உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப்பதிவு: காரணம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

தாராபுரத்தில் தேர்தல் பிரச்சார வாகனத்தில் சிறுவனைப் பேச வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தாராபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்டோபர் 3-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது, சிறுவன் ஒருவன் பிரச்சார வாகனத்திற்கு அழைத்து வரப்பட்டு அவனிடம் ஒலிபெருக்கி (மைக்) வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அந்தச் சிறுவன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்துப் பேசியதோடு, திமுகவுக்கு வாக்களிக்குமாறும் பிரச்சாரம் செய்துள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, அரசியல் பிரச்சாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், தேர்தல் விதிகளை மீறி சிறுவனைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

காவல்துறை நடவடிக்கை:

இந்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முதல்-அமைச்சரை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், இந்த வழக்குப்பதிவு சம்பவம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share