ஐரோப்பா எரிகிறது.. வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள்.. ஆட்சியாளர்களை உலுக்கும் போராட்டங்கள்!

Published On:

| By எஸ்.வி.ராஜதுரை

Europe Protests-Spl Article
  • எஸ்.வி.ராஜதுரை

(முதல் பகுதி: பிரெஞ்சு மாணவர்கள் போராட்டம்: அரசின் கொடூரமும் ஊடகப் பொய்களும்)

அல்பேனியாவிலிருந்து போர்ச்சுகல் வரையிலும், பெல்ஜியத்திலிருந்து இத்தாலி வரையிலும், நவதாராளவாதத்தால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலட்சக்கணக்கானோர் வீதிகளில் இறங்குகின்றனர். ‘லா பிரான்ஸ் இன்சௌமிஸ்’ (கிளர்ச்சியில் பிரான்ஸ்) கட்சியின் ஆதரவாளரும் பிரான்சில் வசிப்பவருமான ஜான் முல்லன், வர்க்கப் போராட்டத்தின் இந்த மறு எழுச்சி குறித்து  பின்வரும் அறிக்கை அளிக்கிறார்.

கலவரம் என்பது செவிமடுக்கப்படாதவர்களின் குரல். மாதங்கள் மற்றும் வருடங்களாக நீடித்த சிக்கன நடவடிக்கைகள், கடுமையான காவல்துறை வன்முறை மற்றும் வெள்ளை இனவெறி ஆகியவற்றுக்குப் பிறகு, ஒரு கிளர்ச்சியின் தீப்பொறி தோன்றியவுடன், அது முற்றிலும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. நிச்சயமாக, அடுத்த வாரம் எந்தக் கட்டடங்களை எரிப்பது என்று திட்டமிடுவதுதான் முதலாளித்துவ எதிர்ப்பாளர்களின் வேலை என்று இதற்கு அர்த்தமல்ல. நமது இளைஞர்கள் பல பத்தாண்டுகளுக்குச் சிறையில் தள்ளப்படுவதை நாங்கள் விரும்பவில்லை! எப்படியிருந்தாலும், அனைத்து மட்டங்களிலும் கூட்டு நடவடிக்கை எவ்வளவு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் திறம்பட்டதாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு குழப்பம் குறைவாகவே இருக்கும். தொழிற்சங்கத் தலைவர்கள் வெகுஜன வேலைநிறுத்தங்களை விரைவாகக் கட்டமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

“இப்போது கவனம் முழுவதும் இந்த வன்முறைகள் மீது இருக்கும்போது, ​​பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்று உங்களால் உண்மையிலேயே பரிந்துரைக்க முடியுமா?” என்று, சனிக்கிழமை போராட்ட நாளுக்கு மறுநாள் காலையில், நாட்டின் 24 மணி நேர செய்தி வானொலியான ‘பிரான்ஸ் இன்ஃபோ’வைச் சேர்ந்த  ஒரு வஞ்சகமான பத்திரிகையாளர், ஒரு இளம் ஆர்வலரிடம் கேட்டார். இதற்கிடையில், பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் மக்கள் தொடர்பு குழுவினர் இரவு முழுவதும் மூளையைக் கசக்கி யோசித்த போதிலும், பிரான்ஸ் முழுவதும் ஏற்பட்ட அமைதியின்மைக்கு தீவிர இடதுசாரியான பிரான்ஸ் இன்சௌமிஸ் (கிளர்ச்சியில் பிரான்ஸ்) கட்சியின் மீது பழி சுமத்துவதைத் தவிர, அவரால் வேறு எந்த நுட்பமான செயலையும் செய்ய முடியவில்லை.

அக்டோபர் 17, சனிக்கிழமையன்று, டஜன் கணக்கான நகரங்களில் 800,000 மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர். இந்த ஆர்ப்பாட்டங்கள், மக்களின் படைப்பாற்றல் மற்றும் கோபத்தின் வெடிப்பால் வகைப்படுத்தப்பட்டன. ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் திரண்டனர்; உயர்நிலைப் பள்ளிக் கிளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், வறுமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு எதிராகப் போராடவும், விரைவான மாற்றத்திற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தவும் அவர்கள் தெருக்களில் வெள்ளமெனப் பாய்ந்தனர். பாசிச எதிர்ப்பு முழக்கங்கள் எங்கும் காணப்பட்டன; பாலஸ்தினியக் கொடிகளும், அடுத்த மே மாத ஜனாதிபதித் தேர்தலில் தீவிர இடதுசாரியான மெலென்ஷோனுக்கு வாக்களிப்பதற்கு ஆதரவான பதாகைகளும் இருந்தன. மார்செய்லேஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஆகிய இரண்டு பாடல்களும் பாடப்பட்டன.

