கார்த்திகா கைது : தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! – சீமான் விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக அரசு பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கார்த்திகா அறிமுகம் செய்யப்பட்டு களம் கண்டார். கடந்த இரண்டாம் தேதி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை முன்பு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா புகைப்படத்துடன் பிளக்ஸ் பேனர் வைத்தனர்.

ADVERTISEMENT

இதற்கு தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பதாகை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

அப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சம்பவத்தை அறிந்தவுடன் அனைவரும் தாராபுரம் காவல் நிலையத்துக்கு சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வேட்பாளர் கார்த்திகா காவல் நிலையத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி அவரை கைது செய்ததை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உடன்பாடு ஏற்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக சாலை மறியலில் ஈடுபட்ட போது போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியை விடுதலை செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த நான்காம் தேதி முதலமைச்சர் விஜய் தாராபுரம் பகுதியில் ரோடு ஷோ வில் ஈடுபட்டிருந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர் உட்பட வீராச்சிமங்கலம் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சாலையை கடந்து சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என கூறியதாக தெரிகிறது. காவல்துறையினர் இந்த வழியில் தமிழக முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் சிறிது நேரம் காத்திருங்கள் என கூறியதால் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு விஜய்க்கு மட்டும் அனுமதி வழங்குகிறீர்கள். நாங்களும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என கூறினர். இதனால் போலீசார் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வரை கைது செய்தனர். மேலும் அவர்களின் பாதுகாப்பு கருதி தாராபுரம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை நேரத்தில் விடுவித்தனர். இச்சம்பவம் அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.

தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?

மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?

நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?

திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!

உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share