முதல்வர் விஜய் நான் அண்ணனாக இருக்கிறேன், சீர் கொடுக்கிறேன் என்றெல்லாம் சொல்லி பெண்களை ஏமாற்றியது போதும். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போனார். சிறுமி காணாமல் போய் 10 நாட்கள் கடந்த நிலையிலும், அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த வழக்கில் 3 டி.எஸ்.பி-க்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியைத் தேடும் தீவிரப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது, செஞ்சி சிறுமி காணாமல் போனது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய கனிமொழி, “இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு விதத்தில், இவர்களது கட்சியில் இருப்பவர்கள் பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் போடும் பதிவுகளும், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதாக மாறிவருகின்றன. அதே நேரத்தில், ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் குற்றச் சம்பவங்களைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் இருக்கும் காவல்துறையில், குற்றச் செயல்களைக் குறைப்பதற்கோ அல்லது தடுத்து நிறுத்துவதற்கோ எந்த நடவடிக்கையும் இல்லை. சட்டமன்றத்தில் இதைப் பற்றி கேட்டால் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் வேறு எதையாவது பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போகிறார் முதல்வர்; இதுதான் ஜனநாயகமா? இதற்காகத்தான் மக்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தார்களா?
ஒரு குழந்தை காணாமல் போய் இத்தனை நாட்கள் ஆகிறது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காணாமல் போனது குறித்துப் புகார் அளிக்கச் சென்றால், புகார் அளித்தவர்கள் மீதே அங்கிருக்கும் காவல்துறையினர் குறை சொல்லும் நிலை உள்ளது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், கவலையே படாமல் ஒரு முதல்வர் இங்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்.
மேலும், “‘பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன்’ என்று முதல்வர் விஜய் கூறும் நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “எந்த ஆணும் பெண்ணுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. அண்ணனாகவோ யாராகவோ இருக்க வேண்டாம்; நீங்கள் உங்கள் கடமையைச் செய்தால் போதும். நான் அண்ணனாக இருக்கிறேன், சீர் கொடுக்கிறேன் என்றெல்லாம் சொல்லி பெண்களை ஏமாற்றியது போதும். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; காவல்துறை தனது கடமையைச் செய்யும் அளவிற்கு உங்கள் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள், அதுவே போதும்” என்றார்.