ADVERTISEMENT

காவல்துறை கலவரங்களுக்கு எதிரான எதிர்ப்பு

காவல்துறையினர் போராட்டங்களை விட்டு விலகிய இடங்களில், எதுவும் அடித்து நொறுக்கப்படவில்லை. ஆனால், காவலர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. மக்களை வீதிகளிலிருந்து அச்சுறுத்தி விரட்டுவதற்கான மற்றுமொரு முயற்சியாக, அவர்கள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களையும், கணிசமான எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்களையும், வழிப்போக்கர்களையும் தாக்கிக் காயப்படுத்தினர். பிரான்சின் கிழக்குப் பகுதியில் உள்ள முல்ஹவுஸ் நகரில், ஒரு இளம் பெண் தனது ஒரு கண்ணை இழந்தார். ஊர் ஊராக, எந்தவிதத் தூண்டுதலும் இன்றி தடியடித் தாக்குதல்கள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாரிஸில், ஆர்ப்பாட்டம் தொடங்கும் இடத்தில், அது கூடிக்கொண்டிருந்தபோது, ​​போராட்டக்காரர்கள் மீது பெருமளவில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. ஒரு பேரணிக்கு வந்து சேரும்போது தாக்கப்படுவதை விட, மக்களைக் கலவரத்தில் ஈடுபடத் தூண்டும் விஷயங்கள் மிகக் குறைவே.

ADVERTISEMENT

இதற்குப் பதிலடியாக, பல நகரங்களில் பல ஆயிரம் பேர் கலவரத்தில் ஈடுபட்டனர். பிரான்சின் மையத்தில் உள்ள லிமோஜஸ் நகர மன்றமும், லியோனில் உள்ள ஒரு சுற்றுலா அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டன. பேருந்து நிறுத்தங்களும், சக்கரக் குப்பைத் தொட்டிகளும் எரிக்கப்பட்டன. மேலும், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கடைகள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டன (உதாரணமாக, பூர்தியோவில் 50 கடைகள்). இவற்றில் பல ஆடம்பரக் கடைகளாக இருந்தன, ஆனால் மற்றவை சாதாரண சிறு வணிக நிறுவனங்களாகவும் இருந்தன.

புகைந்துகொண்டிருக்கும் மக்கள் கோபச் சூழலில் இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை. இதற்கு மக்ரோனின் ஒரே குறிப்பிடத்தக்க எதிர்வினை, பெருமளவிலான காவல்துறை வன்முறை மட்டுமே. காவல்துறை குண்டர்களின் செயல்பாடுகள் குறித்த நூற்றுக்கணக்கான காணொளிகள் பரவியுள்ளன; அவற்றில் சில, வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட கடுமையான சிதைப்புகளையும் காட்டுகின்றன. நன்கு பயிற்சி பெற்ற ரோபோகாப்ஸை விட எளிதான இலக்குகளாக இருக்கும் இடங்களை அடித்து நொறுக்குவதன் மூலம் சிலர் பதிலடி கொடுப்பதில் என்ன ஆச்சரியம்?

வேறு சிலர், காவல்துறை வன்முறை மற்றும் மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளால் மிகுந்த சீற்றமடைந்து ஆர்ப்பாட்டங்களுக்கு வந்தனர்; அதனால் நடைபாதைக் கற்களைக் கொண்டு பதிலடி கொடுப்பது சரியென அவர்கள் கருதினர். இன்னும் பலர் எலிசே அரண்மனைக்கு முன்போ அல்லது  மேட்டுக் குடியினருக்கான ஹோட்டல் மேட்டினானுக்கு முன்போ ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினர், ஆனால் காவல்துறை அதிகாரிகள் பல கிலோமீட்டர் தொலைவில் நடக்கும் போராட்டங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தனர்.

இவற்றுடன், மாறுவேடத்தில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காவல் துறையினரையும், கலவரத்தைத் தூண்டும் உளவாளிகளையும் (போலி ஏஜெண்டுகள்) நாம் சேர்த்துக்கொள்ளலாம். பிரான்சில் இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு நம்மிடம் ஏராளமான சான்றுகள் உள்ளன. இருப்பினும் எந்தவொரு குறிப்பிட்ட வழக்கிலும் இதை நிரூபிப்பது பொதுவாக இயலாத காரியம். இவற்றுடன், மருந்தகங்களையும் கணினிக் கடைகளையும் கொள்ளையடிக்க விரும்பும் கூட்டமான சந்தர்ப்பவாதிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், சனிக்கிழமை நடந்த கலவரங்களுக்கு நியாயமான சீற்றத்தின் வெளிப்பாடே முக்கிய விளக்கமாகும்.

