சமூக வலைத்தளங்களில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தவறாகச் சித்தரித்து வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேயர் பிரியா இன்று (அக்டோபர் 21-ந் தேதி) வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
2022-ம் ஆண்டு நான் மேயராகப் பொறுப்பேற்றேன். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எனக்கு மேயராகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்தார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக மேயர் என்ற முறையிலும், ஒரு பெண் என்ற முறையிலும் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். அன்றைக்கு முதலமைச்சராக இருந்து, இன்றைக்குக் கழகத் தலைவராக இருக்கக்கூடிய எங்கள் தலைவர் அவர்கள், ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும், மாநகராட்சி நிகழ்ச்சியிலும் முதலமைச்சருக்கான இருக்கைக்கு அருகிலேயே எனக்கு இருக்கை அளித்தார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தன் அருகில் என்னை நிற்க வைத்து, ஒரு பெண்ணாகவும் மேயராகவும் என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்ணன் அவர்கள், ஒரு சகோதரிக்கு எந்தெந்த வகையில் எல்லாம் வழிகாட்ட முடியுமோ, அந்த வகையில் எல்லாம் ஓர் அண்ணனாக இருந்து கடந்த 4 ஆண்டுகளாக எனக்குத் துணையாக இருந்தார்கள்.
ஆனால், இன்றைக்கு ஆட்சி அமைத்திருக்கக்கூடிய தவெக அரசு, மே மாதம் முதலே மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை ரத்து செய்திருக்கிறது. சில பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்கவில்லை.
இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் எங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறோம்.
இதையும் தாண்டி, இன்றைக்கு விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் அப்யூசர்ஸ், சமூக வலைத்தளங்களில் என்னைத் தவறாகச் சித்தரித்து வருகிறார்கள்.
Instagram, Facebook, X உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், நான் எந்த மேடையில் தவெக அரசைக் கண்டித்துப் பேசினாலும், அந்த அரசில் நடைபெறும் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்தாலும், அதற்கு மறுநாளே என்னைத் தவறாகச் சித்தரித்து வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோக்களை எடிட் செய்து, எங்கள் கழகத்தில் இருக்கக்கூடியவர்களுடன் என்னைத் தவறாகத் தொடர்புபடுத்தி வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.
இந்த மாதிரியான வீடியோக்கள் பொதுமக்களிடையே பரவும்போது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இன்றைக்கும் மீண்டும் என்னை மிகவும் தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். இதுகுறித்தும் இன்று புகார் அளித்திருக்கிறேன்.
இதற்காவது இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால், ஒரு மேயராகவும் பெண்ணாகவும் நான் பலமுறை இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பேசியும், இன்றுவரை முதலமைச்சர் மௌனம் காத்து வருகிறார்.
இதற்கு எப்போது பதில் கிடைக்கும் என்ற கேள்வியை இந்த இடத்தில் முன்வைக்கிறேன்.
எங்களுடைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, பெண்களின் முன்னேற்றத்துக்கான ஆட்சியை நடத்தினார்கள். கடந்த ஆண்டுகளில் பெண்களின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதன் மூலம் எத்தனையோ பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
ஆனால், இன்றைக்கு ஆட்சி அமைத்திருக்கக்கூடியவர்கள் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.
அவர்களுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ் மூலமாக பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுதான் தவெக அரசின் வியூகமா என்ற கேள்வியை எழுப்புகிறேன்.
அதேபோல, சென்னையில் மாமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஒரு சகோதரி மேடையில் பேசிய கருத்துகள் தொடர்பாக, அதே மேடையிலேயே கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டித்தார்கள். மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு அண்ணன் அவர்களும் கண்டித்தார்கள்.
ஆனால், தவெக நிர்வாகிகள் தவறு செய்தாலோ, தவெக சார்பில் தவறான நடவடிக்கைகள் நடைபெற்றாலோ, அதை முதலமைச்சரோ அல்லது அந்த அரசில் இருக்கக்கூடிய அமைச்சர்களோ கண்டித்ததாக ஏதாவது ஒரு தகவல் இருக்கிறதா?
இன்றைக்கு ஆட்சி அமைத்திருக்கக்கூடியவர்கள் விர்ச்சுவல் அப்யூசர்ஸைப் பயன்படுத்திப் பெண்களை இழிவாகப் பேசுவதும், தவறாகச் சித்தரிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற செயல்கள் அரசியலுக்கு வர விரும்பும் மற்ற பெண்களிடமும் பயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும். பெண்கள் அரசியலுக்கு வருவதற்கே அஞ்சக்கூடிய சூழல் உருவாகிவிடும்.
எனவே, இதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இந்தப் பதிவை வெளியிடுகிறேன்.
இதுகுறித்து நான் தொடர்ந்து பேசி வந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருந்தாலும் எங்களுடைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோரின் முழுமையான ஆதரவு எனக்கு இருக்கிறது. தொடர்ந்து மக்களுக்காக என்னுடைய மக்கள் பணியைச் செய்வேன்.
இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.
