அமைச்சர் செங்கோட்டையன் அரசு விழாவில், விராலிமலை விஜயபாஸ்கர் எங்களை எல்லாம் இங்கே அழைத்து வந்து களத்திலே நிற்க வைக்கப்போகிறார்; களத்தில் நிற்பது மட்டுமல்ல வெற்றியும் காணப்போகிறார் என தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்தடுத்து தவெகவில் இணைந்தனர்.
இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரும் தவெக சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ.5 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் முகமது பர்வேஸ் ஆகியோர் வழங்கினர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அருணா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “விராலிமலை விஜயபாஸ்கர் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு எல்லா வித்தையும் தெரியும். எங்களை எல்லாம் இங்கே அழைத்து வந்து களத்திலே நிற்க வைக்கப்போகிறார்; களத்தில் நிற்பது மட்டுமல்ல வெற்றியும் காணப்போகிறார். வெற்றி மட்டுமன்றி, நம் தளபதிக்கு பின்னால் நின்று பணியாற்றப் போகிறார்” என்றார்.
அரசு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், தவெக வேட்பாளர் பெயரை அறிவிக்கும் வகையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இடைத்தேர்தல் முடிந்த நிலையில், மேலும் 15-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வர வாய்ப்புள்ளது என செங்கோட்டையன் பேசிய நிலையில், தவெக குதிரை பேரம் நடத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தலைமைச் செயலக வளாகத்தில் தவெக இணைப்பு விழா நடத்தப்படுவதாக விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், இன்று அரசு நிகழ்ச்சியிலேயே செங்கோட்டையன் வேட்பாளரை அறிவிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
