“எங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி பேசினால்..” – தாராபுரம் ரோடு ஷோவில் முதல்வர் விஜய் ஆவேசப் பேச்சு!

Published On:

| By Pandeeswari Gurusamy

vijay

தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று (அக்டோபர் 4) ரோடு ஷோவில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இந்த இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் சூழலில், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், தாராபுரத்தில் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று ரோடு ஷோவில் ஈடுபட்டார். தாராபுரம் மாருதி நகரில் இருந்து ரோடு ஷோ வை தொடங்கினார். பிரச்சார வாகனத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுடன் சென்ற விஜய், அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தமிழக முதல்வர் விஜய்யைக் காண வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய விஜய், “தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைப் பார்க்க வருகிற ஆள் நான் கிடையாது. என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும் போய்ப் பார்ப்பேன்; எத்தனை முறை வேண்டுமானாலும் போய்ப் பார்ப்பேன். அதைப் பற்றி உங்களுக்கு என்ன?

ADVERTISEMENT

முந்தைய நாள் மதுராந்தகம் போயிருந்தேன். அங்கு ஒவ்வொரு ஊரிலும் மக்களைப் பார்த்துப் பேசியது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதேபோலத்தான் நம் தாராபுரம் சொந்தங்களையும் இன்றைக்கு நான் பார்க்க வந்திருக்கிறேன்.

ஒரே ஒரு சின்ன உண்மையை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன். இந்த திமுகவுக்கும் ‘மற்றும் பலருக்கும்’ நீங்கள் ஓட்டுப் போட்டீர்கள் என்றால்… பெண்களை அசிங்க அசிங்கமாகப் பேசுபவர்களை நாம் ஆதரிக்கிற மாதிரி ஆகிவிடும் என்று அன்றைக்கே சொன்னேன்.

ADVERTISEMENT

நம் வீட்டுப் பெண்கள், நம் அம்மா, அக்கா, தங்கைகளை அவதூறாகப் பேசுபவர்களை நாம் ஆதரிக்கிற மாதிரி ஆகிவிடும் என்று சொன்னேன். அதை வெறும் ஓட்டிற்காக மட்டும் நான் சொல்லவில்லை.

முந்தைய நாள் ஸ்டாலின் சார் வந்தாரே, என்ன பேசிவிட்டுப் போனார்? அப்பாவும் பிள்ளையும் தாராபுரத்திற்கு வந்து, ‘தயவுசெய்து திமுகவுக்கு ஓட்டுப் போடாதீர்கள்… கோடான கோடி நன்றி’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். பொதுவாக தேர்தலுக்குப் பிறகுதான் ‘கோடான கோடி நன்றி’ என்று சொல்வார்கள்; அதை இப்போதே சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

நம் சகோதரி சத்யபாமாவை என்ன பேச்சு பேசிவிட்டுப் போயிருக்கிறார்? அதைக் காது கொடுத்துக் கேட்க முடியாது. அவர் மட்டுமா இப்படிப் பேசுகிறார்? அவர் வளர்த்து வைத்திருக்கும் எல்லாமும் இப்படித்தான் பேசிவிட்டுப் போகின்றன.

என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், நான் அதைத் தாங்கிக் கொள்கிறேன், பொறுத்துக் கொள்வேன். ஆனால், நம் சகோதரியைப் பற்றியோ, நம் வீட்டில் இருக்கும் அம்மா, அக்கா, தங்கைகளைப் பற்றியோ நீங்கள் பேசினீர்கள் என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். இது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடக்கிறது” என்றார்.

முன்னதாக தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா, தவெகவில் இணைந்த நிலையில் தற்போது இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடுகிறார்.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் இன்று 2-வது முறையாக தாராபுரம் தொகுதிக்கு வந்த விஜய், ரோடு ஷோ மூலம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அக்டோபர் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share