நாகரிகமான அரசியலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் – அண்ணாமலை

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக மக்கள் நாகரிகமான அரசியலை எதிர்பார்க்கிறார்கள். தரம் தாழ்ந்து பேசும் அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பதை திமுகவினர் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ‘We The Leaders’ அமைப்பைச் சேர்ந்த அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நான் எப்போதும் மக்களுக்காகப் பேசுகிறேன். தமிழகத்தில் கல்வித்திறன் மற்றும் கற்றல் திறன் குறைந்து வருகிறது. 10 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது; இதில் ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 9 சதவீதமும், பெண் மாணவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் குறைந்துள்ளது. தமிழகத்தில் 50 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கின்றனர் எனப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த விகிதம் குறைந்து வருகிறது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.

குழந்தைகள் அதிக மொழிகளைக் கற்க விரும்புகின்றனர். மத்திய அரசு சில திட்டங்களைக் கொண்டுவந்தபோதும் தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் அதிக மொழிகளைக் கற்க அனுமதிக்க வேண்டும்; மத்திய கல்வி அமைச்சரிடம் இதுதொடர்பாகக் கோரிக்கை விடுத்தேன். ஆங்கிலத்துடன் பிற மொழிகளையும் கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

தமிழகத்தில் 1960-70களில் இருந்த சூழல் தற்போது இல்லை. உலகத் தரம் வாய்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு வெளிநாட்டு மொழிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதும், மாநில அரசு இந்திய மொழிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதும் தவறு என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “திமுக செய்த தவறுகளைத் தமிழக வெற்றிக் கழக அரசும் செய்து வருகிறது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் மேற்கொள்வதைப் போன்ற நடவடிக்கைகளை இங்கு மேற்கொள்ளக் கூடாது. பத்திரிகையாளர்களை மிரட்டுவது, ஒப்பந்தங்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என்றார்.

ADVERTISEMENT

“திமுக ஆட்சியின்போதே அக்கட்சியைச் சேர்ந்த சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டனர். இப்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சியைச் சேர்ந்த சிலர் சிக்கத் தொடங்கி உள்ளனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் அடைக்கலம் தேடுகின்றனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சியினரைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆதரவு இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சமூக விரோதிகள் ஆளுங்கட்சியைக் கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தாராபுரம் காவல்துறையினர் கோவை மாநகருக்கு வந்து அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றது ஏன்? காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கி காவல் நிலையத்திற்கு வரவழைத்திருக்கலாம். இது பெரிய வழக்கு அல்ல. இந்த விஷயத்தில் காவல்துறை எதை நிரூபிக்க முயற்சிக்கிறது? ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல்துறை மாறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் நேரத்திலேயே கைது செய்திருக்கலாம், தற்போது கைது செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “திமுகவினர் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக மக்கள் நாகரிகமான அரசியலை எதிர்பார்க்கிறார்கள். தரம் தாழ்ந்து பேசும் அரசியலை மக்கள் விரும்பவில்லை. பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதை ஆதரிப்பது அந்தக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். வரம்பு மீறிய பிரச்சாரங்கள் தமிழகத்தில் இனி எடுபடாது. இளைஞர்களும் படித்தவர்களும் அரசியலைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகுகின்றனர்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share