றங்களை ஸ்டாலின் தொடங்கிட்டாரு..

ADVERTISEMENT

இதை பத்தி திமுக சீனியர் தலைவர்களிடம் நாம பேசுனப்ப, “ மறுசீரமைப்பு அப்படிங்கிறது மா.செ.க்களையோ மத்த நிர்வாகிகளையோ மாத்துறதா மட்டும் இல்லை.. கட்சியையே தலைகீழாக மாற்றுகிற சீரமைப்பு நடவடிக்கைகளைத்தான் ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார்.

ஏன்னா திமுகவில 1300-க்கும் மேல ஒன்றிய செயலாளர்கள் இருக்கிறாங்க.. இப்ப ஒன்றிய செயலாளருக்கு அதிகபட்ச வயது வரம்பு 60; 2 முறை மட்டும்தான் பொறுப்பு வகிக்க முடியும்னு தீர்மானம் போட்டிருக்கிறோம்.. இந்த அடிப்படையில பார்த்தா பதவியில இருக்கிற 1300- பேரில் 850-க்கும் மேற்பட்டவங்க ஒ.செ. பதவியை இழப்பாங்க..

ADVERTISEMENT

அதே மாதிரி மா.செ.க்கள் வயது 70; அவங்களும் 3 முறைக்கு மேல பதவி வகிக்க முடியாதுன்னு இன்னொரு தீர்மானம்.. அதனால இருக்கிற 77 மா.செ.க்களில் 25-க்கும் மேற்பட்டவங்க மறுபடியும் மா.செ.ஆக முடியாது.. அதனாலதான் இதனை கட்சியையே புதுசா கட்டமைக்கிற தலைகீழ் மாற்றம்னு நாங்க சொல்றோம்..

இப்ப 110 மாவட்டங்களை ஸ்டாலின் இன்னைக்கு அறிவிச்சிட்டாரு.. 2 தொகுதிகளுக்கு 1 மாவட்டம் அப்படின்னு 94 மாவட்டங்களும்; 3 தொகுதிகளுக்கு 1 மாவட்டம் அப்படிங்கிற கேட்டகிரியில 15 மாவட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கு.. சோழிங்கநல்லூர் மட்டும்தான் தனி மாவட்டம்.

இந்த 110 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள்னு ஒருத்தரை அறிவிச்சுடலாம்னு ஸ்டாலின்கிட்ட உதயநிதி சொல்றாரு.. ஆனா கனிமொழியோ, ”எதுக்கு மாவட்ட பொறுப்பாளர்னு ஒருத்தரை போடனும்? அவரு தனியா இப்பவே அடுத்த மாவட்ட செயலாளர் பதவிக்கு லாபி செய்யவா? அதெல்லாம் மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிக்கக் கூடாது”ன்னு கடுமையாக எதிர்க்கிறாங்க.. இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் விவகாரத்துல ஸ்டாலின் இன்னும் இறுதியான முடிவு எதையும் எடுக்கலை..

கட்சி கட்டமைப்புகளில் மாற்றம்னு வரும் போது ‘தலைமை பதவி’களில் என்ன மாறுதல்? அப்படின்னுதான் கட்சிகாரங்க எல்லாரும் எங்ககிட்ட கேட்கிறாங்க.. திமுகவைப் பொறுத்தவரைக்கும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்திதான் தேர்வு செய்யுறது வழக்கம். அப்படி தேர்தல் நடத்தனும்னா ‘பொதுக்குழுவை’ கூட்டித்தான் நடத்த முடியும்.

பொதுக்குழுவை இப்ப எப்படி கூட்டுவது? ஒரு உதாரணத்துக்கு செப்டம்பர் 15-ந் தேதி திமுகவோட வழக்கமான முப்பெரும் விழா நடத்த இருக்கிறோம்.. அதுக்குள்ள பொதுக்குழுவை கூட்டி தேர்தல் நடத்திட முடியுமா?ன்னு கேட்டீங்கன்னா சாத்தியம் இல்லைன்னுதான் சொல்வோம்.. ‘அவசர பொதுக் குழு’ன்னு கூட்டினாலும் ‘தேர்தல்’ன்னு நடத்தனும் இல்லையா? அதனால உடனே ’தலைமை பதவிகளில்’ மாற்றங்கள் அப்படிங்கிறது சந்தேகம்தான்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

இன்னொரு பக்கம், “திமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி.. 2031-ல் திமுகவின் முதல்வர் வேட்பாளர் கனிமொழி”ன்னு ஏகப்பட்ட வீடியோக்கள் வலம் வந்துகிட்டு இருக்குது.. ”இந்த வீடியோக்களை வெளியிடுறதன் பின்னணியில கனிமொழிதான் இருக்காங்கன்னு” ஸ்டாலின் கிட்ட உதயநிதி சொல்லி இருக்கிறாராம் ப்ரோன்னு ஷேர் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share