இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அன்னிய சக்திகள் சதித் திட்டம் தீட்டி வருவதாகவும், பதவி ஆசை கொண்ட சில அரசியல் தலைவர்களும் அவர்களுக்குத் துணையாக இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஜயதசமி விழா இன்று (அக்டோபர் 20-ந் தேதி) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: மேற்கத்திய நாடுகளில் இருந்து ஒரு புயல் வீசி கொண்டிருக்கிறது. பண்பாடு, மனிதநேய விழுமியங்கள் என அனைத்தையும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சில சக்திகள் செயல்படுகின்றன. வளர்ந்த நாடுகள்கூட இந்த சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு வந்த செய்திகளைப் பாருங்கள். பிரான்ஸில் என்ன நடக்கிறது? அல்பேனியாவில் என்ன நடக்கிறது? வங்கதேசத்தில் என்ன நடந்தது? நேபாளத்தில் என்ன நடந்தது? இவற்றுக்குப் பின்னால் அந்த சக்திகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.
ஆட்சியை மாற்றினால் நிலைமை மாறிவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால், அப்படி இதுவரை நடந்ததில்லை. முன்பும் நடக்கவில்லை. இப்போதும் நடக்கவில்லை.
தங்களது சுயநலத்துக்காகச் செயல்படுபவர்கள்தான் தொடர்ந்து செல்வாக்குடன் இருக்கிறார்கள். தங்களுக்கு வேண்டியவர்களை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக உலகம் முழுவதும் இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.

இந்தியாவிலும் ஆட்சி மாற்ற முயற்சிகள்
இந்தியாவிலும் இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும் உறுதியான கொள்கைகள், வலுவான தலைமைத்துவம் ஆகியவற்றால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்திய இளைஞர்களிடையே தேசப்பற்று அதிகரித்துள்ளது. நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், உலக அளவில் இந்தியாவுக்கு இருக்கும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வும் வளர்ந்துள்ளன. இதனால் அன்னிய சக்திகளின் திட்டங்கள் பலிக்கவில்லை.
இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்தால் உலக நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி, தங்களுக்குச் சாதகமானவர்களை அதிகாரத்தில் அமர்த்தும் இந்தச் சக்திகளின் முயற்சிகள் தோல்வியடைந்துவிடும். அதனால்தான் இந்தியாவைத் தங்களது மிகப்பெரிய எதிரியாக கருதுகின்றன.
இந்தியாவையும், இந்து சமூகத்தையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் எப்படிச் சீர்குலைப்பது என்று திட்டமிட்டு வருகின்றன. இதற்காகக் கூட்டங்களையும் நடத்துகின்றன.
இந்தச் சக்திகளுக்கு ஆதரவாகச் சிலரும் செயல்படுகின்றனர். பதவி ஆசை கொண்ட சில அரசியல் தலைவர்களும் தங்களது சுயநலத்துக்காக இவர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
போராட்டங்கள் எதற்காக நடத்தப்பட வேண்டும்?
நமது நாடு மிகப்பெரியது. இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. அதனால் சமூகத்தில் பிரச்சினைகள் இருப்பது இயல்பானதுதான். அரசு நிர்வாகத்திலும் குறைபாடுகள் இருக்கலாம்.
பிரச்சினைகள் இருக்கும்போது மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவார்கள். ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடைபெறுவதும் இயல்பானதுதான். ஆனால், போராட்டங்கள் எதற்காக நடத்தப்பட வேண்டும்? பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே போராட்டம் நடத்தப்பட வேண்டும்.
போராட்டம் நடத்துபவர்களாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் அரசாக இருந்தாலும், அரசியல் தலைவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
யாருடைய செயல்பாடுகளாலும் மக்களிடையே பகைமை, வெறுப்பு, பிரிவினை ஏற்படக் கூடாது. எவ்வளவு பதற்றமான சூழலாக இருந்தாலும் அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் உட்பட்டே செயல்பட வேண்டும்.
ஓட்டுகளைப் பெற வேண்டும் என்ற ஆசை, மலிவான விளம்பரம், அரசியல் ஆதாயம் ஆகியவற்றுக்காக நிதானத்தையும் நல்லெண்ணத்தையும் இழந்துவிடக் கூடாது.

போராட்டங்களைப் பயன்படுத்தும் சக்திகள்
போராட்டங்களால் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடாது. சமூகத்தில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் பேசி, கலந்தாலோசித்தும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
ஆனால், சில நேரங்களில் போராட்டங்கள் வேறு நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றன. அப்போது அவை அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மாறிவிடுகின்றன. ஒரு தனிநபர், ஒரு குழு அல்லது ஒரு சித்தாந்தத்தின் மீது எதிர்ப்பைத் தூண்டுவதற்கும், மக்களிடையே பகைமையை உருவாக்குவதற்கும் போராட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவைப் பலவீனப்படுத்த நினைக்கும் சக்திகள் இதுபோன்ற சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. மக்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளைப் பெரிதாக்கி, ஒருவருக்கொருவர் பகைமையை உருவாக்குகின்றன.
பல்வேறு பிரச்சினைகளைக் காட்டி, தாங்கள் அநீதி இழைக்கப்பட்டவர்களாக மக்களை உணர வைக்கின்றன. அதன் மூலம் மக்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அரசு அமைப்புகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றன.
மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, அதிருப்தியை அதிகரிப்பது, பிரிவினையைத் தூண்டுவது, நாட்டில் குழப்பத்தையும் அராஜகத்தையும் உருவாக்குவது ஆகியவையே இந்தச் சக்திகளின் செயல்பாடுகளாக இருக்கின்றன.

இந்தியாவைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் சர்வதேச சக்திகளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இந்தியா தங்களுக்குத் தேவை என்று நினைக்கும் இந்த சக்திகள், இந்தியா வலிமையான நாடாக வளர்வதை விரும்புவதில்லை. இந்தியா வளர்ந்தால் தங்களது ஆதிக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுகின்றன. அதனால்தான் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.
இதுபோன்ற முயற்சிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளால் மக்களிடையே பகைமை உருவாக அனுமதிக்கக் கூடாது. நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, தினிக் ஜாக்ரன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சஞ்சய் குப்தா, மும்பைக்கான இஸ்ரேல் துணைத் தூதர் யானிவ் ரெவாக், ராஷ்டிர சேவிகா சமிதி தலைவர் சாந்தக்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
