சென்னையில் இன்று (அக்டோபர் 3) நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தவெகவை சேர்ந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, மரிய வில்சன் பங்கேற்றனர். இதனையடுத்து இந்தியா கூட்டணியில் தவெக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், “மோடி – அமித் ஷா தலைமையிலான பாஜக – ஆர்.எஸ்.எஸ் அரசு, தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சியைச் சிதைத்து ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதையும், SIR பெயரிலான வாக்குத் திருட்டையும் கண்டித்து, மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் களப் பணிகள் குறித்து ஆலோசிக்க, இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது” என தெரிவித்திருந்தார்.
மேலும், “இக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ தேசியக் குழு-டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இன்று “புதிய தோழர்களும் “ நம்முடன் கைகோர்க்க, ‘இந்தியா’ கூட்டணி மேலும் பெரும் மக்கள் சக்தியாகப் புதிய எழுச்சி பெறும்” எனவும் மாணிக்கம் தாகூர் தமது அறிக்கையில் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், பெ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்றைய இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா, நிதி அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பங்கேற்றுள்ளது.
இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் அக்டோபர் 15-ந் தேதி போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
