வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் : உறுதியளித்த அமைச்சர் நிர்மல் குமார்

Published On:

| By Kavi

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோடு அருகேயுள்ள மேட்டு கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (அக்டோபர் 3) நடைபெற்றது.

ADVERTISEMENT

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக வழக்கறிஞர் கரூர் மாரப்பன், கவுரவ தலைவராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன், பொதுச்செயலாளராக அய்யாவு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

தமிழ்நாடு புதுவை பார்கவுன்சில் தலைவர் கதிரவன், துணைத்தலைவர் பாலமுருகன்,
அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினர் அமல்ராஜ் உள்ளிட்ட பார் கவுன்சில் உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய கூட்டமைப்பின் கவுரவ தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ். பிரபாகரன், ”வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், ”அரசியலைத் தாண்டி அனைத்து தரப்பினரும் இங்கு வந்திருக்கிறீர்கள். அதேபோலத்தான் நானும் அரசியலை தாண்டி அரசாங்கம் சார்பாக, நம்முடைய வழக்கறிஞர்களுக்காக, அவர்களுடைய மேம்பாட்டிற்காக இங்கு வந்திருக்கிறேன். 

வழக்கறிஞர்களின் கஷ்டங்களை நான் கொரோனா காலத்தில் இருந்தே ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறேன்.

இந்த புதிய அரசு, வழக்கறிஞர்களின் அனைத்து சிரமங்களையும் சீர்படுத்திக் கொடுக்கும். 

நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு வரும் சிக்கல்களை சரி செய்து கொடுக்கும். 

இதற்கான எல்லாம் முயற்சிகளையும் முதல் நாளில் இருந்து எடுத்து வருகிறோம். 

இங்கு பார் கவுன்சில் தலைவர் மற்றும் கூட்டமைப்பு தலைவர்கள் பேசும் போது, வழக்கறிஞர்களின் பாதுகாப்புச் சட்டத்தை பற்றி பேசினார்கள். 

அதற்கு முன்பு நானும் இது தொடர்பான தகவல்களை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன். உங்களுடைய பரிந்துரைகளையும் கொடுங்கள். 

முதலமைச்சரிடம் ஒப்புதலை பெற்று, நடவடிக்கை எடுக்கப்படும். 

வழக்கறிஞர்களுக்கு கண்டிப்பாக பாதுகாப்பு சட்டம் தேவை. 

வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ காப்பீடு கிடைக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 

கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துதர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share