ஆனால் இதன் பொருள், அடுத்த வாரம் எந்தப் பொதுக் கட்டடங்கள், அல்லது எந்தக் காபி கடைகள், மருந்தகங்கள் அல்லது தொலைபேசிக் கடைகளைக் கொள்ளையடிப்பது அல்லது எரிப்பது என்பது குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதிகளும் புரட்சியாளர்களும் கவனமாகத் திட்டமிட வேண்டும்  என்பதால். ஒழுங்கமைக்கப்பட்ட, பயனுள்ள நடவடிக்கைகள் மக்களை எந்த அளவிற்கு ஊக்குவிக்கின்றனவோ, அந்த அளவிற்கு நாம் காணும் குழப்பம் குறையும்.

போராட்டக்காரர்களிடையே மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி, பிரான்ஸ் இன்சௌமிஸ் அமைப்பின் தலைவரான ழா-லூக் மெலென்சோன் ஆவார். போராட்ட நாளுக்குப் பிறகு தனது அறிக்கையில், கொடூரமான காவல்துறை வன்முறைக்கும் தெருக்களில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் ஜனாதிபதி மக்ரோனும் அவரது அமைச்சர்களுமே பொறுப்பு என்று மெலென்சோன் வலியுறுத்தினார். “[ஆர்ப்பாட்டங்களில்] காவல்துறை இல்லாத இடங்களில் எல்லாம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது” என்று அவர் கூறினார்.

கலவரம் உதவுமெனத் தனது அமைப்பு நம்பவில்லை என்று அவர் மேலும் கூறினார்: “அதிகாரிகளின் பொறுப்புகள் என்னவாக இருந்தாலும், அவர்களின் திறமையின்மை மற்றும் வன்முறை என்னவாக இருந்தாலும், அரசியல் முக்கியத்துவம் இல்லாத, நமது வழிமுறைகளுக்கு முரணான செயல்களில் பங்கேற்க நாம் மறுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

பசுமைக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மரைன் டோண்டிலியெ போராட்ட நாளுக்கு முன்பே, கடுமையான காவல் நடவடிக்கைகளே வழக்கமாக இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்ததை விமர்சித்தார். மற்ற இடதுசாரி செய்தித் தொடர்பாளர்கள் புளித்துப்போன பழைய வகைக்  கண்டனங்களைத் தெரிவித்தனர். ”ஒருவிதமான பைத்தியக்காரத்தனம் பிரான்ஸை ஆட்கொண்டுள்ளது” என்று லியோனின் பசுமைக் கட்சி மேயரான கிரிகோரி டூசெட் புலம்பினார்.

மேக்ரான் எதையும் வழங்கவில்லை

ஆளும் சக்திகள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தீவிர இடதுசாரி அமைப்பான பிரான்ஸ் இன்சௌமிஸை சேதப்படுத்த நம்புகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட லெகோர்னுவின் பிதற்றல்களுக்குப் பிறகு, தீவிர வலதுசாரி செய்தித் தொடர்பாளர்கள் அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினர். உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், இந்தக் குழப்பத்திற்கு “பல ஆயிரம் தீவிர இடதுசாரி நபர்கள்” காரணம் என்று குற்றம் சாட்டினார். முன்னாள் அமைச்சர் புருனோ ரீடெய்லோ, “அரசின் அசைக்க முடியாத சக்தியே சாத்தியமான ஒரே பதில்” என்று வலியுறுத்தி, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

அவரது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ழான்-பாப்டிஸ்ட் மோரோ, மேக்ரான் பதவி விலக வேண்டும் என்று பரிந்துரைத்தார். மாறாக, ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தைய ஆறு மாதங்களில், ஒரு சமூக எழுச்சிக்கு இது சரியான நேரமல்ல என்று புலம்புவதற்காக, ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை மாலை முக்கிய நேரத் தொலைக்காட்சியைத் தன்வசப்படுத்தினார். “தெருக்களில் இறங்குவதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், அமைதியின்மையை உருவாக்குவதும்தான் அவசரம் என்று இன்று உங்களை நம்பவைக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்தான் உள்ளது: அவர்கள் குடியரசைச் சேதப்படுத்தவும், ஜனாதிபதி விவாதத்தைத் தடுக்கவும் விரும்புகிறார்கள்” என்று அவர் குறை கூறினார். “கலவரத்தை எதனாலும் விளக்க முடியாது, எதனாலும் மன்னிக்க முடியாது” என்று மக்ரோன்  கூறினார். மக்களின் “கவலைகளுக்கு” பதிலளிக்கும் வகையில் “நடவடிக்கை” எடுப்பதாக அவர் உறுதியளித்தார், மேலும் அந்தக் கவலைகளைத் தாம் “புரிந்துகொண்டதாகவும்” கூறினார். வழக்கமான வெற்றுச் சொற்றொடர்கள். அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்திக்குமாறு அவர் தனது பிரதமரைக் கேட்டுக்கொண்டார், ஆனால் உண்மையான சலுகைகள் குறித்த எந்த அறிகுறியும் இல்லாமல். திங்கட்கிழமை காலை ஒரு நெருக்கடி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

