கார்த்திகா கைது: போதைப்பொருள் வழக்கை திசைதிருப்ப தவெக அரசின் நாடகமா? ஸ்டாலின் பகீர் கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?

கடந்த காலங்களில் கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.

ADVERTISEMENT

இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.

ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.

ADVERTISEMENT

நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.

குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.

கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக எக்ஸ் பதிவில், “நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா அவர்களை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கை கையாள்வது வெட்கக்கேடானது.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய “Narcissistic Behaviour”- அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது ஜோசப் விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு.

“ஒருவேளை உங்கள் Convoy செல்லும் போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்-க்கு குறுக்கே வந்தார்கள் என்று வழக்கு பதிந்து கைது செய்வீர்களா?” என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திருமதி கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் 6 பேர் கைது – எதிர்க்கட்சியினர் மீதான தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி கார்த்திகா, அவரது கணவர் உட்பட அக்கட்சியைச் சார்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் செல்லும் வழியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதற்காகத் திருமதி கார்த்திகா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளைக் காவல்துறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.

எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையைத் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திடுவதோடு, திருமதி கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரின் மீதான கைது நடவடிக்கையையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share