மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் வழங்கும் சந்தனக்கட்டைகளைப் பெற்றுக்கொள்ள தர்கா நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா, இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் வழிபடும் புகழ்பெற்ற இடமாகும். இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள சாகுல் ஹமீது ஆண்டவரின் நினைவாக ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு 470-வது கந்தூரி விழா நவம்பர் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஊர்வலமாகக் கொண்டுவரப்படும் சந்தனம் நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்படும்.
சந்தனக்கட்டைகள் வழங்கும் மரபு
நாகூர் தர்காவின் கந்தூரி விழாவுக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் சந்தனக்கட்டைகளை இலவசமாக வழங்கி வருகிறது. இதற்கான அரசாணையை முதல்வரிடம் இருந்து தர்கா நிர்வாகிகள் பெற்றுக்கொள்வது வழக்கம்.
2012-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இடையில் தர்கா நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும், அப்போது நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களிடமே அரசாணை வழங்கப்பட்டது.
2022-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தர்காவின் பரம்பரை நிர்வாகிகள் மீண்டும் பொறுப்பேற்றனர். அதன்பின்னர் தலைமை அறங்காவலர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் முதல்வர் அரசாணையை வழங்கி வந்தார்.
அமைச்சர் ஷாஜகான் மீது குற்றச்சாட்டு
இந்த ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் சந்தனக்கட்டைகளுக்கான அரசாணையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த முறை தர்காவின் வழக்கமான நிர்வாகிகளுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒருவரையும் சேர்த்து அரசாணையை வழங்க முயற்சி நடப்பதாக தர்கா நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
அந்த நபர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர் என்றும், அவரையும் அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் வழக்கமாக தர்கா நிர்வாகிகளிடம் வழங்கப்படும் அரசாணையை, அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்தனக்கட்டைகள் வேண்டாம்..
இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 20-ந் தேதி தர்காவின் 11 நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது வழக்கமான நடைமுறையை மாற்றி, அமைச்சர் ஆதரவாளருக்கும் முக்கியத்துவம் அளித்து சந்தனக்கட்டைகளை வழங்கினால் அதை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவை தலைமைச் செயலாளர், அமைச்சர், சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர் ஆகியோருக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளதாக தர்கா நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதனால் நாளை முதல்வர் விஜய் வழங்கவுள்ள சந்தனக்கட்டைகளுக்கான அரசாணையை தர்கா நிர்வாகிகள் பெற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர் ஷாஜகான் விளக்கம்
இந்த நிலையில், தர்கா நிர்வாகிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் ஷாஜகான் இன்று (அக்டோபர் 21-ந் தேதி) சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாகூரில் அடங்கியுள்ள மகான் சாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் 470-வது சந்தனம் பூசும் விழா நவம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்காக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் 45 கிலோ சந்தனக்கட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டும் நாளை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் சந்தனக்கட்டைகளை வழங்க உள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சி தொடர்பாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நாகூர் ஆண்டவரின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில்தான் தமிழக அரசு செயல்படுகிறது. சந்தனக்கட்டைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதுதான் அரசின் நோக்கம்.
அதற்காக தர்காவின் அறங்காவலர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கூறப்படுவதுபோல தர்காவுக்குச் சம்பந்தமில்லாத நபர்களுக்கோ, அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கோ எந்த அழைப்பும் அனுப்பப்படவில்லை.
நான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நாகூர் ஆண்டவரின் வாரிசுகளான அறங்காவலர்களை மட்டுமே அழைத்து சந்தனக்கட்டைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சம்பந்தமில்லாத நபர்களுக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படாத நிலையில், அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறுவது எப்படி சரியாகும்? அப்படிப்பட்ட எந்த முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இனியும் எடுக்காது.
நாளை சந்தனக்கட்டைகளைப் பெற்றுக்கொள்ள அறங்காவலர்கள் வர இருக்கிறார்கள். அவர்களிடம் கண்ணியமான முறையில் சந்தனக்கட்டைகள் ஒப்படைக்கப்படும். தர்கா நிர்வாகம் தொடர்பாக அறங்காவலர்களின் குடும்பத்துக்குள்ளேயே பல ஆண்டுகளாகப் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. தர்காவை யார் நிர்வகிப்பது, யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக வக்பு வாரியம், வக்பு தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளால்தான் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் தமிழக அரசு அந்தப் பிரச்சனைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. அறங்காவலர்களாக யார் இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே அழைத்து சந்தனக்கட்டைகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.
நாகூர் கந்தூரி விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். இந்த விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். நாகூர் ஆண்டவரின் கண்ணியத்துக்கும் பக்தர்களின் நம்பிக்கைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் விழாவை நடத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
எனவே அறங்காவலர்களும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, தர்காவின் கண்ணியத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.