நடவடிக்கை தேவை

ஆனால் எங்கள் தரப்பின் நிலை என்ன? மிகப்பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான CGT, ஒரு பத்திரிகை அறிக்கையில், “அமைதியான வெகுஜன இயக்கத்தின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால், இன்று காணப்பட்ட வன்முறை அதிகரிப்புக்கு அரசாங்கமே அரசியல் ரீதியாகப் பொறுப்பு” என்று அறிவித்தது.

பிரதான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைமைகள், கிளர்ச்சியை ஊக்குவிப்பதில் எந்த அவசரமும் காட்டாமல், இரண்டு வாரங்களுக்கு முன்பே நவம்பர் 5 ஆம் தேதி மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு பொது வேலைநிறுத்தம் சாத்தியமானது மற்றும் அவசியமானது என்ற நிலையில் நிலைமை உள்ளது. மஞ்சள் அங்கி அமைப்புகள் நவம்பர் 5 ஆம் தேதி ஒரு பொது வேலைநிறுத்தத்தைக் கோருகின்றன. தொழிற்சங்கத் தலைமைகள் அத்தகைய வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

மஞ்சள் அங்கி இயக்கம் (Mouvement des gilets jaunes,) என்பது பிரான்சில் 17 நவம்பர் 2018 அன்று தொடங்கி 28 ஜூன் 2020 அன்று முடிவடைந்த, தொடர்ச்சியான மக்கள் செல்வாக்குள்ள, வேர்க்கால் மட்டவாராந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் குறிக்கிறது. பார்ப்பவர்களின் (குறிப்பாக காவல் துறையினருக்கு) தெளிவாகத் தெரியும் மஞ்சள் நிற மேலட்டையை போராட்டக்காரர்கள்  அணிந்திருந்தால் மஞ்சள் அங்கி இயக்கம்.

மே 2018-இல் வெளியிடப்பட்ட ஒரு இணையவழி மனு கிட்டத்தட்ட பத்து லட்சம் கையொப்பங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, 17 நவம்பர் அன்று மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. இந்த இயக்கம் ஆரம்பத்தில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள், அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றால் தூண்டப்பட்டது. பிரான்சில் வரிவிதிப்பின் விகிதாசாரமற்ற சுமை உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது குறிப்பாக கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விழுவதாக இந்த இயக்கம் வாதிட்டது. போராட்டக்காரர்கள் எரிபொருள் வரிகளைக் குறைத்தல், செல்வத்தின் மீதான ஒற்றுமை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துதல் மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். 29 நவம்பர் 2018 அன்று, 42 கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்று பகிரங்கப்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது, இது இயக்கத்திற்கான ஒரு நடைமுறை கட்டமைப்பு அடிப்படையாக மாறியது. இந்தக் கோரிக்கைகள் பரந்த அளவிலான தலைப்புகளை உள்ளடக்கியிருந்தன இவை பெரும்பாலும் ஜனநாயகம் மற்றும் சமூக மற்றும் நிதி நீதி தொடர்பானவை. சிலர் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ராஜினாமாவைக் கோரினர். வெவ்வேறு குழுக்களுக்கு (தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிகள் குழுக்கள்) இடையேயான வன்முறை மற்றும் குறிப்பிடத்தக்க சொத்து சேதத்தால் இந்தப் போராட்டங்கள் களங்கப்படுத்தப்பட்டன, இது காவல்துறை அடக்குமுறைக்கு வழிவகுத்தது பிரான்சில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வாராந்திரப் போராட்டங்களில் பங்கேற்பு குறைந்து இறுதியில் முற்றிலும் முடிவுக்கு வந்தது. இருப்பினும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரும் சிறிய அளவிலான போராட்டங்கள் தொடர்ந்தன.

பிரான்ஸில் நடப்பதைப் போன்ற  பிரம்மாண்டமான வெகுமக்கள் போராட்டங்கள் இத்தாலி, பெல்ஜியம், அல்பேனியா ஆகிய நாடுகளுக்கும்  இப்போது பரவியுள்ளது.

கட்டுரையாளர்

Photo of author
எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share